கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நடிகர் திலீப் மீதான விசாரணையை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கக் கோரி கேரள மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது.
முன்னதாக, இவ்வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 16ஆம் தேதிக்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்திருந்தது.
அண்மையில், நடிகர் திலீப்பின் நண்பரும், மலையாள இயக்குனருமான பாலச்சந்திரன் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட காட்சிகளை திலீப் மற்றும் அவருக்கு நெருக்கமான சிலர் பார்த்தது தனக்கு தெரியும் என்று கூறியிருந்தார்.
அதைத்தொடர்ந்து, இவ்வழக்கில் புதிய விசாரணை கோரி கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு பாதிக்கப்பட்ட நடிகை கடிதம் எழுதியிருந்தார்.
அக்கடிதத்தில், இரண்டு சிறப்பு அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் இவ்வழக்கு விசாரணையின் போது ஒன்றன் பின் ஒன்றாக ராஜினாமா செய்தனர் என்றும் இவ்விலகலுக்கான காரணங்களை ஆராய வேண்டும் என்றும் அந்நடிகை கோரியிருந்தார்.
“எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை வீண் போகாமல் இருக்க, திறமையான சிறப்பு அரசுத்தரப்பு வழக்கறிஞரை விரைவில் நியமிக்க வேண்டும். திலீப் மீது இயக்குனர் பாலச்சந்திர குமார் எழுப்பிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஏன் எதுவும் செய்யவில்லை. இந்த குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும். எனக்கு நீதி வேண்டும்” என்று அந்நடிகை கூறியிருந்தார்.
இக்கடிதத்தின் நகலை கேரள மாநில காவல்துறை தலைவருக்கும் அனுப்பியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, இவ்வழக்கில் புதிய விசாரணை தொடங்கப்பட்டதை அடுத்து, மாநில அரசால் இக்கோரிக்கை உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில், பாலச்சந்திரகுமாரின் ரகசிய வாக்குமூலத்தை பதிவு செய்யக்கோரி எர்ணாகுளம் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது.
விசாரணையை நடத்தும் எர்ணாகுளம் கூடுதல் சிறப்பு அமர்வு நீதிமன்றம், ஜனவரி 20ஆம் தேதி இப்புதிய விசாரணையின் அறிக்கையை தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, கேரள அரசால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், புதிய விசாரணை தொடங்கியுள்ளதால், வழக்கின் மொத்த விசாரணையை கெடு விதிக்கப்பட்ட நாளுக்குள் முடிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், பாதிப்புக்குள்ளான மலையாள நடிகையை, நடிகர் திலீப் கடத்தித் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், திலீப் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், நடிகர் திலீப் பிணையில் விடுதலையானார்.
Source: New Indian Express, Malayala Manorama
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.