பாஜக மூத்த தலைவரும், கர்நாடக மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்ஜிய அமைச்சருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா, “காவிக்கொடி எதிர்காலத்தில் தேசியக் கொடியாக மாறலாம்” என்று தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள கே.எஸ்.ஈஸ்வரப்பா, “நூறு ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீராமசந்திரர்(ராமர்), மாருதி(அனுமர்) ஆகியோரின் தேர்களில் காவிக்கொடி இருந்தது. அப்போது நம் நாட்டில் மூவர்ண கொடி இருந்ததா? இப்போது அது (மூவர்ண கொடி) நமது தேசியக் கொடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதை இந்த நாட்டில் உணவு உண்ணும் ஒவ்வொருவரும் கொடுக்க வேண்டும். இதற்கு மாற்றுக் கருத்தே இல்லை” என்று கூறியுள்ளார்.
ஹிஜாப் விவகாரம்: பல்கலைக்கழக கொடிக்கம்பத்தில் காவிக்கொடி ஏற்றிய வலதுசாரிகள் – வன்முறை; ஊரடங்கு
டெல்லி செங்கோட்டையில் காவிக்கொடி ஏற்ற முடியுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், “இன்றில்லை, எதிர்காலத்தில் என்றாவது ஒரு நாள் நடக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“இன்று நாட்டில் ‘இந்து விசாரா’, ‘இந்துத்வா’ பற்றி விவாதங்கள் நடக்கின்றன. அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று சொன்னபோது மக்கள் ஒரு கட்டத்தில் சிரித்தார்கள். ஆனால், தற்போது அதைக் கட்டிக்கொண்டிருக்கிறோம் இல்லையா? அதே போல எதிர்காலத்தில், 100 அல்லது 200 அல்லது 500 ஆண்டுகளுக்குப் பிறகு, பகவ த்வஜ்(காவிக் கொடி) தேசியக் கொடியாக மாறலாம்” என்று கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.
பாபர் மசூதியை தொடர்ந்து தாஜ்மஹாலை குறிவைக்கும் வலதுசாரிகள் – காவிக்கொடி ஆட்டியவர்கள் கைது
“காவிக் கொடியை ஏற்றுபவர்கள் நாம், இன்றல்ல, எதிர்காலத்தில் இந்து தர்மம் இந்த நாட்டிற்கு வரும்போது, செங்கோட்டையில் காவிக் கொடியை ஏற்றுவோம். தற்போது மூவர்ணக் கொடியானது அரசியலமைப்பின்படி தேசியக் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு மதிப்பளிக்கப்பட வேண்டும். மதிக்காதவர்கள் தேசத் துரோகிகளாகி விடுவார்கள்” என்று கே.எஸ்.ஈஸ்வரப்பா கூறியுள்ளார்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.