மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
இன்று (பிப்ரவரி 24), மேற்கு வங்க மாநிலம் ஹூக்லி மாவட்டத்தில் நடந்த, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பரப்புரைக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவரும் அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜியின் முன்னிலையில் திரிணாமூல் காங்கிரஸில் மனோஜ் திவாரி இணைந்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தனது அரசியல் பிரவேசம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மனோஜ் திவாரி, “இன்று முதல் ஒரு புதிய பயணத்தை தொடங்குகிறேன். உங்கள் எல்லோருடைய அன்பும் ஆதரவும் எனக்கு வேண்டும். இனிமேல் எனது அரசியல் செயற்பாடுகள் தொடர்பான இன்ஸ்டாகிராம் பக்கமாக இது இருக்கும்.” என்று குறிப்பிட்டு, புதிதாக தொடங்கப்பட்ட தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் சுட்டியை இணைத்துள்ளார்.
A new journey begins from today. Need all your love & support. From now onwards this will be my political profile on Instagram.https://t.co/uZ9idMW7lD
— MANOJ TIWARY (@tiwarymanoj) February 24, 2021
அப்புதிய பக்கத்தின் முகப்பு விவரங்களில், “அரசியல்வாதி, அனைத்திந்திய திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, பெருமைமிகு இந்தியன், ஜெய் வங்காளம்” என்று மனோஜ் திவாரி குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணியின் சார்பாக சர்வதேச ஒருநாள் மற்றும் இருபது ஒவர் போட்டிகளில் மனோஜ் திவாரி விளையாடி வருகிறார். தற்போது உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் மேற்கு வங்க அணியில் விளையாடி வருகிறார். மேலும், ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் இருபது ஓவர் போட்டிகளில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
விவசாய சட்டங்களை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவாக, சர்வதேச பிரபலங்கள் கருத்து தெரிவித்ததை கண்டிக்கும் வகையில், பிரபல கிரிக்கெட் விரர்களும், பாலிவுட் நடிகர்களும், அண்மையில் கருத்துகளை தெரிவித்து வந்தனர்.
அக்கருத்துகள் குறித்து ட்வீட் செய்திருந்த மனோஜ் திவாரி, “நான் சிறுவனாக இருந்தபோது பொம்மலாட்ட நிகழ்ச்சிகளை பார்த்தது இல்லை. அதனை பார்ப்பதற்கு எனக்கு 35 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.” என்று தெரிவித்திருந்தார். கிரிக்கெட் வீரர்கள் வெளியிட்ட ட்வீட்டுகள், பின்னால் இருந்து அவர்களை இயக்கப்படுபவர்களால் தூண்டப்பட்டு எழுதப்பட்டது என்று, மறைமுகமாக பொருள்படும் விதத்தில் அவர் அவ்வாறு ட்வீட் செய்திருந்தார்.
When I was a kid, I never saw a puppet show. It took me 35 years to see one 😊 pic.twitter.com/AMCGIZMfGN
— MANOJ TIWARY (@tiwarymanoj) February 4, 2021
மேலும், தொடர்ந்து உயர்ந்து வரும் எரிபொருள் விலைக் குறித்து பகிர்ந்த ட்வீட்டில், “பெட்ரோல் இதுவரை பார்த்திராத வகையில் பிரமாதமான இன்னிங்ஸை விளையாடியிருக்கிறது. இந்தக் கடினமான சூழலிலும் கச்சிதமாக விளாசப்பட்ட சதம் இது. முதல் பந்தில் இருந்தே பெரிய இன்னிங்ஸை தொடும் என எதிர்பார்த்தோம். பெட்ரோலுக்கு டீசல் அளித்துள்ள பார்ட்னர்ஷிப்பும் அபாரம். சாமானிய மக்களுக்கு எதிராக விளையாடுவது எளிதல்ல. ஆனால், நீங்கள் (பெட்ரோல், டீசல்) இருவருமே அதை சாத்தியப்படுத்தியிருக்கிறீர்கள்.” என்று மனோஜ் திவாரி கிண்டலாக கூறியிருந்தார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.