கூடங்குளம் அணுஉலையில் 5 மற்றும் 6வது உலைகளுக்கான கட்டுமானத்தை மத்திய அரசு தொடங்கி இருப்பது பாஜக அரசுக்கு தமிழர்கள் மீதும், அவர்களின் வாழ்வாதாரத்தின் மீதும் சிறிதும் அக்கரையோ, கவலையோ இல்லை என்பதையே காட்டுகிறது என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக, இன்று (பிப்ரவரி 23) அவர் வெளியிட்ட அறிக்கையில், ஜப்பானின் புகுஷிமா அணுஉலையின் விபத்திற்குப் பிறகு, உலக நாடுகளால் கைவிடப்பட்ட அணுஉலை எனும் ஆபத்து மிகுந்த அரக்கண் திட்டத்தை, மத்திய பாஜக அரசு தமிழர்களின் தொடர் எதிர்ப்பையும் மீறி, செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் தொடங்கியது என்று கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் கூடங்குளம் மக்கள் நடத்திய பலவிதமான போராட்டங்களை சிறிதும் மதிக்காமல் அங்கும் அணுஉலை 1 மற்றும் 2ஆம் அலகுகளை அமைத்து, அதைத் தொடர்ந்து 3 மற்றும் 4ஆம் அலகுகளுக்கான பணிகளையும் தொடங்கப்பட்டது என்றும் எம்.எச்.ஜவாஹிருல்லா கடந்த கால நிகழ்வுகளை நினைவூட்டியுள்ளார்.
இதில் முதல் இரண்டு உலைகளும் கடந்த ஏழு ஆண்டுகளாக சரிவர இயங்காமல் நூற்றுக்கும் மேற்பட்ட முறை பழுதடைந்ததாக குறிப்பிட்டுள்ள அவர், இந்த இரண்டு உலைகளுக்கான அணுக்கழிவுகளை மேலாண்மை செய்ய கட்டுமானங்களையும் மத்திய அரசு செய்யவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அம்பானி, அதானிக்கான ‘ மத்திய அரசின் நாம் இருவர், நமக்கு இருவர் திட்டம் ’ – ராகுல் காந்தி
“இதுதவிர அணுக்கழிவுகளைக் கையாள அல்லது மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பமும் இந்தியாவிடம் கிடையாது. இந்த அணுக்கழிவுகளை நிரந்தரமாகப் புதைக்க, ஆழ்நில அணுக்கழிவு மையத்தை எங்கு அமைப்பது என்றும் மத்திய அரசோ தேசிய அணுமின் கழகமோ இதுவரை முடிவு செய்யவில்லை.” என்று எம்.எச்.ஜவாஹிருல்லா அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“இந்நிலையில், தற்போது கூடங்குளத்தில் 5 மற்றும் 6ஆம் உலைகளுக்கான கட்டுமான ஒப்பந்தத்தை தனியார் நிறுவனம் ஒன்றிற்கு வழங்கியுள்ள மத்திய அரசு, அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அணுவுலையை எதிர்ப்பதில், தம் வாழ்வாதாரம், எதிர்காலம் பற்றி கவலை கொள்வதில் குஜராத் மக்களுக்கும் கூடங்குளம் இடிந்தகரை மக்களுக்கும் ஒரே மாதிரியான அச்சமும் உணர்வும்தானே மேலோங்கியிருக்கும்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
’ அதானி குழுமத்துக்காக சுற்றுச்சூழலை பலி கொடுக்கும் அதிமுக – பாஜக அரசுகள்’ : ஸ்டாலின் விமர்சனம்
மேலும், குஜராத் முதல்வர் தன் மாநில மக்களின் அச்சத்திற்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்தால் பாராட்டுவதும் அதே கோரிக்கையை தமிழ்நாட்டு மக்கள் முன் வைத்தால் தேசத்துரோக குற்றச்சாட்டை அவர்கள் மீது ஏவுவதும் என்ன மாதிரியான நிலைப்பாடு என்று பிரதமரின் செயற்பாட்டை முன்வைத்து எம்.எச்.ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் 6 அலகுகள் கொண்ட அணுஉலை அமைக்க இருந்த திட்டத்தை குஜராத் பாஜக முதல்வர் விஜய் ரூபானியின் எதிர்ப்பால் கைவிட்ட மத்திய பாஜக அரசு, தமிழர்களின் எதிர்ப்புக் குரலுக்கு மதிப்பளிக்காமல் மேலும் மேலும் அலகுகளின் எண்ணிக்கையை கூடங்குளத்தில் அதிகரிப்பது, தென்னிந்தியாவையே துயரத்தில் ஆழ்த்திவிடும் என்று இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டிய எம்.எச்.ஜவாஹிருல்லா, இந்த விரிவாக்கத் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும், தமிழக அரசு இவ்விரிவாக்கத் திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.