சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை தூண்டும் விதமாக ஹரித்வாரில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு எதிராக, சிபிஐ (எம்எல்) விடுதலை, ஏஐஎஸ்ஏ, ஏஐசிசிடியு போன்ற இடதுசாரி கட்சிகளும் அமைப்புகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடத்தப்பட்ட இந்துத்துவ நிகழ்ச்சியில், சிறுபான்மை மக்களைக் குறிவைத்து, அவர்கள்மீது வன்முறையை ஏவும் விதமாக பேசிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் உத்தரகாண்ட் முதலமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நேற்று(டிசம்பர் 27), டெல்லியில் உள்ள உத்தரகண்ட் பவனில் நடைபெற்றுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக்காரர்களிடம் உரையாற்றியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலையின் பொதுச் செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா, பாஜக ஆதரவுடன் அந்த தீவிர வலதுசாரிகளும் அவர்களின் அமைப்புகளும் நாட்டை பிளவுபடுத்த வகுப்புவாதத்தை கையில் எடுக்கின்றன என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
உத்தரகண்டில் டிசம்பர் 17 முதல் 20 வரை நடத்தப்பட்ட இந்த தர்ம-சன்சத் இந்துத்துவ நிகழ்ச்சியை நாஜி ஜெர்மனியின் ‘இறுதி தீர்வு’ உடன் தொடர்புப்படுத்தி பேசியுள்ள அவர், “இஸ்லாமிய சமூகத்தை இனப்படுகொலை செய்ய மக்களுக்கு அழைப்பு விடுத்த உத்தரகண்ட் வெறுப்பு பேச்சானது, நாஜி ஜெர்மனில் யூதர்களைக் கொல்ல அழைப்பு விடுக்கப்பட்ட ‘இறுதி தீர்வு’க்கு ஒப்பானது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டில் அதிகாரத்தில் இருக்கும் பாசிச சக்திகளை முற்றிலும் அகற்றுவதை உறுதி செய்ய ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டியது அவசியம் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கு எதிராக தர்ம சன்சத்தில் நிகழ்த்தப்பட்டுள்ள வன்முறை பேச்சுகளுக்கு பொறுப்பேற்று உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி பதவி விலக வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அனைத்திந்திய மாணவர் சங்கத்தின்(ஏஐஎஸ்ஏ) தலைவர் என். சாய் பாலாஜி, சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுத்தியுள்ளதோடு, படுகொலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது குறித்து மௌனம் காக்கும் பாஜக அரசையும் கடுமையாக கண்டித்துள்ளார்.
Source: New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.