கர்நாடக மாநிலத்தில் உள்ள இரண்டு கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்த இஸ்லாமிய மாணவிகளுக்கு வகுப்பிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் குறித்து பேசியுள்ள பாஜகவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் பிரதாப் சிம்ஹா, ஹிஜாப் அணிந்த மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதற்குப் பதிலாக அரசு நிதி ஒதுக்கியுள்ள மதரஸாவுக்குச் செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
நேற்று(பிப்பிரவரி 5), செய்தியாளர்களிடம் பேசியுள்ள பிரதாப் சிம்ஹா, “எல்லோரும் கல்லூரிக்கு வருவது நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், இந்த மாணவர்கள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர விரும்புகிறார்கள். நீங்கள் விரும்பினால், ஹிஜாப் அல்லது பர்கா அணியுங்கள். அல்லது குள்ளா அல்லது பைஜாமா அணியுங்கள். ஆனால், அவற்றை அணிந்து பள்ளிக்குச் செல்ல வேண்டாம். மதரஸாவுக்குச் செல்லுங்கள். உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மதரஸாக்களை நடத்துவதற்கு அரசு நிதி ஒதுக்கியுள்ளது. நீங்கள் அங்கே போங்கள்” என்று கூறியுள்ளார்.
‘ஹிஜாப் அணிந்த எங்களை வகுப்புக்கு அனுமதியுங்கள்’- கல்லூரி முதல்வரிடம் உரிமை கோரும் இஸ்லாமிய மாணவிகள்
முன்னதாக, இவ்விவகாரம் குறித்து பேசியுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா, பல ஆண்டுகளாக ஹிஜாப் நடைமுறையில் இருக்கும் போது காவி துண்டு அணிவது புதியது என்றும் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசாங்கம் மாணவர்களின் கல்வியை பறிக்கிறது என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
சித்தராமையாவின் கருத்து குறித்து பேசியுள்ள பிரதாப் சிம்ஹா, ‘சித்தா ரஹீம் ஐயா’வாக மாற்றிக்கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
பிப்ரவரி 4 ஆம் தேதி, கர்நாடகாவின் உடுப்பியில் உள்ள இரண்டு கல்லூரிகள் ஹிஜாப் அணிந்த மாணவிகள் வகுப்பறைகள் நுழைய கல்லூரி நிர்வாகங்கள் அனுமதி மறுத்தன. அதைத்தொடர்ந்து, இவ்விவகாரம் அம்மாநிலத்தில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Source: ANI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.