கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் வழக்கில் விசாரணை நல்ல முறையில் நடைபெற்று வருவதாக விசாரணை அமைப்புகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. மேலும் விரைவாக இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில், நியாயமான முறையில் விசாரணை நடத்தவும், கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை நியமிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு மீண்டும் நீதிபதி சதிஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் அறிக்கைகளை தாக்கல் செய்தார்.
பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கல்வி காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க 800 நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கேட்ட உயர்நீதிமன்றம் அரசுக்கு பாராட்டு தெரிவித்திருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக ஊடக விசாரணை நடத்தக்கூடாது என உத்தரவிட்ட பிறகும் சில மின்னணு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இந்த விவகாரம் குறித்து நிபுணத்துவம் இல்லாத நபர்களிடம் நேர்காணல் எடுத்து ஒளிபரப்பப்படுகிறது. மேலும், ஜிப்மர் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்த பிறகும் இந்த விவகாரத்தில் நிபுணத்துவம் இல்லாத வழக்கறிஞர்கள் சிலர் இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் ஒப்பிட்டு மாறுபட்ட கருத்துகளை ஊடகங்களில் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. வழக்கறிஞராக இருந்து இதுபோல் தனியாக விசாரணை நடத்துவது தொழிலுக்கு ஏற்றது அல்ல என்று நீதிபதி சதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
மாணவி விவகாரம் குறித்து ஊடகங்களில் பேசிய வழக்கறிஞர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதிபதி சதிஷ்குமார் பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றாத வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தயங்காது எனவும் நீதிபதி எச்சரித்துள்ளார்.
“விசாரணையின் முடிவில், புகார் கொடுத்தவரே குற்றவாளியானதை எங்கள் அனுபவத்தில் நாங்கள் பார்த்துள்ளோம். இந்த விசாரணை அத்தகைய நிலையை இன்னும் எட்டவில்லை. இருந்தபோதும், தற்போதைய விசாரணை அறிக்கை பல புதிய கோணங்களை சுட்டிக்காட்டுகிறது. தற்போதைக்கு அதை வெளியிட முடியாது” என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பறந்து போன சாவர்க்கர் | புல்புல் பறவை பாவமில்லையா? | Aransei Roast | savarkar | RSS | BJP | Bulbul
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.