Aran Sei

கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம்: தமிழ்நாடு அரசையும் மக்களையும் அவமதிக்கும் செயல் – எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம்

கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் கட்டுவது தமிழ்நாடு அரசையும் தமிழக மக்களையும் அவமதிக்கும் செயலாகும் என்று  சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடங்குளத்தில் 1000 மெகாவாட் கொண்ட அணுமின் அலகுகள் இரண்டு செயல்பட்டு வரும் நிலையில் மூன்று மற்றும் நான்காவது அலகுகள் அமைக்கும் பணி 2017ஆம் ஆண்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது 5வது, 6வது அலகுகளும் அமைக்கும் பணியும் சமீபத்தில் தொடங்கி இருக்கிறது.

1வது 2வது உலைகளில் இருந்து வெளியாகும் அணுக் கழிவுகளை உலைக்கு அருகிலேயே சேமிக்க அணுமின் கழகம் திட்டமிட்டிருந்த நிலையில் 2019ஆம் ஆண்டு பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்களின் எதிர்ப்பால் அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

‘கோட்சே என் வழிகாட்டி‘ – குஜராத் பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியால் சர்ச்சை

தேசிய அணுமின் கழகம் மூன்றாவது நான்காவது உலைகளின் அருகிலேயே அணுக்கழிவுகளை சேமித்து வைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

பூவுலகின் நண்பர்கள் தொடுத்த வழக்கில் 5 ஆண்டுகளுக்குள் அணுக் கழிவுகளை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் நிலை கருவூலம் அமைக்க வேண்டும் என இந்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 2016ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தை அணுகிய தேசிய அணுசக்தி கழகம் அணு உலைகளில் இருந்து வெளிவரும் கழிவுகளை 7 ஆண்டுகள் வரைக்கும் அணுஉலைக்கு கீழ் தொட்டியில் பத்திரப்படுத்தி வைக்க முடியும். ஆகையால் கூடுதலாக கருவூலம் அமைப்பதற்கான அவசியமில்லை. இருந்தாலும் அந்த முயற்சியை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தது. ஆனால் 2018 ஆம் ஆண்டு 5 ஆண்டு கால அவகாசம் முடிந்து விட்ட நிலையில் பல்வேறு தொழில்நுட்ப சவால்கள் இருப்பதால் கூடுதல் அவகாசம் வழங்கக் கோரி மனு செய்திருந்தது.

அணுக்கழிவு சேமிப்புமையம் அமைப்பதற்காக 2019 ஜூலை 10 ஆம் தேதி பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற மாசு கட்டுப்பாட்டு வாரியம் முயற்சி மேற்கொண்டது. கூடங்குளம் இடிந்தகரை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது என மாசுக்கட்டுப்பாடு வாரியம் அறிவித்தது. இதுகுறித்து பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கூட இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான வசதி இந்தியாவில் உள்ளதா என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் மறுசுழற்சிக்கு எடுத்துப் போகும்வரை அருகில் மையத்தில் சேமித்து வைக்கப்படும் என்று தெரிவித்தார்.

வெளிநாட்டு அதிபர்களுக்கு பிரியாணி ஊட்டுவதால் வெளியுறவு கொள்கை வலுக்காது – மன்மோகன் சிங்

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு அவர்களும் 7.10.2021 அன்று  ஒன்று முதல் நான்கு உலைகளில் வெளியாகும் கழிவுகளை கூடங்குளத்தில் சேமித்து வைக்கும் உத்தரவை திரும்பப்பெறக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதினார். 20.10.21 அன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் மனிதநேய மக்கள் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்தப் பிரச்சனை குறித்து விரிவாக எடுத்துரைத்து மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

நிரந்தரமாக அணுக்கழிவுகளை சேமித்து வைக்க உலக நாடுகள் திணறி வருகின்ற நிலையில் ஆழ்நிலை கருவூலம் அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்யக்கூட இன்னும் முடியாத நிலையில் அணுக்கழிவுகளை கூடங்குளத்தில் தொடர்ந்து சேமித்து வைக்க முயல்வது மிகப்பெரிய பேராபத்தை உண்டாக்கும்.

தமிழ்நாடு அரசு இந்த விஷயத்தில் உறுதியான நிலையை எடுத்த பின்னரும் அணுக்கழிவு மையம் அமைக்கும் வேலைகளைச் செய்வது என்பது தமிழ்நாடு அரசையும் தமிழக மக்களையும் அவமதிக்கும் செயலாகும்.

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கான தேசிய அணுமின் கழகம் மேற்கொண்டுவரும் அனைத்து பணிகளையும் உடனடியாக நிறுத்துவதற்கு ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு வலுவான வகையில் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தமிழக மக்களின் சூழலியல் சார்ந்த இந்த விடயத்தில் எந்தவித பரிசோதனை முயற்சிக்கும் இடமளிக்கக்கூடாது. தமிழக மக்கள் பரிசோதனை எலிகள் அல்ல.

எனவே மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஒன்றிய அரசுக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்வதோடு ஏனைய சமூக ஆர்வலர்களும் அரசியல் கட்சியினரும் இதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்வதாக சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம்: தமிழ்நாடு அரசையும் மக்களையும் அவமதிக்கும் செயல் – எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்