கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்த பாஜக அரசு சமூக அறிவியல் மற்றும் கன்னட மொழி பாடப்புத்தகங்களை ஆய்வு செய்ய ரோஹித் சக்ரதீர்த்தா தலைமையிலான பாடப்புத்தகங்கள் திருத்தக் குழு அமைத்தது. இக்குழு அண்மையில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான சமூக அறிவியல் பாடப்புத்தகங்கள் மற்றும் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான கன்னட மொழி பாடப்புத்தகங்களை மாற்றியமைத்தது.
மாற்றியமைக்கப்பட்ட பாடப்புத்தகத்தில் ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெட்கோவரின் உரை சேர்க்கப்பட்டுள்ளது மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளான பெரியார், நாராயண குரு மற்றும் பகத் சிங் பற்றிய பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவில் மிக பிரபலமான குவெம்பு என்ற புனைப்பெயரால் அழைக்கப்படும் கே. வி. புட்டப்பாவை அவதூறுபடுத்தும் வகையில் தவறான அத்தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ராஷ்டிரகவி டாக்டர் ஜி.எஸ்.சிவருத்ரப்பா பிரதிஷ்டானாவின் தலைவராக இருந்த எழுத்தாளர் எஸ்.ஜி.சித்தராமையா மற்றும் எழுத்தாளர்களான எச்.எஸ்.ராகவேந்திரா ராவ், நடராஜ புடாலு மற்றும் சந்திரசேகர் நங்லி ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வது தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
“கர்நாடக மாநிலத்தின் கல்வி, கலாச்சாரம் மற்றும் அரசியல் தளங்களில் அரங்கேறியுள்ள அரசியலமைப்பிற்கு முரணான தாக்குதல் மற்றும் ஒடுக்குமுறை ஆகியவை எங்களைக் கவலையடையச் செய்துள்ளது. மாநில மற்றும் கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் வகுப்புவாத வெறுப்பை பகிரங்கமாகத் தூண்டிவிட்டவர்கள் மீதான பாஜக அரசின் மெளனம் மற்றும் நடவடிக்கை எடுக்கா தன்மை என்பது எங்களுக்குக் கவலையும் அச்சத்தையும் கொடுத்துள்ளது” என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
பிரபல கல்வியாளர் வி.பி.நிரஞ்சனராத்யா தேசிய கல்விக் கொள்கை 2020 இல் வேலை செய்வதற்காக மாநில அரசு விடுத்த அழைப்பை நிராகரித்துள்ளார். “கர்நாடக அரசு கல்வியை வகுப்புவாத மயமாக்கவும், காவிமயமாக்கவும் முயற்சிக்கிறது. இது அரசியலமைப்பிற்கு விழுமியங்களுக்கு ஆதரவாக நிற்பதால் இதனை நான் புறக்கணிக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பல முற்போக்கு எழுத்தாளர்களும் வழக்கறிஞர்களும் நேற்று (மே 30) ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முக்கிய வழக்கறிஞர்கள் ஏ.பி.ரங்கநாத், சி.எச்.ஹனுமந்தராயா உள்ளிட்டோர் கலந்து கொண்டு, சக்ரதீர்த்தா தலைமையிலான பாடநூல் மறு ஆய்வுக் குழுவை ரத்து செய்ய வேண்டும். பரகுரு ராமச்சந்திரப்பா குழுவால் இறுதி செய்யப்பட்ட பாடப்புத்தகங்களை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் கர்நாடகாவில் மிக பிரபலமான குவெம்பு என்ற புனைப்பெயரால் அழைக்கப்படும் கே. வி. புட்டப்பா மற்றும் கர்நாடக மாநிலத்தின் கீதத்தை இழிவுபடுத்திய சக்ரதீர்த்தா மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாடப்புத்தக திருத்தக் குழு மற்றும் அதன் தலைவர் ரோஹித் சக்ரதீர்த்தா ஆகியோருக்கு எதிரான போராட்டங்கள் கர்நாடகாவில் தீவிரமடைந்துள்ள நிலையில் ரோஹித் சக்ரதீர்த்தா தலைமையிலான பாடப்புத்தக மறு ஆய்வுக் குழுவை இரத்துச் செய்யக் கோரியும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் பி.சி நாகேஷ் பதவி விலகக் கோரியும், முற்போக்கு மாணவர் அமைப்புகளின் கூட்டணி இன்று சுதந்திர பூங்காவில் ஒரு கண்டனப் பேரணியை நடத்தவுள்ளது.
Source : The Wire
தமிழ்நாட்டை குறிவைக்கும் அண்ணா ஹசாரேக்கள் I Maruthaiyan Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.