Aran Sei

நேதாஜி பெயரிலான குடியரசு தின அணிவகுப்பு வாகனம் நிராகரிப்பு – ஒன்றிய அரசுக்கும் மம்தா பானர்ஜிக்கு வலுக்கும் மோதல்

டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்புக்கான மேற்கு வங்கத்தின் வாகனம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாகனம் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பங்களிப்பை முதன்மைப் பொருளாகக் கொண்டது. இந்நிராகரிக்கப்பை அடுத்து ஒன்றிய அரசுக்கும் மேற்கு வங்க அரசுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.

நேற்று(ஜனவரி 16), இந்நிராகரிப்பு குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள இரண்டு பக்க கடிதத்தில், ஒன்றிய அரசின் இம்முடிவு மிகவும் அதிர்ச்சியளிப்பதோடு, எங்களது உணர்வை புண்படுத்தும்படி உள்ளது என்று கூறியுள்ளார்.

“எந்தவொரு காரணத்தையும் சொல்லாமல் எங்கள் வாகனம் நிராகரிக்கப்பட்டது எங்களுக்கு இன்னும் குழப்பமாக உள்ளது. முன்மொழியப்பட்ட வாகனமானது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவரது இந்திய தேசிய இராணுவத்தின் பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில் இருந்தது. மேலும், நம் தேசத்தின் புதல்வர்கள் மற்றும் புதல்விகளின் உருவப்படங்களை தாங்கிச் செல்லும் வகையில் உள்ளது” என்று அக்கடிதத்தில் விளக்கியுள்ளார்.

“இன்று பட்டேலுக்கு நேர்ந்த கதிதான், நாளை நேதாஜிக்கும்” – பாஜக மீது சிவசேனா சாடல்

“ஒன்றிய அரசின் இந்நிராகரிப்பால், மேற்கு வங்க மக்கள் மிகவும் வேதனையடைந்துள்ளனர். 75ஆவது ஆண்டு குடியரசு தினத்தை கொண்டாடும் தேசியளவிலான விழாவில் வங்கத்தின் சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்புகள் இடம் பெறவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது” என்று மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர போராட்டத்தில் மேற்கு வங்கத்தின் பங்களிப்பு குறித்து பேசுகையில், “ரிஷி பங்கிம் சந்திர சட்டோபாதயாதான் தேசியவாதத்தின் முதல் மந்திரமான வந்தே மந்திரத்தை உச்சரித்தார். பின்னர், அது தேசிய பாடலாக மாறியது. ரமேஷ் சந்திர தத் பிரிட்டிஷ் காலனித்துவத்தின் மீதான முதல் விரிவான பொருளாதார விமர்சனத்தை எழுதினார். சுரேந்திரநாத் பானர்ஜி நாட்டின் முதல் தேசியவாத அரசியல் அமைப்பை நிறுவினார். மேற்கு வங்கத்தின் வாகனத்தை நிராகரித்தது இந்த சுதந்திரப் போராட்ட வீரர்களை குறைத்து மதிப்பிடுவதாகும்” என்று தன் கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘ஜனநாயகம் என்பது உறைந்து கிடப்பதல்ல; இயங்கிக்கொண்டே இருப்பது’ – கவிஞர் ஜாவேத் அக்தர்

“இந்த முடிவை மறுபரிசீலனை செய்து, குடியரசு தின அணிவகுப்பில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெருமையை பறைச்சாற்றும் வாகனத்தை இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். லட்சக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகம் மற்றும் பங்களிப்பை வெளிப்படுத்த மேற்கு வங்கத்தின் வாகனம் மிகவும் பொருத்தமானதாக இருக்கும்” என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஒன்றிய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எழுதியுள்ள கடிதத்தில், “மேற்கு வங்க மாநில அரசின் கலாச்சார பாரம்பரியம், நேதாஜியின் வாழ்க்கையும் சுதந்திரப் போராட்டத்தில் அவரது பங்களிப்பை வெளிப்படுத்தும் அணிவகுப்பு வாகனத்தை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளதை அறிந்து நான் ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்தேன். இது மேற்கு வங்க மக்களுக்கும், அதன் பண்பாட்டு பாரம்பரியத்துக்கும், நமது மாபெரும் நாயகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்க்கும் இழைக்கப்பட்ட அவமானம்” என்று தெரிவித்திருந்தார்.

குடியரசு நாள் அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட நேதாஜி – சுபாஷ் சந்திர போஸுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என காங்கிரஸ் கருத்து

“குடியரசு தினத்தின் போது ஒவ்வொரு மாநிலமும் அதன் பண்பாட்டு பாரம்பரியம் மற்றும் சின்னங்களை காட்சிப்படுத்த விரும்புகிறது. இதனால் தேசிய அளவில் அவற்றை பொதுமக்கள் அதை அறிந்து கொள்வார்கள். நேதாஜி மேற்கு வங்காளத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்திற்கே பெருமை” என்று அக்கடிதத்தில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியிருந்தார்.

சில நாட்களுக்கு முன்பு, கேரள அரசு முன்மொழிந்த குடியரசு தின அணிவகுப்பு வாகனத்தையும் ஒன்றிய அரசு நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: New Indian Express

நேதாஜி பெயரிலான குடியரசு தின அணிவகுப்பு வாகனம் நிராகரிப்பு – ஒன்றிய அரசுக்கும் மம்தா பானர்ஜிக்கு வலுக்கும் மோதல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்