ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, கடந்த மூன்று ஆண்டுகளில் தனக்கு 12 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மற்றும் 40 லட்சம் ரூபாய் பணம் அளித்துள்ளதாக பார்க் (Broadcast Audience Research Council) அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பார்தோ தாஸ்குப்தா, தெரிவித்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
டிஆர்பி முறைகேடு வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக, மும்பை காவல்துறைக்கு தனது கைப்பட எழுதிய வாக்குமூலத்தில் தாஸ் குப்தா இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்க் அமைப்பின் அறிக்கைகள் தொடர்பான தடயவியல் விபரங்கள், அர்னாப் கோஸ்வாமி – பார்தோ தாஸ்குப்தா இடையேயான வாட்சப் உரையாடல்கள், முன்னாள் பார்க் ஊழியர்கள் மற்றும் கேபிள் ஆப்பரேட்டர்களின் வாக்குமூலத்தை வைத்து மும்பை காவல்துறை, ஜனவரி 11 ஆம் தேதி இந்த வழக்கில் 3600 பக்க கூடுதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது.
2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்டிருந்த முதல் குற்றப்பத்திரிக்கையில், 12 நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்த நிலையில், இரண்டாவதாக தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் பார்தோ தாஸ்குப்தா, பார்க் அமைப்பின் முன்னாள் திட்ட அதிகாரி (COO) ரோமில் ராம்காரியா மற்றும் ரிபப்ளிக் மீடியா குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி விகாஸ் கஞ்சந்தானி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இரண்டாவது குற்றப்பத்திரிக்கையின் படி தாஸ்குப்தாவின் வாக்குமூலம், குற்ற புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் டிசம்பர் 27, 2020 அன்று, இரண்டு சாட்சியங்கள் முன்னிலையில் பதியப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கும்பல்நீதி ஆதிக்கம் – கண்ணை மூடிக் கொள்ளும் இந்தியர்கள்
”எனக்கு 2004 ஆம் ஆண்டிலிருந்தே அர்னாப் கோஸ்வாமியை தெரியும். நாங்கள் இருவரும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் இணைந்து பணியாற்றியுள்ளோம். …ரிபப்ளிக் தொலைக்காட்சி தொடங்கும் முன்னரே நாங்க இது பற்றி விவாத்தித்துள்ளோம். எனக்கு டிஆர்பி முறை எப்படி வேலை செய்கிறது என நன்றாக தெரியும் என்பதை அவரும் அறிந்து வைத்திருந்ததால், அவரின் தொலைக்காட்சிக்கு உதவும்படி மறைமுகமாக கோரினார். அதற்காக அவர் எதிர்காலத்தில் எனக்கு உதவுவதாகவும் மறைமுகமாக தெரிவித்தார்” என தாஸ்குப்தா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார் என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், “நானும் என் குழுவினரும் இணைந்து ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு சாதகமாக டிஆர்பி ரேட்டிங்குகளை முறைகேடாக திருத்தி வந்தோம். இந்தப் பணியை 2017 முதல் 2019 ஆம் ஆண்டு வரை மேற்கொண்டோம். இதற்காக 2017 ஆம் ஆண்டு லோயர் பரேல் பகுதியில் உள்ள செயிண்ட் ரெஜிஸ் ஹோட்டலில் சந்தித்து எனது பிரான்ஸ் மற்றும் சுவட்சர்லாந்து பயணத்திற்காக 6 ஆயிரம் டாலர்களையும், 2019 ஆம் ஆண்டும் அதே ஹோட்டலில் சந்தித்து தலா 6 ஆயிரம் டாலர்களை எனது ஸ்வீடன் மற்றும் டென்மார்க் பயணங்களுக்கு அளித்தார். அதேபோல ஐடிசி பரேல் ஹோட்டலில் 2017 ஆம் ஆண்டு, ரூபாய் 20 லட்சமும், 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு தலா 10 லட்சம் ரூபாயும் அளித்தார்” என்றும் தாஸ்குப்தா தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1.5 லட்சம் டிராக்டர்களுடன் விவசாயிகளின் படை தயார் – அணிவகுப்பால் அதிரப்போகும் டெல்லி
”நாங்கள் இந்தக் குற்றச்சாட்டை முற்றிலும் மறுக்கிறோம். இந்த வாக்குமூலம் வற்புறுத்தி பெறப்பட்டது. இதற்கு நீதிமன்றத்தில் எந்த மதிப்பும் இல்லை” என தாஸ்குப்தாவின் வழக்கறிஞர் அர்ஜூன் சிங் இந்தியன் எக்ஸ்பிரஸ் –யிடம் தெரிவித்துள்ளார்.
தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பதோடு தான் குறிவைக்கப்பட்டு இருப்பதாக அர்னாப் கோஸ்வாமி தொடர்ந்து கூறி வரும் நிலையில், இது தொடர்பாக அவரது தரப்பு தகவலை பெற அர்னாப் கோஸ்வாமியின் வழக்கறிஞர்களை தொடர்பு கொண்ட போது அவர்கள் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.