மீடியாஒன் மலையாள தொலைக்காட்சியின் உரிமத்தை புதுப்பிப்பதற்கான பாதுகாப்பு அனுமதியை உள்துறை அமைச்சகம் மறுத்ததையடுத்து, அதன் ஒளிபரப்பிற்கு தடைவிதிக்கும் ஒன்றிய அரசின் உத்தரவை எதிர்த்து சமர்பிக்கப்பட்ட மீடியாஒன்னின் மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இன்று(பிப்பிரவரி 8), உள்துறை அமைச்சகம் சமர்ப்பித்துள்ள கோப்புகளை ஆய்வு செய்த பின்னர், நீதிபதி என்.நாகரேஷின் அமர்வு இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
தொலைக்காட்சியின் உரிமத்தை புதுப்பிப்பதற்கான அனுமதியை மறுப்பதற்கு போதுமான காரணங்கள் இருப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மலையாள செய்தித் தொலைக்காட்சிக்கு மீண்டும் தடை – பாதுகாப்பு காரணமென ஒன்றிய அரசு விளக்கம்
“பல்வேறு புலனாய்வு அமைப்புகளின் அறிக்கைகளின் அடிப்படையில், உள்துறை அமைச்சகம் அதிகாரிகள் குழுவை அமைத்தது. இந்த தொலைக்காட்சியின் பாதுகாப்பு அனுமதியை புதுப்பிக்கக் கூடாது என்று கண்டறிந்திருக்கிறது. உள்துறை அமைச்சகம் முழு உண்மைகளையும் பரிசீலித்து, அதிகாரிகள் குழுவின் பரிந்துரைகளை ஏற்க முடிவு செய்திருக்கிறது. உள்துறை அமைச்சகத்தின் முடிவை நியாயப்படுத்தும் காரணிகள் இருப்பதை நான் காண்கிறேன். எனவே, மனுவை தள்ளுபடி செய்ய முன்மொழிகிறேன்” என்று நீதிபதி கூறியுள்ளார்.
மீடியா ஒன் தொலைக்காட்சியின் பத்து ஆண்டுகளுக்கான அனுமதியானது 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று காலாவதியாக இருந்ததால், இந்நிறுவனம் அதன் புதுப்பித்தலுக்கு கடந்த ஆண்டு மே மாதம் விண்ணப்பித்திருந்தது. 2021ஆம் ஆண்டு டிசம்பர் 29 அன்று, உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு அனுமதியை மறுத்தது. இந்த ஆண்டு ஜனவரி 5 அன்று, பாதுகாப்பு அனுமதி மறுக்கப்பட்டதைக் கருத்தில் கொண்டு அனுமதியை புதுப்பிப்பதற்கான அதன் விண்ணப்பத்தை ஏன் மூடக்கி வைக்கக்கூடாது என்று அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மலையாள செய்தி சேனலின் தடைக்கு தடை விதித்த நீதிமன்றம் – ஒன்றிய அரசு விளக்கமளிக்க உத்தரவு
ஜனவரி 31ஆம் தேதி, தொலைக்காட்சியின் ஒளிபரப்புக்கு தடை விதிக்க அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. சில மணிநேரங்களில், தொலைக்காட்சி நிர்வாகம் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அமைச்சகத்தின் உத்தரவிற்கு இடைக்கால தடை பெற்றது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட கோப்புகளை பிப்ரவரி 7ஆம் தேதி தாக்கல் செய்யுமாறு உள்துறை அமைச்சகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
2020ஆம் ஆண்டில், டெல்லி வன்முறை குறித்த செய்திகளை வெளியிட்டது தொடர்பாக மீடியாஒன் தொலைக்காட்சிக்கு 48 மணிநேர தடை விதிக்கப்பட்டது.
Source: Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.