Aran Sei

கர்நாடகா: பாஜக அரசுக்கெதிராக லிங்காயத் சமூகம் இட ஒதுக்கீடு கேட்டு மாபெரும் போராட்டம் – பாஜக எம்.எல்.ஏ தலைமையில் 1 லட்சம் பேர் பங்கேற்பு

ர்நாடகாவில் லிங்காயத் சமூகத்தின் பஞ்சமசாலி பிரிவைச் சேர்ந்த, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், ‘கல்வி மற்றும் அரசு வேலையில், ‘2A’ (15 சதவீதம் இட ஒதுக்கீடு பிரிவு) என்ற இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்’ என, வலியுறுத்தி பெலகாவியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், 2023 தேர்தலில் எங்கள் முடிவு என்ன என்பது தெரியும் என்று லிங்காயத் மடாலய தலைவர் ம்ருத்யுநய சுவாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடகா: பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு 18-ல் இருந்து 24% ஆக உயர்த்தப்படும் – அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு

கர்நாடக மாநிலத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் மிகப்பெரிய சமூகமாக உள்ள லிங்காயத் சமூகத்தை சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர், பாஜக அரசுக்கு எதிராக பெரும் போராட்டத்தை துவங்கியுள்ளது, கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையான, 6.5 கோடியில் 18 சதவீதத்துக்கும் மேல், லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். மொத்தமுள்ள, 224 தொகுதிகளில், 90 தொகுதிகளுக்கு மேல் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். கர்நாடக அரசியலை தீர்மானிக்கும் பல சமூகங்களில், லிங்காயத் மக்கள் முதன்மையானவர்கள். தற்போது, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில், 5 சதவீதம் இட ஒதுக்கீடு பெறும் ‘3B’ பிரிவில் உள்ளனர்.

கர்நாடகா: இந்துக் கடவுள் சிலையை தொட்ட பட்டியல் சமூக சிறுவனுக்கு ரூ.60,000 அபராதம் – தலித் அமைப்புகள் போராட்டம்

இந்த நிலையில், நேற்று (டிசம்பர் 22) காலை முதல், லிங்காயத் சமூகத்தின் பஞ்சமசாலி பிரிவைச் சேர்ந்த, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், ‘கல்வி மற்றும் அரசு வேலையில், ‘2A’ (15 சதவீதம் இட ஒதுக்கீடு பிரிவு) என்ற இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்’ என, வலியுறுத்தி பெலகாவியில் போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர்.

பாஜக சட்டமன்ற உறுப்பினர் பசானாகெளவுடா பட்டில் மற்றும் லிங்காயத் மடாலய தலைவர் ம்ருத்யுநய சுவாமி தலைமையில், போராட்டக்காரர்கள் கர்நாடக மாநிலம், பெலகாவியில், குளிர்கால சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும் சுவர்ண விதான சவுதா அருகே போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பத்திரிகையாளர்களிடம் பேசிய லிங்காயத் மடாலய தலைவர் ஜகத்குரு ஸ்ரீ பசவ ஜெய ம்ருத்யுநய சுவாமி, “கர்நாடகத்தில் நாங்கள், 1.3 கோடி பேர் உள்ளோம். லிங்காயத் சமூகத்திலேயே நாங்கள் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளோம். எங்கள் சமூகத்தில், 22 சட்டமன்ற உறுப்பினர்கள், 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 4 சட்டமேலவை உறுப்பினர்கள் உள்ளனர். நாங்கள்தான் தற்போதைய பாஜக அரசின், 80 விழுக்காடு வாக்கு வங்கி. பல ஆண்டுகளாக, இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கோரிக்கை வைத்து வருகிறோம். எங்களை, 2-ஏ பிரிவுக்கு மாற்றி, கல்வி மற்றும் அரசு வேலைகளில் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

இந்தி திணிப்பை எதிர்க்கும் கர்நாடகா – அரசு சார்பில் இந்தி தினம் கொண்டாட க‌ன்னட அமைப்பினர் எதிர்ப்பு

எடியூரப்பா தலைமையிலான அரசு எங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கவில்லை, அதனால்தான், அந்த அரசு கலைந்தது. தற்போது, முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு தொடர்ந்து வாக்குறுதி மட்டுமே கொடுக்கிறது, இதுவரை எங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கவில்லை. பசவராஜ் பொம்மை எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், 2023 தேர்தலில் எங்கள் முடிவு என்ன என்பது தெரியும்” என, பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுத்து பேட்டியளித்துள்ளார்.

தேர்தல் நெருங்கும் நிலையில் லிங்காயத் சமூகம், தங்களுக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ளதால், கர்நாடக பாஜகவினர் கலக்கத்தில் உள்ளனர் என்று கூறப்படுகிறது.

Source : NDTV

டாக்டர் சர்மிகாவின் சங்கி மூளை | டெய்சி அக்காவின் வளர்ப்பு அப்படி | Aransei Roast | Dr Sharmika

கர்நாடகா: பாஜக அரசுக்கெதிராக லிங்காயத் சமூகம் இட ஒதுக்கீடு கேட்டு மாபெரும் போராட்டம் – பாஜக எம்.எல்.ஏ தலைமையில் 1 லட்சம் பேர் பங்கேற்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்