கல்லூரி வளாகத்தில் ஹிஜாப் அணியக் கூடாது என்று கூறியதால், கர்நாடகாவில் தனியார் கல்லூரி பேராசிரியை, தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.
கர்நாடக மாநிலம் துமகூரு நகரில் உள்ளது ஜெயின் பியூ கல்லூரி. இந்தக் கல்லூரியில் ஆங்கிலத்துறையில், பேராசிரியராக பணியாற்றி வந்தவர் சாந்தினி நஸ். ஹிஜாப் அணிய கல்லூரி நிர்வாகம் தடை விதித்த்தாக கூறி தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார். மேலும், “ஹிஜாப் அணிவது அரசியல் சாசனம் கொடுத்திருக்கும் உரிமை; அதை யாராலும் தடுக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
“இந்தக் கல்லூரியில், நான் கடந்த 3 ஆண்டுகளாக ஹிஜாப் அணிந்து வந்துதான் பாடம் எடுத்து வந்தேன். தற்போது இதை அகற்றும்படி கூறுவதால், எனது விரிவுரையாளர் பணியை ராஜினாமா செய்து கொள்கிறேன். மதம் சார்ந்த உரிமைகளை பின்பற்ற அரசியல் சாசனம் அனுமதிப்பதை, யாராலும் மறுக்க முடியாது. ஜனநாயகமற்ற உங்களின் செயலை கண்டிக்கிறேன்” என்று இந்தியன் எக்ஸ்பிரஸிடம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “கடந்த மூன்று ஆண்டுகளாக, ஜெயின் பியூ கல்லூரியில் சிறப்பு விரிவுரையாளராக இருந்துள்ளேன். எந்தப் பிரச்சினையும் இந்தக் காலகட்டத்தில் வந்ததில்லை. மிகவும் நன்றாகவே வேலைப் பார்த்து வந்தேன். ஆனால், நேற்று காலை கல்லூரி முதல்வர் என்னை அழைத்து, தங்களுக்கு வந்துள்ள உத்தரவுப்படி, நான் ஹிஜாப்போ அல்லது வேறு மத அடையாளத்துடனோ வந்து, பாடம் நடத்தக் கூடாது என்று கூறினார். இந்தப் புதிய உத்தரவு எனது சுய மரியாதையை பாதிப்பதாக உள்ளது. எனவே, நான் ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளேன்” என்று காணொளி ஒன்றையும் பதிவு செய்து, பேராசிரியை சாந்தினி வெளியிட்டுள்ளார்.
In her resignation letter, Chandini wrote, "Right to religion is a constitutional right which no one should be denied."https://t.co/ViA7m9WfVb pic.twitter.com/sW73VQa2n2
— Express Bengaluru (@IEBengaluru) February 18, 2022
இது குறித்து தெரிவித்துள்ள கல்லூரி முதல்வர் கே.டி. மஞ்சுநாத், இது ஒரு தனியார் கல்லூரி நிர்வாகம் என்ன சொல்கிறதோ அதைக் கடைப்பிடிக்க வேண்டும். பேராசிரியர் சாந்தினியின் குற்றஞ்சாட்டு நியாயமற்றது. நானோ அல்லது வேறு யாருமோ ஹிஜாப் அணியக் கூடாது என்று அவரிடம் கூறவில்லை. மாணவர்கள் மட்டும் தான் ஹிஜாப் உள்ளிட்ட மத அடையாளங்களை அணிந்துவர கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பிறருக்கு அல்ல என்றும் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.