ராணுவ ரகசியத்தை கசியவிடுவது தேசத்துரோகம் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பாதுகாப்புத்துறை முன்னாள் அமைச்சர் ஏ.கே.ஆண்டனி வலியுறுத்தியுள்ளார்.
டிஆர்பி மோசடி வழக்கில், மும்பை காவல் துறையினர் தாக்கல் செய்துள்ள கூடுதல் குற்றப் பத்திரிகையுடன், ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆய்வு கவுன்சிலின் (பார்க்) முன்னாள் தலைமை செயல் அதிகாரிக்கும், ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கும் இடையில், வாட்ஸ் ஆப் மூலம் நடைபெற்றதாக கூறப்படும், சுமார் 1000 பக்கங்கள் கொண்டுள்ள உரையாடல் இணைக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு, பிப்ரவரி 23 ஆம் தேதி நடைபெற்றுள்ள அந்த உரையாடலில், அர்னாப் கோஸ்வாமி ஒரு மிகப்பெரிய விஷயம் நடைபெறவுள்ளது என்று கூறுகிறார். அதற்கு தாவுத் இப்ராஹிம் தொடர்பானதா என்று பிரதோ தாஸ் கேட்கின்றார். அதற்கு அர்னாப், பாகிஸ்தான் தொடர்பானது என்றும், இந்தமுறை மிகப்பெரிய அளவில் நடைபெறவுள்ளதாகவும் பதில் அளிக்கிறார்.
அதன் பிறகு, இது வெறும் தாக்குதலா அல்லது அதை விடப் பெரியதா என்று பிரதோ தாஸ் கேட்கின்றார். அதற்கு அர்னாப், வழக்கமான தாக்குதலை விட பெரியது என்றும் காஷ்மீர் தொடர்பான மிகப்பெரிய விஷயமும் கூட என்று பதில் அளிக்கிறார்.
40 ராணுவ வீரர்களின் மரணத்தை கொண்டாடும் ’தேசியவாதி’ – அர்னாப்பை கிண்டல் செய்த சசி தரூர்
அர்னாபுக்கும், பிரதோ தாசுக்கும் இடையில் இந்த உரையாடல் நடைபெற்று மூன்று நாள் கழித்து, 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் நாள், இந்திய விமானப்படை, காஷ்மீரில் உள்ள இந்திய எல்லையை கடந்து, பாகிஸ்தானின் கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில் உள்ள பாலாகோட் பகுதியில் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது.
இதைக் குறிப்பிட்டு, ராணுவம் தாக்குதல் நடத்தவுள்ள தகவல், மூன்று நாட்களுக்கு முன்னதாகவே, அர்னாப் கோஸ்வாமிக்கு கிடைத்தது எப்படி? என்று பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து, இன்று (ஜனவரி 20) டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான ஏ.கே.ஆண்டனி, செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியுள்ளார்.
அர்னாப் கோசாமியின் முறைகேடு அம்பலம் – டிஆர்பி வழக்கில் சிக்கும் தமிழ் செய்தி சேனல்?
அப்போது, “2019 ஆம் ஆண்டு, பாலாகோட்டில் நடந்த வான்வழித் தாக்குதல் குறித்த தகவல் கசிந்துள்ளது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. இராணுவ நடவடிக்கைகளின் அதிகாரபூர்வ ரகசியத்தை வெளியே கசியவிடுவது என்பது தேசத்துரோக செயல். இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் கருணை காட்டப்பட தகுதியற்றவர்கள்.” என்று ஏ.கே.ஆண்டனி கூறியுள்ளார்.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.