Aran Sei

கர்நாடகா: இந்து மாணவர்கள்மீது பைபிள் திணிப்பதா? கிறிஸ்துவ பள்ளிமீது இந்து அமைப்பு புகார் – முன்னாள் மாணவர்கள் மறுப்பு

ர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் உள்ள கிறிஸ்தவ பள்ளி ஒன்றில் மாணவர்கள் பைபிளை கொண்டு வந்து படிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுவதாக, ஹிந்து ஜனஜக்ருதி சமிதி என்ற அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அப்புகாரை அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் நிராகரித்துள்ளனர்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஹிந்து ஜனஜக்ருதி சமிதி, “கிளாரன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கு முன்பு, பைபிளைப் போதிப்பது குறித்த உறுதிமொழியில் பெற்றோர்கள் கையெழுத்திட வேண்டும் எனவும், தோத்திரங்கள் பாடுவதையும், திருமறை வகுப்புகளில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் பள்ளி நிர்வாகம் கட்டாயமாக்கியுள்ளது” என்று குற்றம் சாட்டியுள்ளது.

இக்குற்றச்சாட்டு தொடர்பாக ஏழு நாட்களில் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பெங்களூரு மாவட்ட ஆட்சியருக்கு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

புல்டோசர் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்த கர்நாடகா ஒன்றும் உத்திரபிரேதம் அல்ல: கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் கருத்து

இக்குற்றச்சாட்டு குறித்து பேசியுள்ள அப்பள்ளியின் முதல்வர் ஜார்ஜ் மேத்யூ, “இந்த பள்ளியில் பைபிள் 100 ஆண்டுகளாக கற்பிக்கப்படுகிறது. எங்கள் பள்ளியின் ஒரு கொள்கை குறித்து சிலர் அதிருப்தி அடைந்திருப்பது குறித்து நாங்கள் அறிந்துள்ளோம். நாங்கள் அமைதியை விரும்பும் மற்றும் சட்டங்களை மதிக்கும் பள்ளிக்கூடம். இந்த நாட்டின் சட்டத்தை நாங்கள் மீறமாட்டோம். இந்த பொய் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது குறித்த சட்ட ஆலோசனையை பெற்றுவருகிறோம்” என்று பிபிசி இந்தியிடம் தெரிவித்துள்ளார்.

ஹிந்து ஜனஜக்ருதி சமிதி அமைப்பின் செய்தி தொடர்பாளர் மோகன் கவுடா பேசுகையில், “கிறிஸ்தவ மதம் அல்லாத மாணவர்கள்மீது அவர்களின் மத நம்பிக்கைகளுக்கு முரணானதை இந்த பைபிள் கல்வி திணிக்கிறது” என்று கூறியுள்ளார்.

அப்பள்ளியின் முன்னாள் மாணவர் கேஷவ் ராஜண்ணா பிபிசி இந்தியிடம் பேசுகையில், “நான் பள்ளிக்கு பைபிள் மற்றும் தோத்திர பாடல் புத்தகத்தை எடுத்துச் செல்வேன். என்னுடைய குழந்தைகள் தற்போது அதே பள்ளியில் படிக்கின்றனர். என்னுடைய உடன் பிறந்தவர்களும் அங்குதான் படித்தனர், அவர்களின் குழந்தைகளும் அங்குதான் படிக்கின்றனர். ஆனால், நாங்கள் இன்னும் இந்துக்களாகத்தான் உள்ளோம். நாங்கள் மதம் மாற்றப்பட மாட்டோம்” என்று கூறியுள்ளார்.

கர்நாடகா 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: ஹிஜாப் தடைக்கு எதிராக போராடிய இருவர் ஹிஜாபுடன் வந்ததால் தேர்வெழுத அனுமதி மறுப்பு

மற்றொரு முன்னாள் மாணவரான அர்ச்சனா பிரகாஷ் பேசுகையில், “என் குடும்பத்தில் மூன்று தலைமுறையாக கிளாரன்ஸ் பள்ளியில் படிக்கிறோம். என்னுடைய மூத்த மகன் அங்கு தான் பள்ளிப்படிப்பை முடித்தான். என்னுடைய இரண்டாவது மகன் அங்கு உயர்நிலைப்பள்ளியில் படிக்கின்றான். நாங்கள் இந்து மத நடைமுறையை பின்பற்றுபவர்கள். பள்ளி நாட்களின் நினைவுகளின்போதுதோத்திரங்களை பாடுவது எனக்குப் பிடிக்கும். நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தோத்திரங்களை ஆர்வத்துடன் பாடுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source: BBC Tamil, BBC Hindi.

கர்நாடகா: இந்து மாணவர்கள்மீது பைபிள் திணிப்பதா?  கிறிஸ்துவ பள்ளிமீது இந்து அமைப்பு புகார் – முன்னாள் மாணவர்கள் மறுப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்