Aran Sei

காஷ்மீர் : `நாங்கள் மீண்டும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளோம்’ – மெஹ்பூபா முப்தி

க்கள் ஜனநாயகக் கட்சி தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான மெஹ்பூபா முப்தி, தானும் தனது மகளும் சட்டவிரோதமாக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளோம் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

நேற்று முன் தினம், மக்கள் ஜனநாயகக் கட்சியின் இளைஞரணித் தலைவர் வாஹித் பர்ராவை பயங்கரவாத வழக்கில் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டி, தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்தது.

இந்நிலையில், மெஹ்பூபா முப்தி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தான் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார். அதில், “நான் மீண்டும் சட்டவிரோதமாக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளேன். இரண்டு நாட்களாகப் புல்வாமாவில் உள்ள  வாஹித் பர்ராவின் குடும்பத்தினரைச் சந்திக்க காஷ்மீர் நிர்வாகம் மறுத்து வருகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

பாஜக அமைச்சர்களும் அவர்களது பொம்மைகளும் காஷ்மீரின் எல்லா மூலைகளுக்கும் போய்ச் சுற்றிவர அனுமதிக்கப்படுகின்றார்கள் என்றும் என் விஷயத்தில் மட்டும்தான் அவர்களுக்குப் பாதுகாப்பு பிரச்சனை வருகிறது என்றும் விமர்சித்துள்ளார்.

அந்த ட்வீட்டில், அவரது வீட்டு வாசலில் ராணுவ வாகனங்கள் நிற்கும் புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

மற்றொரு ட்வீட்டில், “அவர்களின் கொடுமைக்கு எல்லையே கிடையாது. வாஹித் ஆதாரமற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினரை ஆறுதல்படுத்த கூட எனக்கு அனுமதி இல்லை. எனது மகள் இல்டிஜா கூட வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். காரணம், அவரும் வாஹித்தின் குடும்பத்தினரைச் சந்திக்க விரும்பினார்.” என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து, தேசிய மாநாட்டுக் கட்சியின் துணை தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், ”எங்கள் வாசல்களுக்கு முன்னால் ஒரு டிரக்கை நிறுத்துவது, இப்போது இந்த நிர்வாகத்தின் சாதாரண நடைமுறை ஆகிவிட்டது. சமீபத்தில் என் தந்தை பிரார்த்தனை செய்யவதை இப்படித்தான்  தடுத்தார்கள். தனிமனிதச் சுதந்திரம் என்பது நீதியின் தலையீடு இல்லாமல், அரசால் விருப்பப்படி கொடுக்கவும், திரும்பப் பெறவும் கூடியதாகப் பார்க்கப்படுகிறது.” என்று விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து, மெஹ்பூபா முப்தியின் மகளான இல்டிஜா முப்தி தி இந்து விடம், “எங்கள் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்த, எங்களுக்கு உரிமை இல்லாத போது, அதை நீங்கள் ஜனநாயகம் என்று சொல்வீர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் மாவட்ட மேம்பாட்டு கவுன்சிலுக்கு (பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்) நாளை முதல் டிசம்பர் 24 வரை 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் : `நாங்கள் மீண்டும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளோம்’ – மெஹ்பூபா முப்தி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்