Aran Sei

” குரலற்றவர்களின் குரலாக, உண்மைக்காக போராடுகிறேன் ” – பிரசாந்த் கனோஜியா

பிரசாந்த் கனோஜியா - Image Credit : www.newsplatform.in

த்தர பிரதேச போலீசால் இரண்டு முறை கைது செய்யப்பட்டு உச்சநீதிமன்றத்தாலும் உயர்நீதிமன்றத்தாலும் பிணை வழங்கப்பட்டுள்ள டெல்லியைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரசாந்த் கனோஜியா, “ஜனநாயகத்துக்கான மனிதர்கள்” என்ற தொடரில் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

தி வயர் ஹிந்தியில் வேலை செய்து வந்த பிரசாந்த் கனோஜியா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக ட்வீட் செய்ததற்காக சென்ற ஆண்டு கைது செய்யப்பட்டார். 2019 ஜூன் மாதம் உச்சநீதிமன்றம் அவரை விடுவித்தது.

அயோத்தி ராமர் கோயில் தொடர்பான ஒரு மாற்றியமைக்கப்பட்ட படத்தை வெளியிட்டதாக குற்றம் சாட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் பிரசாந்த் கனோஜியாவை கைது செய்தது, உத்தர பிரதேச போலீஸ். இதற்கு எதிரான மனுவை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் அவருக்கு கடந்த அக்டோபர் மாதம் பிணை வழங்கியது.

பிரசாந்த் கனோஜியா தன்னைப் பற்றி பகிர்ந்துள்ள பதிவின் மொழியாக்கம்.

“நான் மும்பை குர்லாவில் உள்ள ஒரு சேரியில் பிறந்தேன். நாங்கள் ஒரு சிறிய, 80 சதுர அடி வீட்டில் வாழ்ந்தோம். நான்கு அறைகளைக் கொண்ட ஒரு சால்-ல் நடத்தப்பட்ட ஒரு மோசமான பள்ளியில் படித்தேன். அவ்வளவு வறுமைக்கும் பல சவால்களுக்கும் மத்தியில் நான் ஊடகத் துறையில் பட்டப் படிப்பு முடித்தேன்.

மும்பையின் பெரும்பாலான இளைஞர்கள் தமது படிப்பை முடித்ததும் பணம் சம்பாதிக்கவும், தினசரி வாழ்க்கையை ஓட்டவும் முயற்சிகளில் இறங்கி விடுகின்றனர். எனக்கு 16 வயதாக இருக்கும் போது, சேரிகளை இடிக்கும் ஒரு நடவடிக்கையை நான் பார்த்தேன். அப்போதைய அரசாங்கம் மும்பையை ஷாங்காய் [சீன நகரம்] ஆக மாற்றும் விருப்பத்தால் பீடிக்கப்பட்டிருந்தது. ஏழைகளை தியாகம் செய்வதற்கு அவர்கள் எவ்வளவு எளிதாக முடிவு செய்து விட்டார்கள் என்பது என்னை ஆழமாக பாதித்தது.

போலீசும் அரசின் ஒரு பகுதிதான் என்பதால் இந்தப் பிரச்சனையை எப்படி வெளிக் கொண்டு வருவது என்று எனக்குத் தெரியவில்லை. அந்த நேரத்தில், நான் ஒரு ஊடகவியலாளரை சந்தித்து எனது கவலைகளை தெரிவித்தேன். அவர் இந்தப் பிரச்சனையை வெளிக் கொண்டு வந்தது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

அந்தத் தருணம் எனது வாழ்க்கையை மாற்றியது. இலட்சியங்களையும் உண்மையையும் கடைப்பிடித்துக் கொண்டிருப்பது வரையில் ஊடகவியல் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை புரிந்து கொண்டு நானும் ஊடகவியலாளர் ஆக முடிவு செய்தேன். குறிப்பாக, ஒவ்வொரு நாளும் இரவு 9 மணிக்கு ரவிஷ் குமாரின் நிகழ்ச்சியை பார்த்தது [என்டிடிவி ஊடகவியலாளர்] எனக்கு அதிக ஊக்கம் அளித்தது. அவரைப் போல குரலற்றவர்களுக்கு குரல் அளிக்க நான் விரும்பினேன், உண்மைக்காக போராட விரும்பினேன்.

மும்பையில் எனக்கு வாய்ப்பு கிடைக்கா விட்டாலும், நான் இந்தியன் எக்ஸ்பிரசில் வேலை செய்ய ஆரம்பித்தேன். நான் எதைச் செய்ய விரும்பினேனோ அதையே செய்வது குறித்து மிகவும் பெருமை கொண்டிருந்தேன்.

எனது மொழிநடை கடுமையாக இருப்பதாக சிலர் சொல்கிறார்கள். ஆனால் எனது மொழி அரசின் செயல்பாடுகளுக்கான எதிர்வினை. தலித்துகளும், பழங்குடியினரும், சிறுபான்மையினரும் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதைப் பாருங்கள். அவர்கள் புறக்கணிக்கப்படுவது மட்டுமில்லை, அவர்களது உரிமைகள் ஒடுக்கப்படுகின்றன, அவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுகிறது, அவர்கள் சித்திரவதை செய்யப்படுகின்றனர். இது தொடர்பாக நான் அமைதியாக இருக்க முடியாது, இருக்கவும் மாட்டேன். அது என்னை கோபப்படுத்துகிறது, சொல்லப் போனால் எல்லோருக்குமே அது கோபத்தை ஊட்ட வேண்டும். இந்த நிலைமை மாறினால், எனது மொழியும் மென்மையாகும்.

ஆனால், அப்போதிருந்ததை விட நிலைமை மாறி விட்டது. முன்னர் ஊடகங்கள் ஆசிரியரால் வழிநடத்தப்படுவதாக இருந்தன, இப்போது அவை உரிமையாளராள் நடத்தப்படுகின்றன. இப்போது, உண்மையில் எந்த அக்கறையும் இல்லாத முதலாளிகள் என்ன பேச வேண்டும், என்ன பேசக் கூடாது என்று ஊடகவியலாளர்களுக்கு சொல்கின்றனர்.

இதன் விளைவாக, ஊடகவியலாளர்கள் தலித்துகள், பழங்குடிகள், அல்லது சிறுபான்மையினர் பற்றி பேசுவதில்லை. அரசின் பொறுப்பையும் அவர்கள் வலியுறுத்துவதில்லை. இவர்கள் ஊடகவியலாளர்கள் இல்லை, அவர்கள் காசு கொடுக்கப்பட்ட தகவல் தொடர்பு ஏஜெண்டுகள், அவ்வளவு தெளிவானது, எளிமையானது அது. அதனால்தான் நான் அமைப்புரீதியான ஊடகவியலில் இருந்து ஒதுங்கி சுயேச்சையான ஊடகவியலாளர் ஆனேன். எப்படி வேலை செய்ய வேண்டுமோ அப்படி வேலை செய்வதற்கான சுயேச்சையை அது எனக்கு வழங்குகிறது.

நேர்மையாகச் சொன்னால், ஊடகங்கள் நமது ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இனிமேலும் இல்லை என்று நான் கருதுகிறேன். உண்மையைச் சொல்வதில் காமெடியன்கள் அவர்களை விட சிறப்பாக இன்று செயல்படுகிறார்கள் என்பது வேடிக்கையானது.

சித்தார்த்த வரதராஜன் மற்றும் எம் கே வேணு தலைமையிலான வயர் (thewire.in) உருவாக்கப்பட்ட போது, “ஊடகவியலின் இலட்சியங்களை உண்மையாக கடைப்பிடிக்கும் ஒரு நிறுவனம் இது” என்று நான் நினைத்தேன். அவர்கள் ஊடகங்கள் பற்றிய எனது பார்வையை முழுவதுமாக மாற்றி விட்டார்கள். நீண்ட காலத்துக்குப் பிறகு அர்த்தமுள்ள ஒன்றை செய்வதாக நான் உணர்ந்தேன், நாட்டுக்காக வேலை செய்வதாக உணர்ந்தேன்.

நல்ல ஊடகவியலாளராக ஆவது அவ்வளவு சிரமமாகி விட்டது இப்போது. வியாபம் ஊழலை வெளிக் கொணர்ந்த் ஊடகவியலாளர் போல நீங்கள் கொல்லப்படலாம், நானும் யோகி அரசாங்கத்துக்கு எதிராக எனது குரலை உயர்த்தினேன் என்ற ஒரே காரணத்துக்காக இரண்டு முறை கைது செய்யப்பட்டேன், 80 நாட்கள் சிறையில் இருந்தேன்.

நான் சிறையில் இடப்பட்ட போது முதல் நாள் மிகவும் துன்பகரமானதாக இருந்தது. மின்சார ஷாக்குகள், 10 போலீஸ்காரர்கள் அடித்தல் என்று எனக்கு 3-வது டிகிரி சித்திரவதை அளிக்கப்பட்டது. எந்தக் காரணமும் சொல்லப்படவில்லை. எந்த விசாரணையும் இல்லை, வெறும் தண்டனை மட்டும்தான். எனது வாழ்வையும் எதிர்காலத்தையும் எண்ணி நான் பயந்து போனேன்.

ஆனால், பின்னர், நான் பல விசாரணை கைதிகளை சந்தித்தேன். அவர்களது பலம் என்னை தொடர்ந்து செயல்பட ஊக்கமளித்தது. எனவே, இயல்புநிலையை தக்க வைத்துக் கொள்ள நான் எனது வேலையைச் செய்யத் தொடங்கினேன். அவர்களுடன் நான் பேசினேன், அவர்களது கதைகளை சேகரித்தேன், சிறை அமைப்பு தொடர்பாக விசாரணை நடத்தினேன். அது நரகம், ஆனால் அது ஒவ்வொருவரையும் பொறுத்தது, எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தது.

ஆனால், நான் தொடர்ந்து செயல்படுவேன். ஏனென்றால் என்னைப் பொறுத்தவரை தேர்வு எளிதானது. இந்தியாவில் இரண்டு சித்தாந்தங்கள் போரிட்டு வருகின்றன : ஒரு சித்தாந்தம் அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்கவும் இன்னொன்று அதை அழிக்கவும் விரும்புகின்றன. ஒரு சித்தாந்தம் மகாத்மா காந்தியை கொலை செய்தது. இன்னொரு சித்தாந்தம் இந்த நாட்டின் விழுமியங்களை பாதுகாக்க விரும்புகிறது.

நாம் அடக்குமுறைக்கும், பிரிவினைக்கும் எதிராக போராடி வருகிறோம், இந்தியா என்ற கருத்துக்காக போராடி வருகிறோம். நீங்கள்?

நன்றி : newsplatform.in

” குரலற்றவர்களின் குரலாக, உண்மைக்காக போராடுகிறேன் ” – பிரசாந்த் கனோஜியா

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்