Aran Sei

மாணவர் அப்துல் ரஹீமை சித்தரவதை செய்த போலீஸார் – கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றுவதுதான் தண்டனையா?

காவல்துறை உங்கள் நண்பன் என்று சொல்லப்பட்டாலும் காவல்நிலையத்தின் மீதான பயம் சராசரி குடிமக்களுக்கு இருக்கவே செய்கிறது. விசாரணை, ஜெய்பீம் போன்ற திரைப்படங்கள் காவல்துறையின் குரூரத்தை நம் கண்முன் காட்டியது. இந்திய சிறைகளில் விசாரணைக் கைதிகளாக மதச் சிறுபான்மையினர், பழங்குடிகள், பட்டியலினத்தவர்கள் தான் அதிக அளவில் இருப்பதாக தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

குற்றம் செய்வதற்கென்றே தனி சாதிகள் இருப்பதாக ஆளும் வர்க்கம் வரையறுத்திருந்தது என்பதே வரலாறு. சாத்தான்குளம் ஜெயராஜ், பெலிக்ஸ் இருவரின் காவல் நிலைய மரணம் காவல்துறையின் செயல்பாட்டிற்கு நம்முன் இருக்கும் சாட்சி.

“அடித்தட்டு மக்கள் நீதி பரிபாலன வரம்புக்கு வெளியே வாழ்கிறார்கள். இதனால்,காவல்துறை சித்தரவதைகளும் காவல்துறை அத்துமீறல்களும் நிகழ்கின்றன” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

கடந்த 12 ஆம் தேதி, சேலம் மாவட்டம் ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி காவல் சித்தரவதை காரணமாக இறந்தார் என்று அவரின் குடும்பம் குற்றஞ்சாட்டுகிறது. சென்னையில் உள்ள வியாசர்பாடியைச் சேர்ந்த அப்துல் ரஹீம் என்கிற சட்டக்கல்லூரி மாணவனை கொடுங்கையூர் காவல்நிலைய காவலர்கள் அடித்து துன்புறுத்தியுள்ளதாக அவர் புகாரளித்துள்ளார்.

அப்துல் ரஹீம் காவல்துறைக்கு அளித்துள்ள புகாரில், தரமணியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் பயின்று வருவதாகவும், சம்பவம் நடந்த இரவு 11.30 மணிக்கு எம்.ஆர். ஜங்ஷனில் முகக்கவசம் அணிந்து நின்றிருந்தாகவும் கூறியுள்ளார். அப்போது வந்த இரு காவலர்கள் அவரை விசாரித்துள்ளனர். தற்போது தான் மருந்தகத்தில் பகுதிநேர வேலைப்பார்ப்பதாக கூறி அடையாள அட்டையைக் காண்பித்துள்ளார். இருப்பினும் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துப் போன காவலர்கள் மிக மோசமாக நடத்தியுள்ளார்கள். ”வக்கீல எல்லாம் இப்படித்தான் அம்மனமா ஆக்கி ஸ்டேஷன்ல வச்சி அடிக்கனும்” என்று சொல்லி அவரை நிர்வானமாக அமர வைத்ததாக தன்னுடைய புகார் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கடிதம் பகுதி 1
கடிதம்: பகுதி 2

 

மேலும், மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் காவலர்கள் தன்னை கொடுமை படுத்தியுள்ளனர். காவலர்கள் தாக்கியதில் காயம் ஏற்பட்டது, ரத்தம் வழிவதை துடைக்கும்போது தன்மீது காவலர்கள் சிறுநீர் பாய்ச்சியதாகவும் தெரிவித்துள்ளார். மருத்துவமனைக்கு சென்றபோது கீழே விழுந்து காயம் ஏற்பட்டது என்று கூறச்சொல்லி காவல்துறை நிர்பந்தித்தனர் என்று ரஹீம் கூறியுள்ளார். காவல்துறையினர் தாக்கியதில் கண்ணுக்கு அருகில் ஆறு தையல் போடுமளவு காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது கண் சரியாக தெரியவில்லை என்று புகாரில் தெரிவித்துள்ளார்.

காவல் நிலையத்தில் சித்தரவதை செய்யப்பட்ட அப்துல் ரஹீம் – சீமான் கண்டனம்

இது குறித்து அரண்செய்யிடம் பேசிய  ரஹீம்மின் நண்பர், முதலில் ரஹீம் கொடுத்த புகாரை காவல்துறை ஏற்க மறுத்துள்ளது. பின்னர் போராட்டத்தின் காரணமாக காவல்துறையினர் புகாரை ஏற்றுள்ளனர். தாக்கப்பட்டதாகக் கூறப்படும் காவலர்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ரஹீமின் செல்போன் உள்ளிட்டவை காவல் நிலையத்திலேயே உள்ளது என்று தெரிவித்தார்.

சட்டம், ஒழுங்கு என்கிற பெயரில் காவல்துறையினர் சிலர் வெகுமக்களிடம் மிக மோசமாக நடந்து கொள்வது தொடர்கதையாகியுள்ளது. தமிழ்நாட்டின் உள்துறை அமைச்சராக இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய துறையை சீர் செய்ய வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

இச்சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்- மா. சந்துரு

மாணவர் அப்துல் ரஹீமை சித்தரவதை செய்த போலீஸார் – கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றுவதுதான் தண்டனையா?

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்