அயோத்தி ராமரின் பெயரில், நாடு முழுவதும் மத ஊழல் நடப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி, கோயில் கட்டுவதற்காக வசூலிக்கப்படும் நன்கொடை, உண்மையிலேயே கோவில் கட்டுமான நிதியாக விஸ்வ இந்து பரிஷத் அமைப்பை சென்றடையும் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிப்பிரவரி 15 ஆம் தேதி, மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்திற்காக நன்கொடைகளை வசூலிப்பவர்கள், பணம் கொடுத்தவர்களின் வீடுகளையும், பணம் கொடுக்காதவர்களின் வீடுகளையும் தனித்தனியாக அடையாளமிட்டு வருவதாகத் தெரிகிறது. இது ஜெர்மனியில் லட்சக்கணக்கான மக்கள் கொலை செய்யப்பட்ட, ஹிட்லரின் ஆட்சியின் போது, நாஜிக்கள் செய்ததைப் போன்றுள்ளது.” என்று விமர்சித்திருந்தார்.
குமரரசாமியின் இந்த கருத்திற்கு, இந்து அமைப்புகளின் தலைவர்களும், பாஜக தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று (பிப்பிரவரி 17) செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ள எச்.டி.குமாரசாமி, “இந்த நாட்டில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிதி திரட்டினால், அரசிற்கு அதன் தரவுகளை சமர்பிக்க வேண்டும். நன்கொடைகளை இணையவழியாக கூட செலுத்தலாம் என்ற வழிமுறை வந்துவிட்டது. தற்போது, அனைவருக்கும் வங்கி கணக்கு உள்ளது. மேலும், ஜன்தன் திட்டத்தின் கீழும் மக்களுக்கு வங்கி கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன… இந்த வழிமுறையானது வீடுகளில் தனித்தனி அடையாளமிடுதலை தடுக்கக்கூடும். யாரிடம் நன்கொடை வாங்குகிறீர்களோ அவர்களிடம் அடையாள அட்டைகள் எதுவும் நீங்கள் கேட்பதில்லை. அவர்கள் யாரென்றே உங்களுக்குத் தெரியாது. நான் அவர்களுக்கு பரிந்துரைத்திருப்பது ஒன்றைத்தான். நன்கொடை வசூலிப்பதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
“நான் ராமரை அவமதித்தேனா? நீங்கள் தான் அவரை தவறாக பயன்படுத்தியிருக்கிறீர்கள். நான் பாஜகவையோ அல்லது விஷ்வ இந்து பரீஷித் அமைப்பையோ அல்லது வேறு எந்த அமைப்புகளையோ பெயர் குறிப்பிட்டு சொல்லவில்லை. ராமரின் பெயரில் தனிநபர்கள் தெருத்தெருவாக கொள்ளையடிப்பதைத் தடுக்க வேண்டும் என்று நான் பரிந்துரைத்தேன்” என்று எச்.டி.குமாரசாமி கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அயோத்தி ராமர் கோவிலுக்கு நன்கொடை வழங்குவதற்கு, அவரோ அல்லது அவரது கட்சியோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதை மீண்டும் குறிப்பிட்ட எச்.டி.குமாரசாமி, “மதசாற்பற்ற ஜனதா தள கட்சியின் பல உறுப்பினர்கள் ஏற்கனவே நன்கொடை அளித்துள்ளனர். மேலும், நன்கொடை வாங்குவதற்காக நியமிக்கப்பட்ட நபர்கள் எங்களை அணுகினால், நானும் என்னுடைய குடும்பத்தினரும் கூட நன்கொடை அளிப்போம்.” என்று அவர் விளக்கம் அளித்துள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.
பெண் விரோத, தலித் விரோத கருத்துகள் – மனுதர்மத்தை எரித்த ஏபிவிபி
“கடந்த 70 ஆண்டுகளில், இந்திய பொருளாதாரம் சீராக வளர்ந்துள்ளது. ஆனால், அந்த வளர்ச்சிக்கு பங்களித்தவர்களை நீங்கள் (பாஜக) விமர்சிக்கிறீர்கள். நாட்டில் பேச்சு சுதந்திரம் இப்போது முற்றிலுமாக பறிக்கப்பட்டுள்ளது. அரசிற்கு எதிராக பேசுபவர்கள் எல்லோரும், தேச விரோதிகள் என்று சாயம் பூசப்படுகிறார்கள். இது அறிவிக்கப்படாத அவசரநிலை காலக்கட்டம்.” என்றும் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எச்.டி.குமாரசாமி விமர்சித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.