உலகம் வரும் காலத்தில் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைத்து தமிழர் வாழ்வு மீள முழுமனதுடன் உதவ வேண்டும்.மேலும் பாக் நீரிணையில் தமிழ்நாட்டு மீனவர்கள் காலம் காலமாக தொடர்ந்து சந்தித்து வரும் அச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் உயிரிழப்பும் நிரந்தரமாக தடுக்கப்பட தமிழ்நாடு அரசும் இந்திய அரசும் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கொரிய தமிழ்ச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொரிய தமிழ்ச் சங்கம் ஒருங்கிணைக்கும் தமிழர் திருநாளில் இந்திய மற்றும் தமிழ்நாடு அரசுகளுக்கு நாம் பொதுக்கோரிக்கைகளை முன்வைப்பது வழக்கம். திருவள்ளுவர் ஆண்டு 1054 தைத்திங்கள் 29-ம் நாள் ஞாயிறன்று (12 பிப்ரவரி 22:1) கச்சான் பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் திருநாள் – 2023 பொங்கல் நிகழ்வில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பின்வருமாறு,
யாதும் ஊரே யாவரும் கேளீர்: தென்கொரியாவில் நடைபெற்ற 2023-ம் ஆண்டு தமிழர் திருநாள் பொங்கல் நிகழ்வுகள்
இந்தியத் தூதரகம் வழியே நடத்தப்படும் சுவாமி விவேகானந்தர் கலாச்சார மையங்கள் அனைத்திலும் சுவாமி விவேகானந்தருக்கு சிகாகோ செல்லும் வாய்ப்பளித்து பொருளுதவி புரிந்த மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்களின் படத்தை திறந்து வைக்குமாறு மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கும் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களுக்கும் கொரிய தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஏற்கனவே 2020-ம் ஆண்டு வேண்டுகோள் வைத்திருந்தோர். நம் கோரிக்கையை தொடர்ந்து மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் வைகோ அவர்களும் மன்னரின் வாரிசுகளும் இந்த கோரிக்கையை வலியுறுத்தியிருந்தனர். அதனை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
தமிழ்நாடு அரசு ஆட்டிசம் உள்ளிட்ட வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கென பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருவது பாராட்டத்தக்கது. என்றாலும் இத்தகைய குழந்தைகளுக்கான சிகிச்சை மற்றும் பயிற்சி தொடர்பில் பெற்றோர் படும் துயரம் அளவில்லாதது. எனவே நகரம் மற்றும் பேரூராட்சி அளவில் இத்தகைய பயிற்சி மற்றும் சிகிச்சை நிலையங்களை அமைத்திட ஆவண செய்ய வேண்டுமென்று மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மற்றும் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆகியோரை வேண்டுகிறோம்.
உலகில் தமிழ் மக்கள் வாழ்வில் சமாதானமும் அமைதியும் நிலவவேண்டும் என்பதில் எமது சங்கம் அக்கறை கொள்கிறது. மக்களுக்கு ஏற்றத்தாழ்வற்ற வாழ்வு அமைய புத்தர் காட்டியவழி சரியானதென்று அம்பேத்கர் உள்ளிட்ட மேதைகள் கருதினர் இனி போரும் உயிர்ப்பலியும் வேண்டாமென புத்தர் வழியில் வாழ தலைப்பட்டார் மன்னர் அசோகர். சமகாலத்தில் புத்தமும் தமிழருக்கு நீதி சமைக்கவில்லை. இலங்கைத்தீவில் தமிழர்கள் பலர் கொல்லப்பட்டு எஞ்சியிருப்போர் துயர வாழ்விற்குள் தள்ளப்பட்டு பத்து ஆண்டுகள் கழித்தும் அவர்களுக்கு இந்த உலகம் நீதி வழங்க முன்வரவில்லை உயிர் பலியெடுக்கும். சண்டைகள் நடைபெறாமலிருக்க உலகம் இராசதந்திர நடவடிக்கைகளை கையாள்கிறது. போர்ச்சூழலில் கூடுமானவரை உயிர்ப்பலியை தடுக்க செஞ்சிலுவை மற்றும் ஐக்கிய நாடுகளின் தொண்டு நிறுவனங்கள் வேலை செய்வதை உறுதிசெய்கிறது. உலகம் இந்த நடைமுறைகள் அனைத்தும் புறந்தள்ளப்படுவதைக் கண்டுகொள்ளவில்லை.
உலகின் இந்த பாராமுக அமைதி தமிழ் மக்களுக்கு எந்த தீர்வையும் கொடுக்கவில்லை. மாறாக இன்று நிரந்தர அடக்குமுறைக்குள் அவர்களை தள்ளியிருக்கிறது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படியில் உருவான 13-வது வைத்து சட்ட திருத்தம் மூலம் கிடைக்கும் குறைந்தபட்ச தீர்வுக்கும் புத்தர் வழி வந்தோர் வாய்ப்பளிக்க மறுக்கிற துயரமான நிலைமை தொடர்கிறது. உலகம் வரும் காலத்தில் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைத்து தமிழர் வாழ்வு மீள முழுமனதுடன் உதவ வேண்டும்.மேலும் பாக் நீரிணையில் தமிழ்நாட்டு மீனவர்கள் காலம் காலமாக தொடர்ந்து சந்தித்து வரும் அச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் உயிரிழப்பும் நிரந்தரமாக தடுக்கப்பட தமிழ்நாடு அரசும் இந்திய அரசும் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்ற தமிழ்நாட்டு மக்களின் குரலை தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் நாமும் எதிரொலிக்கிறோம்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.