கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் மூன்று வாரமாக, ஹிஜாப் அணிந்த மாணவிகள் வகுப்பறைக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி முதல், இந்த ஆறு மாணவிகளும் ஹிஜாப் அணிந்திருப்பதினால் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படாமல், ‘ஆப்சென்ட்’ என வருகைப்பதிவேட்டில் குறிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களின் பெற்றோர்கள் கல்லூரியை அணுகியபோது, கல்லூரி முதல்வர் ருத்ரா கவுடா இவ்விவகாரம் தொடர்பாக எந்த விவாதமும் நடத்த மறுத்துவிட்டார் என்றும் தி ஹிந்துஸ்தான் கெசட் செய்தி வெளியிட்டுள்ளது.
கேம்பஸ் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா, பெண்கள் இஸ்லாமிய அமைப்பு ஆகியவை கல்லூரி அதிகாரிகளையும் மாவட்ட ஆட்சியரையும் அணுகி, இவ்விவகாரத்தை தீர்க்கக் கோரியும், மாணவிகள் இன்னும் வகுப்பறைகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
கேம்பஸ் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலக் குழு உறுப்பினர் மசூத், தி ஹிந்துஸ்தான் கெசட்டிடம் கூறுகையில், மாணவிகள் கடந்த 15 நாட்களாக வகுப்புகளுக்குச் செல்லவில்லை என்று கடிதம் எழுதச் சொல்லி மிரட்டப்பட்டதாகக் கூறியுள்ளார்.
“நீங்கள் கடிதம் எழுதாவிட்டால், உங்களை கடிதம் எழுத வைப்பது எப்படி என்று எங்களுக்குத் தெரியும் என கல்லூரி முதல்வர், விரிவுரையாளர்களுடன் சேர்ந்து மாணவிகளை மிரட்டியதால், மன உளைச்சலுக்கு ஆளான மாணவி ஒருவர் நோய்வாய்ப்பட்டுள்ளார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“இந்தச் சம்பவம் நமது அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள மதச் சுதந்திரத்தைப் பறிக்கும்படி உள்ளது. இந்து மாணவிகள் நெற்றிப்பொட்டு வைப்பது போலவும், கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் தலையில் முக்காடு அணிவது போலவும், இஸ்லாமிய மாணவிகள் தலையில் ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும்” என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநிலப் பொதுச் செயலாளர் நசீர் பாஷா தி ஹிந்துஸ்தான் கெசட்டிடம் கூறியுள்ளார்.
ஆறு மாணவிகளில் ஒருவரின் பெற்றோர், தங்களின் நடைமுறைகளில் சமரசம் செய்ய முடியாது என்றும் தனது மகளை வேறு கல்லூரியில் சேர்க்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
ஆடை பிரச்சினையுடன் உருது, அரபு மற்றும் பேரி மொழிகளில் பேசுவதற்கும் கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்று மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
Source: The Wire, The Hindustan Gazette
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.