கண்ணகி, முருகேசன் ஆணவக்கொலை வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டில், கொலையான கண்ணகியின் அண்னன் மருதுபாண்டியனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. கண்ணகியின் தந்தை துரைசாமி, உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டணையையும் உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றம், ரங்கசாமி மற்றும் சின்னதுரை ஆகிய இருவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள புதுக்கூரைப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் முருகேசனும் கண்ணகியும். இரு வேறு சாதியைச் சேர்ந்த இவர்கள் கடந்த 2003ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.
திருமணத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த கண்ணகியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், இருவரையும் விஷம் கொடுத்து கொலை செய்து, பின்னர் அவர்களது உடலை எரித்தனர்.
நின்று கிடைத்த நீதி – கண்ணகி – முருகேசன் வழக்கின் வரலாறும் தீர்ப்பும்
இதுகுறித்து, விருத்தாசலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த 2004-ம் ஆண்டு முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
இதையடுத்து, கண்ணகியின் தந்தை துரைசாமி, சகோதரர் மருதுபாண்டியன், உறவினர்கள் ரங்கசாமி, அய்யாசாமி, கந்தவேலு, ஜோதி, வெங்கடேசன், மணி, குணசேகரன், தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், சின்னதுரை, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன், ஆய்வாளர் செல்லமுத்து ஆகிய 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அநீதியை எதிர்ப்பதுதான் அறம் – (கண்ணகி – முருகேசன்) வழக்கறிஞர் ரத்தினத்தோடு ஓர் உரையாடல்
இந்த வழக்கை விசாரித்த கடலூர் சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டியனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கண்ணகியின் தந்தை துரைசாமி, ரங்கசாமி, கந்தவேலு, ஜோதி, வெங்கடேசன், மணி, தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், சின்னதுரை, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன், காவல் ஆய்வாளர் செல்லமுத்து ஆகிய 12 பேருக்கு ஆயுள் தண்டணையும் விதித்து 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி தீர்ப்பளித்தது.
இந்த உத்தரவை உறுதிபடுத்தக் கோரி உயர் நீதிமன்றத்திற்கு கடலூர் நீதிமன்றம் அனுப்பியது. அதேசமயம், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைகளை ரத்து செய்ய கோரி 13 பேர் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீடு மனுக்கள் நீதிபதிகள் பி.என் பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், முதலில் தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப்பதியப்பட்ட நிலையில், பின் கொலை வழக்காக பதியப்பட்டதாக வாதிடப்பட்டது. சம்பவத்தை கண்ணால் கண்ட சாட்சியங்கள் ஏதும் இல்லை எனவும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் பட்டியலினத்தவர்கள் என்பதால் வன்கொடுமை தடுப்பு சட்டம் பொருந்தாது என்றும் வாதிடப்பட்டது.
முருகேசன் குடும்பத்தினர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், இந்த கொலை சம்பவத்திற்கு தொடர் சாட்சியங்கள் உள்ளதாகவும், இது ஆணவ கொலை என்பதால், கடலூர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.
இந்த நிலையில், இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் இன்று வழங்கியது. அதன்படி, கண்ணகியின் அண்னன் மருதுபாண்டியனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. கண்ணகியின் தந்தை துரைசாமி, உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டணையும் உறுதி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். ரங்கசாமி மற்றும் சின்னதுரை ஆகிய இருவரை விடுதலை செய்தும் உத்தரவிட்டுள்ளது.
Source: livelaw
Nupur Sharma செஞ்ச தப்புக்கு இந்தியர்கள் ஏன் மன்னிப்பு கேட்கணும்? Nupur Sharma on Prophet Muhammad
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.