Aran Sei

‘ஓஎன்ஜிசியால் பாதிப்பில்லை என கூறுவது எதன் அடிப்படையில்?’ – திருமாவளவனுக்கு மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கேள்வி

திருமாவளவன் அவர்கள் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படவில்லை என கூறுவது எந்த ஆய்வுகளின் அடிப்படையிலானது என்று மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.செயராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘ஓஎன்ஜிசி சிறப்பாக செயல்பட ஒத்துழைப்பு’ என்ற தலைப்புடன் தி இந்து- தமிழ் ஏட்டில் ஏப்ரல் 21-ஆம் தேதி இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

காரைக்கால் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலச்சங்கத்தின் சார்பில் 20 ஏப்ரல் அன்று காரைக்காலில் நடைபெற்ற நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி அவர்கள் பேசிய உரை பேரிடியாக அமைந்துள்ளது.

இவ்விழாவில், “ஓஎன்ஜிசி சிறப்பாக செயல்பட்டு வருகிறது” என்றும், “ஓஎன்ஜிசி நிறுவனத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படவில்லை” என்றும், “அறிவியல்பூர்வமான வகையில் எதிர் கருத்துகளை வைக்கவில்லை” என்றும், “மக்கள் நலனுக்காகவே இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது” என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்ட விளைவுகள் குறித்து ஆய்வு செய்ய வல்லுநர் குழு – தமிழ்நாடு அரசு உத்தரவு

ஓஎன்ஜிசியின் 60 எண்ணெய் – எரிவாயுக் கிணறுகள் தொழில்நுட்பக் காரணங்கள் காரணமாக இயக்கப்படாமல் உள்ளன என்றும், அந்த கிணறுகளை செயல்பட வைக்க உதவுமாறும் ஒன்ஜிசி நிறுவனம் அவரிடம் கோரிக்கை வைத்தது. மக்களின், தொழிலாளர்களின் நலன் கருதி அந்த 60 கிணறுகளையும் மீண்டும் செயல்பட வைக்க, மக்களிடம் எடுத்துக்கூறி ஒத்துழைப்பு அளிக்க வைக்க டாக்டர் திருமாவளவன் உறுதியளித்துள்ளார். இது அதிர்ச்சி அளிக்கிறது.

ஓஎன்ஜிசி எண்ணெய் – எரிவாயு எடுத்ததால் காவிரிப்படுகை பெரிய அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டத்திலேயே காவிரிப்படுகை சில திட்டங்களால் பெரிய அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆகவே இங்கு நடைமுறைப்படுத்தக் கூடாத திட்டங்களில் ஷேல் எடுப்பு, ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுப்பு ஆகிய திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. எந்த எண்ணெய் – எரிவாயுக் கிணறும் ஹைட்ரோகார்பன் கிணறுதான்.

பழைய எண்ணெய் வயல்களில் புதிய கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசி தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

பழைய கிணறுகளில் உற்பத்தித் தூண்டலுக்கு அபரிமிதமான இரசாயன கலவையை உள்ளே செலுத்துவதை புதிய தொழில்நுட்பமாகப் பயன்படுத்துகிறது.

இதுவரையிலும் ஓஎன்ஜிசி-யின் செயல்பாடுகளால் படுகையின் பல பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

வயலில் பரவிய கச்சா எண்ணெய் – ஓ.என்.ஜி.சி குழாய் வெடிப்பு

சமீபத்தில் தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் அவர்களின் தலைமையிலான 7 பேர் கொண்ட உயர்மட்ட ஆய்வுக்குழு எண்ணெய் – எரிவாயு எடுப்பால் காவிரிப்படுகை பாதிக்கப்பட்டுள்ளது உண்மைதான் என்றும், எண்ணெய்க் கிணறுக் கழிவுகள் ஓஎன்ஜிசியால்  முறையாகக் கையாளப்படவில்லை என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பல பகுதிகளில் நிலத்தடி தண்ணீர் கச்சா எண்ணெய் கலந்து பாழாகி விட்டது. மக்கள் வெகு தூரத்திற்குச் சென்று குடிநீர் எடுத்துக்கொண்டு வருகின்றனர். சில பகுதிகளில் குடும்பத்திற்கு 20 லிட்டர் சுத்தம் செய்யப்பட்ட தண்ணீர் வழங்க ஓஎன்ஜிசி ஏற்பாடு செய்துள்ளது.

ஆழ்குழாய் கிணற்றில் இருந்து வயலுக்கு பாய்ச்சப்பட்ட தண்ணீரில் எண்ணெய் கலந்திருப்பதை ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் பகுதியில் அதிகாரிகள் நேரில் கண்டு ஆய்வு செய்தனர்.

கதிராமங்கலத்தில் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீரில் கச்சா எண்ணெய் கலந்து வருகிறது. இதை ஆய்வு குழு நேரடியாகக் கண்டு சோதனைக்கு எடுத்துச் சென்றது. குத்தாலம் அருகே ஷேத்திரபால புரத்தில் நிலத்தடி தண்ணீரை தொட்டியில் தேக்கி ஊராட்சி நிர்வாகம் வழங்கிய நிலையில், அத்தண்ணீரைக் குடித்தவர்கள் மயக்கமுற்று மருத்துவமனையில் கடந்த மாதம் சேர்க்கப்பட்டனர்.

பல இடங்களில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு வயல்கள் எல்லாம் பாழாகி இருக்கின்றன.

காவிரிப் படுகையில் புதிய ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கக் கூடாது – தமிழ்நாடு அரசுக்கு வேல்முருகன் வலியுறுத்தல்

ஓஎன்ஜிசி -யின் பல கிணறுகளுக்கு செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட்ட அனுமதி காலம் முடிந்துவிட்டது. அவற்றை மூடாமல் ஓஎன்ஜிசி வைத்திருக்கிறது. பல கிணறுகள் அனுமதியே இல்லாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவிக்கப்பட்ட பிறகு படிப்படியாக இந்த கிணறுகள் அனைத்தும் மூடப்பட வேண்டும். ஆனால் ஓஎன்ஜிசி பழைய வளாகங்களில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உற்பத்தியை பெருக்க படுகையை அழிப்பதை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், மறைமுகமாகப் பணிகளைச் செய்ய முயற்சி செய்கிறது.

மேலைநாடுகளில், ஹைட்ரோகார்பன், மீத்தேன், எண்ணெய் -எரிவாயு எடுத்தால் அந்தப் பகுதியே நாசம் ஆகிவிடுகிறது என்று கருதி பலநாடுகளில் இத்திட்டம் 2030-க்குள் கைவிடப்படுகிறது. பல நாடுகள் இத்திட்டத்தை முன்னமே கைவிட்டு விட்டன.

இந்திய அரசு தெளிவாக ஒன்றை கொள்கை முடிவாக அறிவித்துவிட்டது. 2018 ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கு பிறகு எந்த கிணறு அமைத்தாலும் அது ஹைட்ரோகார்பன் கிணறுதான் என்று அறிவித்துவிட்டது. ஹைட்ராலிக் பிராக்சரிங் என்னும் நீரியல் விரிசல் முறைதான் பின்பற்றப்படும் என்று தெளிவாக்கப்பட்டுள்ளது. இப்போதும்கூட காவிரிப்படுகையில் ஒரு  கிணறு அமைக்கப்படுமானால், அது ஹைட்ரோகார்பன் கிணறுதான்.

பழைய கிணறுகளையும்  புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் ஹைட்ரோகார்பன் கிணறுகளாக ஓஎன்ஜிசி மாற்றுகிறது.

‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் கெமிக்கல் மண்டலமா?’- காவிரி டெல்டாவை சிதைக்கக் கூடாதென ராமதாஸ் வலியுறுத்தல்

இந்தகேள்விக்கும்பதில்_தேடுங்கள்! 2015இல் 30 புதிய கிணறுகள் அமைக்க இந்திய சுற்றுச்சூழல் துறையிடம் ஓஎன்ஜிசி அனுமதி பெற்றது. அன்றைய அதிமுக அரசின் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் எந்த கிணறு அமைக்கவும் நாங்கள் அனுமதி அளிக்கவில்லை என்று சட்டமன்றத்தில் அறிவித்துவிட்டார். அடுத்து வந்த திமுக அரசும் ஒரு காலத்திலும் நாங்கள் எண்ணெய் – எரிவாயு கிணறு அமைக்க அனுமதி கொடுக்க மாட்டோம் என்று அறிவித்து விட்டது.

இந்நிலையில் 2015க்கு பிறகு காவிரிப்படுகையில் 21 கிணறுகளை அமைத்து விட்டதாகவும், இன்னமும் அமைக்கப்பட வேண்டிய 9 கிணறுகளை அமைக்க காலநீட்டிப்பு வேண்டுமென்றும் ஓஎன்ஜிசி நிறுவனம் இந்திய சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் விண்ணப்பித்து இருக்கிறது. அதுவும் காலநீட்டிப்புக்கு பரிந்துரை செய்துள்ளது. அப்படி என்றால், தமிழ்நாட்டில் அதிமுக அரசும், திமுக அரசும் அனுமதி கொடுக்காத நிலையில், ஓஎன்ஜிசி 21 கிணறுகளை எப்படி அமைத்தது?

தமிழக அரசையும், தமிழக மக்களையும், சட்டத்தையும் ஏமாற்றக் கூடிய வகையில் ஓஎன்ஜிசி செயல்பட்டு வரும் நிலையில்,  முன்னமே நாம் பாதிப்புகளை உணர்ந்து தொடர்ந்து போராடி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்தைப் பெற்றிருக்கும் நிலையில், டாக்டர் தொல்.திருமாவளவன் அவர்கள் “ஓஎன்ஜிசி நிறுவனத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படவில்லை” என்று கூறுவது எந்த ஆய்வுகளின் அடிப்படையிலானது?

ஓஎன்ஜிசி சிறப்பாக செயல்பட ஒத்துழைப்புஅளிப்பதாகக் கூறுவது எவ்வகையில் நியாயமானது? ஓஎன்ஜிசி சிறப்பாக செயல்படுவதாகவும், நிறுவனத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படவில்லை என்று டாக்டர் திருமாவளவன் கூறுவது  எதிர்காலத்தில் எவ்வளவு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்?

எண்ணெய் -எரிவாயு எடுப்பால் காவிரிப்படுகையின் பாதிப்புகள் நிரூபிக்கப்பட்டு விட்டன. எண்ணெய் எடுப்பதால் ஏற்பட்ட பாதிப்புகளை மறைப்பதற்காகவும், எதிர்ப்பை குறைப்பதற்காகவும், பிரமுகர்களின் ஆதரவைப் பெறுவதற்காகவும் நலத்திட்டங்களை ஓஎன்ஜிசி வழங்குகிறது. தாராளமாக நலத்திட்டங்களை வழங்கியதாலேயே ஓஎன்ஜிசி நல்ல நிறுவனமாகவும், ஆபத்தற்ற நிறுவனமாகவும் மாறிவிட முடியாது.

ஆகவே, காவிரிப்படுகை மற்றும் பிற மாவட்டங்களிலும் எண்ணெய் – எரிவாயு எடுப்பு என்பது இதோடு நிறுத்திக் கொள்ளப்பட வேண்டும். அதில் வேலைபார்க்கும் பணியாளர்களுக்கு வேறு பகுதிகளிலோ அல்லது வேறு துறைகளிலோ வேலை வாய்ப்புகளை வழங்கலாம். பணியாளர்களுக்கு இங்கே வேலை வாய்ப்பை தர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக,  எண்ணெய் – எரிவாயுத் திட்டங்களை தொடர அனுமதித்து, ஒட்டுமொத்தப் படுகையையும் ஒழித்துக் கட்டுவது என்பது ஏற்க இயலாது.

பொறுப்பான தலைவர்களான டாக்டர் திருமாவளவன் எம்.பி போன்றவர்கள் ஆழ்ந்து சிந்தித்து, பிரச்சினையினுடைய முழு வடிவத்தையும் உணர்ந்து செய்திகளைப் பேசுவது,  மக்களின் வாழ்வாதாரங்களையும், சுற்றுச் சூழலையும் பாதுகாக்க உதவும். ஆகவே அவருடைய ஓ.என்.ஜி.சி. பற்றிய பார்வையைத் திருத்திக் கொள்ள வேண்டுகிறோம்.

‘ஓஎன்ஜிசியால் பாதிப்பில்லை என கூறுவது எதன் அடிப்படையில்?’ – திருமாவளவனுக்கு மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கேள்வி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்