Aran Sei

மார்க்ஸ் – எங்கெல்ஸ் : நட்புன்னா என்னன்னு தெரியுமா? தேவான்னா யாருன்னு தெரியுமா?’ – ராஜசங்கீதன்

1991ம் ஆண்டில் எல்லாம் நான் ரஜினி ஃபேன். திரையில் தளபதி என்ற எழுத்துகள் போட்டதும் `தலைவா’ என அலறித் தீர்த்திருக்கிறேன். பிற ரஜினி படங்களை விட தளபதி மிக வித்தியாசமாக இருந்தது. மணிரத்னத்தையும் வேறு நம்பிக்கொண்டிருந்த காலம். மம்முக்காவையும் பிடிக்கும். கர்ணன் கதை எனப் பிற்காலத்தில் தெரிந்துகொண்டாலும் இன்றும் ’தளபதி’ படம் என்றால் உட்கார்ந்து பார்த்துவிட முடியும். எனக்கு அப்படத்தில் மிகவும் பிடித்த காட்சி கலெக்டரிடம் ரஜினியும் மம்மூட்டியும் பேசும் காட்சிதான்.

அதிகாரத்துக்கே உரிய அகங்காரத்துடன் அர்விந்த்சாமி அமர்ந்து பேசுவார். ரஜினியும் மம்மூட்டியும் அமர்ந்து தங்களின் நியாயங்களை எடுத்து வைப்பார்கள். அருகே காவலர்களையும் வைத்துக்கொண்டு கலெக்டர் மிரட்டப் பார்ப்பார். உடனே ரஜினி, புருவங்களை உயர்த்தி அடங்கிய குரலுடன், ‘சூர்யா சார். உரசாதீங்க!’ என்பார். உடனே அதிகாரத்தின் அடிவருடியான காவலன் எழுந்து அடிப்பதைப் போல் கத்துவார். உடனே ரஜினி எழுந்து ‘தொடறா பார்க்கலாம்… தொடறா பார்க்கலாம்’ எனப் பதிலுக்குச் சீறுவார். உடனே மம்மூட்டி எழுந்து ரஜினியை அமைதிப்படுத்தி விட்டு, கலெக்டரிடம் என்ன விரும்புகிறீர்கள் எனக் கேட்க, ‘அவர்கள் எல்லாவற்றையும் நிறுத்த வேண்டும்’ என்பார் கலெக்டர். ஒரு கணம் கூட யோசிக்காமல், முடியாது என முகத்திலடித்தாற்போல் சொல்லி விட்டுத் திரும்பி ரஜினியுடன் நடந்துசெல்வார்.

இப்போதும் மயிர்க்கூச்செரிய வைக்கச் செய்யும் காட்சி. அதிகாரத்தை எதிர்த்து மறுத்துத் தூக்கியெறிந்து செல்பவனைப் பார்க்கும்போது எவருக்குதான் புல்லரிக்காமல் இருக்கும்?

தளபதி படம் இன்றளவும் ரசிக்கப்படுவதற்கு முக்கியமான காரணமாக இருப்பது ஒரே விஷயம்தான். நட்பு!

வீட்டில் தரும் சில்லறைகளைப் பொறுக்கிப் போட்டு ஒன்று சேர்த்து பள்ளி முடிந்து திரும்புகையில் பேக்கரியில் வாங்கிச் சாப்பிடும் நட்பு இப்போது இல்லை. எதற்கு அடி வாங்குகிறோம் என்றே தெரியாமல் பக்கத்து ஏரியாவில் வம்பிழுத்த நண்பனுக்காகச் சென்று அடி வாங்கும் நட்பு இல்லை. எங்கோ தூரத்திலும் காலத்திலும் கரைந்து போன பால்யகால நண்பனின் வாழ்க்கை திடுமென ஞாபகத்துக்கு வந்து நம்மைப் பாடாய்படுத்தும். முன்பொரு காலத்தில் இருந்த நட்புகளைச் சிறுபிள்ளைத்தனம் என நம்மை நாமே ஆசுவாசப்படுத்திக் கடந்து விடுகிறோம்.

பழுப்பு நிறப் புகைப்படமாக அந்த நாட்களும் வாழ்க்கையும் நட்பும் நம் நெஞ்சச் சுவர்களில் மிஞ்சி அவ்வப்போது ஞாபகங்களைக் கிளர்ந்து அழுத்துகின்றன.

இப்படி நாம் தொலைத்துக்கொண்டிருக்கும் உன்னதங்களில் ஒன்றான நட்பை ஞாபகப்படுத்தும் வரிகள்தான் இவை:

’நட்புன்னா என்னன்னு தெரியுமா? தேவான்னா யாருன்னு தெரியுமா?’

படத்தைப் பற்றிப் பலர் பேசியிருப்பார்கள். எழுதியிருப்பார்கள். நீங்களே கூட பல முறை பார்த்திருப்பீர்கள். ஆகையால் படத்தின் காட்சிக்குள் செல்லாமல் படம் கொண்ட அதே சட்டகத்தை வேறு ஒரு இடத்தில் வைத்து முக்கியமான இரண்டு பேரைப் பார்க்க விழையும் முயற்சியில்தான் இக்கட்டுரை.

பிரடரிக் எங்கெல்ஸ், காரல் மார்க்ஸ்!

விஞ்ஞான கம்யூனிச சித்தாந்தத்தை உருவாக்கியவர்களாகக் கருதப்படும் இந்த இருவரைதான் ‘தளபதி’ சட்டகத்துக்குள் வைத்துப் பார்க்கவிருக்கிறோம். எங்கெல்ஸ்தான் தேவா. மார்க்ஸ்தான் சூர்யா. பொதுவாக கம்யூனிசத்தைப் பொறுத்தவரை ‘ஏ ஏகாதிபத்தியமே… புரட்சிகர வர்க்கமே’  என மண்டை மண்டையாக பலர் பேசுவதைக் கேட்டிருப்போம். அந்தச் சித்தாந்தத்தை உருவாக்கியவர்களே கூட இந்தளவுக்கு மண்டை மண்டையாகப் பேசி வாழாதவர்கள் என்பதால் அவர்களுக்குள் இருந்த ஈரத்தை நம் வாழ்க்கை இழந்த ஈரத்தைக் கொண்டு பார்க்க முயலுவோம்.

நம் `சூர்யா’வான மார்க்ஸ் ஒரு தடாலடி பேர்வழி. ஏகப்பட்ட விஷயம் படித்து எழுதி காவல்துறையே தேடுமளவுக்கான தாதாவாக இருந்தவர். காவல்துறைக்கு என்ன மார்க்ஸ் மீது கோபம்.? ஒன்றுமில்லை. சின்ன கோபம்தான். மக்களுக்காகப் பேசினார். மக்களுக்காக எழுதினார். அவ்வளவுதான்.

மார்க்ஸ் கட்டுரைகள் எழுதினாலும் அப்பத்திரிகையிலிருந்து பெரிய வருமானம் கிட்டவில்லை. சொல்லப்பட்ட வருமானமும் கொடுக்கப்படவில்லை. சிந்திக்கவும் வேண்டும், பணம் சம்பாதிக்கவும் வேண்டும். எத்தனை கஷ்டம்? பணம் கேட்டு, ஒருமுறை அந்தப் பத்திரிகை உரிமையாளரைப் பார்க்கச் சென்றபோதுதான் ஒரு நபரை மார்க்ஸ் சந்திக்க நேர்ந்தது. தேவா!

மார்க்ஸ் உள்ளே நுழைந்தபோது முதலில் கவனிக்கவில்லை. பத்திரிகை உரிமையாளரிடம்தான் பேசினார். பிறகுதான் அங்கு எங்கெல்ஸ் இருப்பதைக் கவனித்தார் மார்க்ஸ். அவருக்கு நேர் முரணாக இருந்தார் எங்கெல்ஸ். பணக்கார ஆடைகளும் சொகுசான வாழ்க்கையும் எங்கெல்ஸின் தோற்றத்தில் தெரிந்தது. ‘இவன் நிச்சயமாக மக்களை சுரண்டி வாழும் பணக்காரனாகத்தான் இருப்பான்’ என நினைத்தார் மார்க்ஸ்.  எங்கெல்ஸைப் பற்றி  மார்க்ஸ் கேள்விப்பட்டிருக்கிறார். அவர் கட்டுரைகள் எழுதிய பல பத்திரிகைகளில் எங்கெல்ஸும் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அவற்றை மார்க்ஸும் படித்திருக்கிறார். ஆனாலும் எங்கெல்ஸின் வாழ்க்கைக்கும் அவர் எழுதுவதற்கும் தூரம் இருப்பதாக நினைத்தார் மார்க்ஸ். அதனாலேயே அவரிடம் நெருங்காமல் தள்ளியே இருந்தார். சொல்வதற்கும் வாழ்வதற்கும் சற்றும் சம்பந்தமில்லாத பலர் இருக்கின்றனர். அவர்களால்தான் உலகத்தில் பல பிரச்சினைகள். எங்கெல்ஸ் அந்த ரகமாக இருக்கலாம் என நினைத்தார் மார்க்ஸ்.

எங்கெல்ஸுக்கும் மார்க்ஸைப் பற்றித் தெரியும். ஆனாலும், மார்க்ஸை நெருங்க எங்கெல்ஸுக்குத் தயக்கம் இருந்தது. ஏனெனில் மார்க்ஸுக்கு அவரின் அறிவு மேல் இருந்த நம்பிக்கையால் பெரியளவுக்குத் திமிர் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறார். அதே நேரத்தில் அவரிடம் பேசுவதற்கான ஆசையும் இருந்தது. நீங்கள் செய்யும் விஷயத்தை உங்களின் அதே நோக்கத்தோடு செய்யும் இன்னொரு மனிதரையும் பார்த்தால், அவரிடம் பேசாமல் எப்படி இருந்துவிட முடியும்?

மார்க்ஸிடம் ஒரு முரட்டுத்தன்மை இருந்தாலும் அதிலிருக்கும் நியாயத்தைப் புரிந்திருந்தார் எங்கெல்ஸ். ஆகவே அவரே முதலில் பேசினார். எங்கெல்ஸின் பணக்காரத் தோற்றம் மார்க்ஸை அச்சுறுத்தியது. ஆனால் அந்தப் பணக்காரத்தனத்தையும் மீறித் திறமையையும் அறிவையும் பாராட்டும் தன்மையைக் கண்டதும் மார்க்ஸுக்கு ஒரு விஷயம் புரிந்தது. எங்கெல்ஸ் வழக்கமான பணக்கார கோஷ்டி இல்லை என்கிற விஷயம். எங்கெல்ஸிடம் இருந்த, மக்கள் மீதான உண்மையான அக்கறை மார்க்ஸை அவர்பால் ஈர்த்தது. மார்க்ஸும் எங்கெல்ஸுடன் கட்டுரைகளைப் பற்றியும் மக்களைப் பற்றியும் பேசத் தொடங்கினார். வரலாற்றின் இரு தாதாக்கள் நண்பர்கள் ஆகினர்.

இதற்கு பிறகான காட்சிகளை Young Karl Marx படத்தில் மிக அற்புதமாகக் காட்டப்பட்டிருக்கும். காதலில் சொல்வார்களே, ‘போன ஜென்மத்து விட்ட குறை தொட்ட குறை’ என, அத்தகைய நட்பு இருவருக்கும் தொடக்கம் முதலே வாய்த்தது.

இருவரும் சந்தித்த முதல் நாள் முழுக்கப் பேசிப் பகிர்ந்து, மதுவிடுதிக்குச் சென்று விடிய விடிய கட்டுரைகள் பற்றி விவாதித்து, மார்க்ஸ் வீட்டுக்குச் சென்று தூங்காமல் புதிய புத்தகத்தைப் பற்றிப் பேசி, குறிப்புகள் எடுத்து பின் கண்ணயர்ந்து விடுகின்றனர். மறுநாள் மார்க்ஸின் மனைவி ஜென்னி வந்து எழுப்பிவிட்ட பிறகே இருவரும் தன்னிலைக்கு வருகின்றனர். விழித்ததும் மார்க்ஸ் ஜென்னியிடம் பெருமையுடன் அடுத்த புத்தகத்தை எழுதவிருப்பதாகச் சொல்கிறார். சந்தித்த ஒரு நாளிலேயே உலக மக்களின் விடியலுக்கான ஒரு புத்தகத்தை உருவாக்க முடிகிறதெனில் அந்த இருவருக்குள்ளும் இருந்த நட்பின் வேகத்தை நாம் புரிந்துகொள்ள முடியும்.

எங்கெல்ஸ் பணக்காரர்தான். பணக்கார ஆலை முதலாளியின் மகனாகப் பிறந்தவர். அத்தகைய சூழலில் பிறந்ததாலேயே ஆலையில் பல மணி நேரங்கள் வேலை வாங்கப்பட்டு நசுக்கப்படும் தொழிலாளர்களின் துயரமும் அவருக்குத் தெரிந்தது. அவர்களால் மட்டும் தங்களைப் போல் ஏன் நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கையை வாழ முடியவில்லை என்கிற கேள்வி அவரின் மனதைக் குடைந்துகொண்டே இருந்தது. அத்தகைய தொழிலாளர்களை ஒடுக்கும் தங்களைப் போன்றோரின் வாழ்க்கையை அவர் வெறுத்தார். பணக்காரர்களால் ஒடுக்கப்பட்டு நசுக்கப்படும் நம்மை போன்றோரின் வாழ்க்கைகள் சிறக்க என்ன செய்வதென யோசிக்க ஆரம்பித்தார். அந்த யோசனைக்கான பயணத்தில்தான் மார்க்ஸை எங்கெல்ஸ் சந்தித்தார்.

மார்க்ஸ் எங்கெல்ஸைப் போன்ற பணக்காரர் இல்லை. ஓரளவுக்கு வருமானமுள்ள குடும்பத்தில் பிறந்திருந்தாலும் பணக்காரர்களால் நசுக்கப்படும் மக்களுக்கான விடுதலையைத் தேடும் வாழ்க்கையில் வருமானம் பெரிதாக இருக்கவில்லை. ஆகவே மார்க்ஸின் வீட்டில் எது இருக்கிறதோ இல்லையோ வறுமை எப்போதும் இருந்தது. அவ்வப்போது அவரின் கழுத்தையே இறுக்குமளவுக்கு வறுமை தலைவிரித்து ஆடியிருக்கிறது. அப்போதெல்லாம் மார்க்ஸின் மனைவி ஜென்னி அவருக்கான பெரிய ஆதரவாக இருந்தார் என்றால் மறுபக்கத்தில் நம் பணக்கார ஆலை முதலாளியின் மகனான தேவாவும் இருந்தார்.

எங்கெல்ஸின் வாழ்க்கை பலமுறை மார்க்ஸின் வாழ்க்கைக்கு இந்த வசனத்தைச் சொல்லியிருக்கிறது, “நட்புன்னா என்னன்னு தெரியுமா? எங்கெல்ஸ்னா என்னன்னு தெரியுமா?”

ஒரே சிந்தனை கொண்ட இரு அறிவாளிகள் என்றபோதிலும் அறிவைத் தாண்டிய மதிப்பும் நட்பும் எங்கெல்ஸுக்கும் மார்க்ஸுக்கும் இடையே இருந்தது. பல நாட்கள் இணைந்து பயணித்துப் புது கருதுகோள்களை உருவாக்கியிருக்கின்றனர். பிரிந்திருக்கும் போதும் தொடர்ந்து பல விஷயங்களைப் பற்றிக் கருத்துகளை உள்ளடக்கிய நீண்ட கடிதங்களை இருவரும் தங்களுக்கு இடையே அனுப்பிக்கொண்டனர். ஒரு கட்டத்தில் மார்க்ஸ், “நம்மைப் பற்றி விவாதிக்கையில் இருவரையும் ஒருவர் என்பது போலவே அடையாளப்படுத்தி விவாதிக்கிறார்கள்,” எனக் குறிப்பிட்டுப் புன்னகைத்திருக்கிறார்.

ஒரு நூற்றாண்டின் மிகப் பெரும் சிந்தனையாளன் சிந்திப்பதால் மட்டுமே காப்பாற்றப்பட்டு விடுவதில்லை. அங்கீகரிப்பதில்தான் அவன் உயிர் வாழவே முடிகிறது. அந்த உயிரைக் கொண்டுதான் அவன் சிந்திக்கவும் முடிகிறது. அவனை அங்கீகரிக்க இவ்வுலகும் தவறும் ஒவ்வொருமுறையும் நாம் ஒரு மானுட விடுதலைக்கான சிந்தனையாளனை இழக்கிறோம். நல்லவேளையாக மார்க்ஸின் வரலாற்றில் அது நடக்கவில்லை. பிற எவரும் அடையாளம் காணும் முன்னமே மார்க்ஸின் வரலாற்றுத் தேவையை எங்கெல்ஸ் அங்கீகரித்திருந்தார். அதற்குக் காரணம் அந்த வரலாற்றுத் தேவையின் அவசியம் புரிந்த அறிவும் தன்மையும் எங்கெல்ஸும் பெற்றிருந்தார் என்பதே. எந்த இடத்திலும் மார்க்ஸின் சிந்தனை துவள எங்கெல்ஸ் விட்டதே கிடையாது. எழுத்து மற்றும் தீவிர அரசியல் காரணமாக மார்க்ஸ் நாடு கடத்தப்படுவது ஒரு துன்பம் என்றால், வருமானம் இன்றிக் குடும்பம் நடத்துவது என்பது இன்னொரு பெரும் துயராக இருந்தது.

மார்க்ஸை வாட்டிய வறுமையின் கொடுமை என்ன தெரியுமா?

முதல் குழந்தை இறந்தது. அதிலிருந்து சற்று மீண்டு வருகையில் இரண்டாவது குழந்தையும் இறந்தது. மார்க்ஸால் தாங்க முடியாமல், ”‘ஃப்ரென்சிஸ்கா பிறந்த போது தொட்டில் வாங்க காசில்லை. இப்போது அவள் இறந்துவிட்டாள். சவப்பெட்டி வாங்க காசில்லை” என வருத்தப்பட்டிருக்கிறார். நாம் அனைவரும் வறுமையற்ற சிறப்பான வாழ்க்கை வாழ வேண்டுமெனக் கவலைப்பட்டவனின் வாழ்க்கை இப்படித்தான் இருந்தது. ஆனால் அவரை நமக்காகக் காப்பாற்றிப் பாதுகாக்க எங்கெல்ஸ் அவருக்கு வாய்த்திருந்தார். எந்தத் தருணத்திலும் பணம் கேட்க மார்க்ஸ் தயங்கியதே இல்லை. உடனே அப்பணத்தை அனுப்ப எங்கெல்ஸும் எந்தத் தருணத்திலும் தயங்கியதே இல்லை.

எங்கெல்ஸின் முதல் மனைவி இறந்த துயரத்தை ஒரு கடிதத்தில் மார்க்ஸுக்குக் குறிப்பிட்டிருந்தார். மார்க்ஸும் அச்சமயத்தில் வறுமைக் கொடுமையை மறைத்து ஆறுதல் கடிதம் எங்கெல்ஸுக்கு அனுப்பினார். ஆனால் அந்தக் கடிதத்தில் எங்கெல்சுக்கு மார்க்ஸ் கொடுத்த ஆறுதல் காட்டிலும் அவரின் வறுமையே அதிகம் இருந்தது. எங்கெல்ஸ் அதிருப்தியுடன் பதில் கடிதம் எழுதினார். மனைவி இறப்புக்கான ஆறுதல் கடிதத்திலும் பணம் கேட்ட தன்மையைக் கடிந்துகொண்டார். மார்க்ஸ் மன்னிப்பு கேட்டார். பிறகு மனம் கேட்காமல் மார்க்சுக்குப் பணத்தை அனுப்பினார் எங்கெல்ஸ்.

நட்புக்கென நாம் கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் போன்றோரின் கதைகள் பல கேட்டிருப்போம். இக்கட்டுரையின் தலைப்பு வசனம் இடம்பெற்ற தளபதி போல பல படங்களையும் பார்த்திருப்போம். ஆனால் மார்க்ஸும் எங்கெல்ஸ்ஸும் எல்லாவற்றையும் தாண்டி ஒருபடி மேலே போய் நிற்பதற்கு முக்கியக் காரணம் இருக்கிறது.

மார்க்ஸ் எங்கெல்ஸுக்கு முன்னரே இறந்துவிட்டார். “உலகின் மிகச் சிறந்த மனம் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டுவிட்டது” என வருத்தப்பட்டார் எங்கெல்ஸ். ஆனால் அதோடு அவர் நிறுத்திக்கொள்ளவில்லை. மார்க்ஸின் வறுமை மற்றும் வாழ்க்கைப் போராட்டம் காரணமாகப் பாதி எழுதியிருந்த புத்தகங்களையும் எழுத வேண்டுமென விவாதித்திருந்த கருத்துகளையும் புத்தகங்களாக்கும் பெரும் வேலைகளைச் செய்தார் எங்கெல்ஸ். இன்று வரை நாம் பிரமிக்கும் மார்க்ஸ் என்ற மூளைக்காரனின் கருத்துகள் பலவற்றை நம்மிடம் கொண்டு வந்து சேர்த்ததற்கான ஒற்றைக் காரணம் எங்கெல்ஸ்.

ஒரு நூற்றாண்டின் உலகில் ஆகச் சிறந்த சிந்தனைக்காரனாக மார்க்ஸ் அடையாளப்படுத்தப்பட்டதற்கு முதன்மைக் காரணம் எங்கெல்ஸ். இல்லையெனில் இவ்வுலகம் பல சிறந்த சிந்தனையாளர்களை அவர்களின் வாழ்க்கைக் காலத்திலேயே மென்று தின்று செரித்துச் செல்வதைப் போல மார்க்ஸையும் காணாமலடித்துச் சென்றிருக்கும். இன்னுமே வாழ்க்கை அவதியில் மக்கள் உழன்று துன்பங்களுக்கான காரணத்தையும் காரணகர்த்தாக்களையும் அடையாளம் காணாது கற்பனைக் கதைகளைப் பேசியே அடிமைப்பட்டுக் கிடந்திருக்கும்.

இத்தனைக்குப் பிறகும் நமக்கென ஒரு பொன்னுலகம் காத்திருக்கிறது எனச் சொல்ல முடிகிறதெனில் அதற்குக் காரணம் அத்திசையைக் காட்டிச் சென்ற மார்க்சும் எங்கெல்ஸும் மட்டும்தான். அவர்கள் அந்தக் காலத்து சூர்யா, தேவாவாக இல்லாது போயிருந்தால் நமக்கான விடியல் என்னவென்றே தெரியாமல் போயிருக்கும்.

மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸுக்கு இடையிலான நட்பு விடலை நட்பாக மட்டும் இருக்கவில்லை. அதே நேரத்தில் மண்டை பெருத்த கிழவர்களின் நட்பாகவும் இருக்கவில்லை. அவ்வப்போது எங்கெல்ஸ் தன்னுடைய காதலைப் பற்றி அங்கலாய்த்துக் கொள்வார். மார்க்ஸ் காதலின் அருமையைப் பற்றி அவரின் மனைவி ஜென்னியைக் குறிப்பிட்டு விளக்குவார். இருவரின் கண்களிலும் முதலாளிகளை அழிக்கும் கனல் திடுமென மறைந்து காதல் பூக்கும். பிறகு அந்தக் காதலையும் கூட அழிக்கவிரும்பும் பணத்தாலான வாழ்க்கைமுறை மீதான கோபமாகப் பரிணமிக்கும்.

எல்லா வகைகளிலும் உணர்வு ரீதியாகவும் லட்சியப்பூர்வமாகவும் ஒருமித்த சிந்தனை கொண்டவர்களிடம் நட்பு என்பது சிமெண்ட் மட்டுமல்ல, அடித்தளமாகவும் இருக்கும். மார்க்ஸின் வறுமை வாழ்க்கைக்குப் பல நேரங்களில் எங்கெல்ஸ் பணம் கொடுத்து உதவியிருக்கிறார். இருவருக்குமான நட்பு திடுமெனத் தோன்றித் திடுமென மறைந்து ஞாபகமாக எஞ்சும் உறவாகவும் இருக்கவில்லை. காலம் முழுவதற்கும் நீடித்தது.

யோசித்துப் பாருங்கள் ஒரு காட்சியை. சூர்யாவாக மார்க்ஸ், தேவாவாக எங்கெல்ஸ், கலெக்டராக முதலாளி.

மார்க்ஸ்: இது மார்க்ஸ் சார். உரசாதீங்க…

எங்கெல்ஸ் (முதலாளியிடம்): இப்போ உங்களுக்கு என்ன வேணும்? நாங்க என்ன செய்யணும்?

முதலாளி: நிறுத்தணும்.. எல்லாத்தையும் நிறுத்தணும்.

தேவா: முடியாது.

மார்க்ஸும் எங்கெல்ஸும் திரும்பி நடந்து செல்கின்றனர். முதலாளிகள் என்ன செய்வதெனத் தெரியாமல் வாயடைத்து அமர்ந்திருக்கின்றனர்.

Feel the bgm!

மார்க்ஸ் – எங்கெல்ஸ் : நட்புன்னா என்னன்னு தெரியுமா? தேவான்னா யாருன்னு தெரியுமா?’ – ராஜசங்கீதன்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்