Aran Sei

ஜம்மு காஷ்மீர் தொகுதி மறு சீராய்வு – நான்கு ஆட்சேபனைகளை ஆணையத்திடம் தெரிவித்த தேசிய மாநாட்டு கட்சி

ம்மு காஷ்மீரில் உள்ள தொகுதிகளில் பெரிய மாற்றங்களை முன்மொழியும் எல்லை நிர்ணய ஆணையத்தின் இரண்டாவது பரிந்துரைகள் மீதான நான்கு ஆட்சேபனைகளை ஆணையத்திடம் தேசிய மாநாட்டு கட்சி சமர்ப்பித்துள்ளது.

டிசம்பர் 20 அன்று, ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில், ஜம்முவுக்கு 43 தொகுதிகள் (முன்னதாக 37) என்றும், காஷ்மீருக்கு 47 தொகுதிகள் (முன்னதாக 36) என்றும் எல்லை நிர்ணய ஆணையம் பரிந்துரைத்தது.

இப்பரிந்துரைக்கு ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தைச் சேர்ந்த கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி (ஜேகேபிசி), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய குப்கர் கூட்டணி, இப்பிரிந்துரைகளுக்கு எதிராக போராட்டங்களை அறிவித்தது.

ஜம்மு காஷ்மீர் தொகுதி மறு சீராய்வு – ஆட்சேபனைகளை ஆணையத்திடம் சமர்ப்பித்த தேசிய மாநாட்டு கட்சி

இப்பரிந்துரைகளை எதிர்த்து, ஜனவரி 1 அன்று, அமைதிவழியில் பேரணி நடத்தவுள்ளதாக குப்கர் கூட்டணி  தெரிவித்தது.

அதைத்தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று முன்னாள் முதலமைச்சர்களான மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃப்ரூக் அப்துல்லா மற்றும் துணைத் தலைவர் உமர் அப்துல்லா ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இதற்கு, குப்கர் கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரித்தன.

இந்நிலையில், தனது இரண்டாவது பரிந்துரையில் எல்லை நிர்ணய ஆணையம், 22 சட்டப்பேரவை தொகுதிகளை நீக்கி 29 தொகுதிகளை உருவாக்குவதுடன், நாடாளுமன்றத் தொகுதிகளில் பெரிய மாற்றங்களையும் எல்லை நிர்ணய ஆணையம் முன்மொழிந்திருந்தது.

‘தொகுதி சீராய்வுக்கு எதிராகப் பேரணி’ – மூன்று முதலமைச்சர்களை வீட்டுக்காவலில் வைத்த ஜம்மு காஷ்மீர் நிர்வாகம்

இதையடுத்து, எல்லை நிர்ணய ஆணையத்தின் இரண்டாவது பரிந்துரைகள்மீதான நான்கு அம்ச ஆட்சேபனைகளை, நேற்று(பிப்பிரவரி 14) ஆணையத்திடம் தேசிய மாநாட்டு கட்சி சமர்ப்பித்துள்ளது.

தேசிய மாநாட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹஸ்னைன் மசூடி, எல்லை நிர்ணய ஆணையச் சட்டம் ஜம்மு காஷ்மீருக்கு பொருந்தாது என்றும் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று நடைமுறைப்படுத்தப்பட்ட ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் வழியாக இச்சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

“ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருவதால், எல்லை நிர்ணயச் சட்டம் ஜம்மு காஷ்மீருக்கு பொருந்துமா என்பதையும் சேர்த்து உச்ச நீதிமன்றம் ஆராயும். அதனால், சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளை வரையறுப்பதற்கு முன், நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக ஒன்றிய அரசு காத்திருந்திருக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

வீட்டுக் காவலில் காஷ்மீர் தலைவர்கள்: ‘ஜனநாயகத்தை சவப்பெட்டிக்குள் அடைக்கும் முயற்சி’ – எம்.கே.பைஸி கண்டனம்

“மக்கள்தொகைக்கு ஆணையம்  அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். காரணம், அதற்கேற்ப பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்த அடிப்படையே இந்த பரிந்துரையில் புறக்கணிக்கப்படுகிறது. 1.92 லட்சம், 1.88 லட்சம், 51,000 மற்றும் 70,000 என வெவ்வேறு எண்ணிக்கையிலான வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. எளிதாக தொடர்புக் கொள்வதற்கும் அணுகுவதுற்கும் ஏற்றார் போல, சரியான அளவிலான தொகுதிகளை உருவாக்க வேண்டும். ஆனால், இந்த விதியும் மீறப்பட்டுள்ளது” என்று ஹஸ்னைன் மசூடி சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னர், எல்லை நிர்ணய ஆணையம் குறித்து பேசியிருந்த மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, எல்லை நிர்ணய ஆணையம் பாஜகவின் அஜண்டாவிற்காக செயல்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.

ஜம்மு காஷ்மீர் தொகுதி மறுசீராய்வு – மௌன போராட்டம் நடத்த அப்னி கட்சி முடிவு

“எல்லை நிர்ணய ஆணையத்தைப் பொறுத்த வரையில், அது பாஜகவின் ஆணையம். சிறுபான்மையினருக்கு எதிராக பெரும்பான்மையை உயர்த்திக்காட்டி, மக்களை மேலும் வலுவிழக்கச் செய்வதே அவர்களின் முயற்சி. அவர்கள் பாஜகவுக்கு நன்மை செய்யும் வகையில் சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்புகிறார்கள்” என்று மெகபூபா முப்தி குற்றஞ்சாட்டியிருந்தார்.

Source: PTI, New Indian Express

ஜம்மு காஷ்மீர் தொகுதி மறு சீராய்வு – நான்கு ஆட்சேபனைகளை ஆணையத்திடம் தெரிவித்த தேசிய மாநாட்டு கட்சி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்