ஆதார் அட்டை இல்லாததால் அரசு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டதால் தமிழகத்தை சேர்ந்த கர்ப்பிணி, இரட்டை ஆண் குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் துமகூரு நகரின் பாரதிநகர் ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் வசித்து வந்தவர் கஸ்தூரி (வயது 30). தமிழகத்தை சேர்ந்த இவர் தனது 7 வயது மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவரது கணவர் நோய்வாய்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கஸ்தூரிக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அக்கம்பக்கத்தினர் கஸ்தூரியை மீட்டு துமகூரு நகரில் உள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.
கர்நாடகா: போக்குவரத்து வசதி இல்லாததால் 8 கி.மீ தூரம் கர்ப்பிணியை தொட்டில் கட்டி சுமந்து சென்ற அவலம்
அப்போது அந்த ஆஸ்பத்திரியில் பணியிலிருந்த மருத்துவரான உஷா என்பவர், கஸ்தூரியிடம் தாய் அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை கேட்டு உள்ளார். ஆனால் கஸ்தூரியிடம் அந்த 2 அட்டைகளும் இல்லை என்று தெரிகிறது. இதனால் பிரசவ வலியில் கஸ்தூரி துடித்த போதிலும் மருத்துவமனையில் அனுமதிக்க மருத்துவர் உஷா மறுத்ததாக சொல்லப்படுகிறது. மேலும் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படியும் உஷா கூறியதாக தெரிகிறது.
ஆனால் கஸ்தூரியை அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு அழைத்துச் சென்று உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை கஸ்தூரிக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது, அங்கு கண்ட காட்சியை பார்த்து அவர்கள் அதிர்ந்து போயினர்.
அங்கு கஸ்தூரியும், இரட்டை ஆண் குழந்தைகளும் பிணமாக கிடந்தனர். அதாவது, ஒரு ஆண் குழந்தை முழுமையாக வெளி வந்த நிலையிலும், மற்றொரு ஆண் குழந்தை பாதி வெளியே வந்த நிலையிலும் இருந்தது. அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டு கஸ்தூரி பிணமாக கிடந்தார். மேலும் இரட்டை ஆண் குழந்தைகளும்பரிதாமாக உயிரிழந்தது. இதனை பார்த்து அக்கம்பக்கத்தினரும், உறவினர்களும் கதறி அழுதனர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் துமகூரு நகர காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மருத்துவ அதிகாரிகளும் விரைந்து சென்றனர். இதுபற்றி அறிந்ததும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி மஞ்சுநாத்தும், கஸ்தூரியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது ஆதார் அட்டை இல்லாததால் கஸ்தூரியை, மருத்துவர் உஷா மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததும் தெரியவந்தது. மேலும் 3 உயிர்கள் பலியாக காரணமாக இருந்த மருத்துவர் உஷா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மஞ்சுநாத்திடம், கஸ்தூரியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சாதி மறுப்பு திருமணம்: மூன்று மாத கர்ப்பிணிக்கு வலுகட்டாயமாக கருக்கலைப்பு
இந்த நிலையில் மஞ்சுநாத் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், “துமகூருவில் தாய், இரட்டை ஆண் குழந்தைகள் இறந்த சம்பவம் பற்றி எனது கவனத்திற்கு வந்து உள்ளது. ஆதார் அட்டை இல்லாத காரணத்தால் மருத்துவர் உஷா, கஸ்தூரியை மருத்துவமனையில் அனுமதிக்காதது தெரியவந்து உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கவும், பணி இடமாற்றம் செய்யவும் துமகூரு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்வேன் என்று கூறினார்.
மேலும், கஸ்தூரியை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால், அக்கம்பக்கத்தினர் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் இந்த விபரீதம் நடந்ததா? என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். எனினும், இரட்டை ஆண் குழந்தைகளுடன், கஸ்தூரி உயிரிழந்தது மர்மமாக உள்ளது. இந்த சம்பவம் துமகூரு மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Source : deccanherald
பாஜக சங்கி சூர்யாவின் ரவுடித்தனம் | புணர்தலா? ரெட்டியின் ஆபாச ட்வீட் | Aransei Roast | BJP
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.