உத்தரப்பிரதேச அரசு `லவ் ஜிகாத்துக்கு’ எதிரான சட்டத்தை முறையாக ஏற்றுக்கொண்ட சில நாட்களுக்குப் பிறகு, இந்து ஜாகரன் மன்ச் அமைப்பு, திரிபுராவில் இதே போன்ற ஒரு சட்டத்தை ஏற்ற வேண்டும் எனக் கோரியுள்ளது. திருமணத்தின் பெயரில் கட்டாய மத மாற்றங்களின் போக்கு அதிகரித்துவருவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
இஸ்லாமிய இளைஞர், இந்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதற்கு உள்நோக்கம் கற்பிக்கும் இந்துத்துவா வலது சாரிகள் அதை ‘லவ் ஜிகாத்’ என்று அழைக்கிறார்கள்.
திரிபுராவின் கோமதி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை மறித்து இந்து ஜாகரன் மன்ச் எனும் இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘லவ் ஜிகாத்தில்’ குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்யக் காவல்துறை மற்றும் நிர்வாகம் தவறியதாகக் கூறி அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பொதுமுடக்கத்திலிருந்து குறைந்தது ஒன்பது சம்பவங்கள் புகார் செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் அது கூறியுள்ளது.
திரிபுராவில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து ஜாகரன் மஞ்ச் அமைப்பின் மாநில தலைவர் உத்தம் டே, ‘லவ் ஜிகாத்’ சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் என்று தெரிவித்துள்ளார்.
“இந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட பின்னர், குறைந்தது ஒன்பது வழக்குகள் மாநிலம் முழுவதும் பதிவாகியுள்ளன. இருப்பினும், இந்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரைக்கூட காவல்துறை கைது செய்யவில்லை. இதை எதிர்த்து, நாங்கள் தேசிய நெடுஞ்சாலையை (என்எச் 8-ஐ) முற்றுகையிட்டோம். ஒரு சட்டத்தால் மட்டுமே லவ் ஜிகாத்தின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த முடியும்” என்று உத்தம் டே கூறியுள்ளார்.
அப்போது, பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி, இந்து ஜகரன் மஞ்ச் கூறிய குற்றச் சாட்டுகளை மறுத்துள்ளார். கடந்த நான்கு மாதங்களில் திரிபுராவில் எந்தக் காவல் நிலையத்திலும் ‘லவ் ஜிகாத்துக்கு’ எதிராக வழக்கு பதிவாகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இரண்டு வாரங்களுக்கு முன் பிஷல்கர் காவல் நிலையத்தில் ஒரு இஸ்லாமிய ஆண் ஒரு இந்து பெண்ணைக் கடத்தியதாகப் புகார் அளிக்கப்பட்டது என்று காவலர்கள் தெரிவித்துள்ளனர். இருவரும் விமானம் வழியாகப் பெங்களூருக்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆனால், அந்தப் பெண் மேஜர் என்றும், அந்த நபருடன் விருப்பப்பட்டுதான் அவர் பயணம் செய்தார் என்றும் அதற்குப் பின் தெரியவந்ததாகக் காவலர்கள் கூறியுள்ளனர்.
இதேபோன்று 2018-ம் ஆண்டில் மற்றொரு இந்துத்துவா அமைப்பான விஸ்வ இந்து பரிஷத், திரிபுராவின் தெற்கு மாவட்டத்தின் செங்கல் சூளையில் பணிபுரிபவர்களும் பங்களாதேஷில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களும், ‘லவ் ஜிகாத்’ மற்றும் பசுவதை ஆகியவற்றில் ஈடுபடுவதாகக் கூறியது. இந்தக் குற்றசாட்டுகளை நிரூபிக்க அது எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.