வெறுப்புணர்விற்கு எதிரான அமைப்பின் தலைவரும் சமூக செயல்பாட்டாளருமான காலித் சைபி கடந்தாண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது நடந்த கலவரத்திற்கு பின் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
அவர்மீது பதியப்பட்ட மூன்று வழக்குகளில் 2 வழக்குகளில் அவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காலித் சைபி சிறையில் இருந்தபடியே தனது குடும்பத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். சிறையிலிருந்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
என் மனைவி, குழந்தைகள் மற்றும் என் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!
கடந்த அக்டோபர் 1 2020 அன்று, நான் டெல்லி சிறையிலுள்ள4 வது வார்டிற்கு மாற்றப்பட்டேன். அப்போது நாங்கள் மூவரும் அங்குள்ள மசூதியில் மூன்று வேலை தொழுவதற்கு முயற்சி செய்தோம். தொழுவதற்காக மசூதிக்குச் சென்றபோது அங்கிருந்த இமாம் விடுதலையாகி சென்றிருந்ததால் அங்குள்ள தோழமைகள், என்னைத் தொழுகையை முன்னின்று நடத்த வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர். எனவே நானே தொழுகையை நடத்த தொடங்கினேன்.
அந்த மசூதியைச் சுற்றியுள்ள இடங்களில் ரோஜா செடிகளை சிறையில் உள்ள எனது நண்பர்கள் நட்டு வைத்திருந்தனர். அந்த அழகான வெள்ளை ரோஜா புதரானது இமாம் தொழுகையை முன் நின்று நடத்தும் இடத்திற்கு மிக அருகில் நடப்பட்டிருந்தது.
நான் சிறைக்குள் அடைக்கப்பட்ட நாட்களில் சில வெள்ளை ரோஜாக்கள் இருந்தன. பின்னர் சில நாட்களில் மேலும் சில ரோஜா செடிகள் நடப்பட்டதும் அந்த இடமே வெள்ளை ரோஜா தோட்டம் அழகாகக் காட்சியளிக்க ஆரம்பித்தது.
சில நாட்களிலேயே ரோஜா செடிகள் வெள்ளை நிற மலர்களைப் பூக்கத் தொடங்கின. தொழுகை முடிந்து வரும்போதெல்லாம் அங்கேயே நேரத்தைக் கழித்தேன், அங்குள்ள ஒவ்வொரு மலர்களும் என் வீட்டில் உள்ள உறுப்பினர்களை நினைவுபடுத்தும்.
அதிலும் குறிப்பாக அங்கு ஒரு செடியில் உள்ள நான்கு மலர்களில் ஒன்று என் மனைவியையும் மற்றும் மூன்று என் பிள்ளைகளையும் ஞாபகப்படுத்தும். பின் சில நாட்களில் பூத்த அந்த மலர்கள் வாடத்தொடங்கும் . நானும் மேலும் மலர்களின் வாட்டத்தை கண்டு நானும் சோகமடைவேன். குறிப்பாக என் குடும்பத்தை நினைவுபடுத்தும் நான்கு மலர்களைக் காணும்போது என் கண்களில் கண்ணீர் துளிர்க்கும்.
மகிழ்ச்சியும் கொண்டாட்டமுமான என் வாழ்வு இன்று முற்றிலும் வாடியிருக்கிறது என்று வாழ்வு குறித்து யோசிப்பேன்.
அடுத்த நாள், நான் தொழுகையில் ஈடுபடும் போதும் அழகான மணம் என்னை வந்தடைந்தது. நான் தொழுகையை முடித்து எழுகையில் ரோஜாக்களின் உதிர்ந்த இதழ்கள் என் காலடியில் பரவியிருப்பதைக் கவனித்தேன். பூக்களின் அழகான மணம் என் உணர்வுகளை நிரப்பியது
முட்களுக்கு மத்தியில் கூட அழகான இதழ்களும், அன்பையும் கொண்டிருக்கின்றன. அதிலும் உதிர்ந்து விடும் நிலையிலும் சுற்றியுள்ள எல்லாவற்றிற்கும் அழகை உண்டாக்குவதாக எனக்குப் படும்.
அந்த ரோஜா செடிகளைப் பார்த்து இவற்றைப் போல வாழ்க்கையை அழகோடு வாழ வேண்டும் , எவ்வளவு கடுமையான சூழலிலும் மற்றவர்களை அன்போடு நடத்த வேண்டும். சோகமாக இருக்கும்போது கூட நாம் தனியாக இல்லை. நமக்காக இறைவனிடம் பிராத்திக்கும் நபர்கள் உள்ளதாக எண்ண தோன்றும். மேலும், இந்த வாழ்க்கை முடியும்போது நாம் அடுத்தவருக்கு எந்த வகையில் பயன்பட்டிருக்கிறோம் என்று தான் அந்த மலர்கள் எனக்கு உணர்த்தும்.
இந்தப் பனிரெண்டு மாதங்களில் அந்த ரோஜா தோட்டம் என் நண்பனாக, என் குருவாக மாறியிருக்கிறது. இந்தத் தோட்டத்திலிருந்து வாழ்க்கை பாடத்தை உணர்ந்து வருகிறேன்.
எனக்கு மிக நீண்ட கடிதம் எழுத அனுமதி இல்லாததால், இதோடு நிறுத்திக்கொள்கிறேன். எல்லாம் வல்ல கடவுளின் அருளினால் வரும்நாட்களில் எழுதுகிறேன்.
எனது வணக்கங்களையும் , வாழ்த்துக்களையும் உங்களுக்கு அனுப்புகிறேன், உங்கள் பிராத்தனைகளில் என்னைக் குறித்தும் வேண்டிக்கொள்ளுங்கள்.
source: THE WIRE -Translated from the Hindi original by Shuddhabrata Sengupta.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.