வெட்கமில்லாத பிரதமர், நாட்டை கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்ற தவறிவிட்டார் என்றும் ஆனால், அவரது படம் தடுப்பு மருந்து சான்றிதழில் தொடங்கி பதுக்கல் குடோன்கள் வரை எல்லா இடங்களிலும் காணப்படுகிறது என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
நேற்று (ஜூலை 6), மேற்கு வங்க சட்டபேரவையில் பேசிய மம்தா பானர்ஜி, “நாங்கள் ஏற்கனவே 2.26 கோடி மக்களுக்குத் தடுப்பு மருந்து செலுத்தியுள்ளோம். தேவையான தடுப்பு மருந்துகளை ஒன்றிய அரசு வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்த போதிலும், மீதமுள்ள 26 லட்சத்தை நாங்களே சொந்த நிதியிலிருந்து வாங்க வேண்டியிருந்தது.” என்று தெரிவித்துள்ளார்.
“தடுப்பு மருந்து வாங்குவதற்கான செலவுகளை ஏன் பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து பயன்படுத்தப்படவில்லை. ஒன்றிய அரசின் தவறான தடுப்பு மருந்து கொள்கைகள் காரணமாக, கொரோனா தொற்றை சரியாக கையாள முடியாமல் போய்விட்டது. ஒன்றியத்தின் இரக்கமற்ற கொள்கைகள் மத்தியிலும், எங்களால் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடிந்தது. நம்முடைய வெட்கமில்லாத பிரதமர், நாட்டை தொற்றிலிருந்து காப்பாற்ற தவறிவிட்டார். ஆனால், அவரது படம் தடுப்பு மருந்து சான்றிதழில் தொடங்கி பதுக்கல் குடோன்கள் வரை எல்லா இடங்களிலும் காணப்படுகிறது.” என்று அவர் விமர்சித்துள்ளார்.
“பல நாட்களாக, உத்தரபிரதேச கங்கை உள்ளிட்ட ஆறுகளில் மிதக்கும் உடல்களைக் கண்டோம். சில உடல்கள் மிதந்து நம் மாநிலத்திற்கு (மேற்கு வங்கம்) வந்தன. உபியில் எத்தனை பேர் கொரோனா தொற்றால் இறந்தார்கள் என்பது கூட அவர்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. அவர்களுக்கு வெட்கமாகயில்லையா? வங்கத்தை விமர்சிப்பவர்கள் முதலில் கண்ணாடியில் உங்கள் முகத்தை பாருங்கள்.” என்று அண்மையில் மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்படும் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விமர்சித்த உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை குறிப்பிட்டு கூறியுள்ளார்.
Source : pti
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.