மோடி அரசின் புதிய அந்நிய நேரடி முதலீடு கொள்கையினால், ஆறு வருடங்களாக இயங்கி வந்த ஹஃப்போஸ்ட் இந்தியா (Huffpost India) எனும் செய்தி தளம் செவ்வாய் அன்று முடக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்க ஹஃப்போஸ்ட் நிறுவனத்தின் கிளையான ஹஃப்போஸ்ட் இந்தியா செய்தி இணையதளம் ஆறு வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. மோடி அரசாங்கம் நேரடி அந்நிய முதலீட்டில் கொண்டு வந்த கட்டுப்பாட்டினால், இப்போது ஹஃப்போஸ்ட் நிறுவனம் முடக்கப்பட்டிருக்கிறது. டிஜிட்டல் ஊடக நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீடு பங்குகளின் 26% மட்டுமே இருக்க வேண்டும் எனும் கட்டுப்பாடு விளைவாக எடுக்கப்பட்டிருக்கும் முதல் நடவடிக்கை இதுவே.
வெரைசான் நிறுவனத்தின் நிர்வாகமான ஹஃப்போஸ்ட் – பஸ்ஃபீடிற்கு விற்கப்பட்டதனால், அந்நிய நேரடி முதலீடு கட்டுப்பாடு சிக்கல்கள் எழுந்து ஹஃப்போஸ்ட் இந்தியா தளம் முடக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து ஊழியர்களுக்கு செய்தி அளித்த பஸ்ஃபீடு நிறுவனர் ஜோனா பெரெட்டி, “ இந்தியக் குழு ஒரு சிறிய கால அவகாசத்தோடு தான் வேலை செய்து கொண்டிருந்தது. வெரைசான் நினைத்திருந்தாலும், அந்நிறுவனத்தை தக்க வைத்திருக்க முடியாது. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் செய்தி நிர்வாகங்களை கட்டுப்படுத்த அனுமதி இல்லை, ‘பஸ்ஃபீடு இந்தியா’ கலாச்சார மற்றும் கேளிக்கை தளமாக இருப்பதால் செயல்பட முடியும்” என்று கூறியிருக்கிறார்.
ஹஃப்போஸ்ட் தளம் முடக்கப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். ஹஃப்போஸ்ட் நிறுவனத்தில் வேலை செய்த ஊடகவியலாளர்கள் தங்கள் அனுபவங்களை நினைவுகூரும் வகையில் ட்வீட் செய்திருக்கின்றனர்.
“இன்று தான் ஹஃப்போஸ்ட் இந்தியாவில் கடை நாள். நான் வேலை செய்ததிலேயே சிறப்பான நியூஸ்ரூம் இது தான். (இதை வழிநடத்திச் சென்ற பெருமை எனக்கிருந்தது என்று இன்னும் நம்ப முடியவில்லை) எங்கள் செய்திகளை படித்ததற்கும், எங்கள் ஊடகவியலை ஆதரித்ததற்கும் நன்றி” என ஹஃப்போஸ்ட் இந்தியாவின் முதன்மை செய்தியாசிரியர் அமன் சேத்தி ட்வீட் செய்திருக்கிறார். இந்த வாய்ப்பளித்ததற்கு பலருக்கு நன்றி கூறி, தன்னுடைய அனுபவம் குறித்து எழுதியிருக்கிறார்.
Today is @huffpostIndia’s last day. Pound for pound, story for story, reporter for reporter, this is the greatest newsroom I have worked for; (and I still can’t quite believe I had the privilege to lead)
Thank you everyone for reading our stories and supporting our journalism— Aman Sethi (@Amannama) November 24, 2020
ஊடகவியலில் உண்மைத்தன்மையை மையமாக வைத்து இயங்கியது ஹஃப்போஸ்ட் தளம். மோடி அரசின் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் திட்டத்தின் மோசடியையும், அச்சமயத்தில் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் மீறப்பட்டதையும் அம்பலப்படுத்த ஒரு தொடரை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது ஹஃப்போஸ்ட் இந்தியா தளத்திற்கு சென்றால், நவம்பர் 24லில் இருந்து, ஹஃப்போஸ்ட் இந்தியா தளம் செய்திகளை வெளியிடாது. வேறு செய்திகளுக்கு huffpost.com-தளத்தை பார்க்கவும் என்று ஒரு அறிவிப்பை மட்டுமே பார்க்க முடிகிறது. ஹஃப்போஸ்ட் இந்தியா தளத்தில் இருந்த செய்திகள், கட்டுரைகள் எல்லாம் ஹஃப்போஸ்ட்.காம் தளத்திற்கு மாற்றும் வேலை நடந்து கொண்டிருக்கிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.