’போலி செய்தி’ வெளியிட்டதாக ராணுவம் அளித்த புகாரின் பெயரில் காஷ்மீர் வாலா, காஷ்மீரியாத் இணையதளங்கள் மீது பதியப்பட்ட வழக்கில், இடைக்கால ஜாமீன் வழங்க ஜம்மு & காஷ்மீர் நீதிமன்றம் மறுத்துவிட்டதாக, தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
தெற்கு காஷ்மீரின், ஷோபியன் பகுதியில் இருக்கும் இஸ்லாமிய செமினரி பள்ளியில் குடியரசு தின கொண்டாட்டங்களை நடத்த ராணுவம் கட்டாயப்படுத்தியதாகச் செய்தி வெளியிட்டது தொடர்பாக வழக்கு பதியப்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் வாலா மற்றும் காஷ்மீரியாத் இணையதளங்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 153 (கலவரம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஆத்திரமூட்டம் செயலை வேண்டுமென்று செய்தல்) மற்றும் 505 (பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்து வகையில் அறிக்கைகள் வழங்குதல்) கீழ் ஷோபியனின் இமாம் சாஹிப் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் ஜனவரி 31 ஆம் தேதி வழக்கு பதியப்பட்டிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காஷ்மீர் வாலா இணையதளத்தின் ஆசிரியர், பஹத் ஷா சார்பில் ஷோபியன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவில், ஆசிரியர் ஷா, செய்தியாளர் யஷ் ராஜ் சர்மா ஆகியோருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டதாக தி வயர் தெரிவித்துள்ளது.
கடந்த, பிப்ரவரி 2 ஆம் தேதி, ஜாமீன் மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம், ஜாமீன் வழங்க போதிமான காரணமும் விதிவிலக்கான காரணமும் இல்லை என நீதிமன்ற உத்தரவிட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவில், இந்த வழக்கு “போலி மற்றும் அற்பதனமானது” என்றும், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் விதிகளின் கீழ் தங்களுக்கு ஜாமீன் பெற உரிமை இருக்கிறது என தெரிவித்திருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிமன்றம், “மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டு தவறானது, அவர்கள் தங்களது சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தவில்லை என்பதை மனுதாரர்கள் சார்பாக ஆஜரானவர்கள்களால் நிருமிக்க முடியவில்லை. இந்தக் காரணத்தினால் ஜாமீன் மறுக்கப்படுவதோடு, தகுதியற்ற இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவில் குறிப்பிடப்பட்டிருப்பதாக அதில் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘அந்தோலன்ஜீவி’கள் (பிழைப்புப் போராளிகள்): 1974 ல் அரசுக்கு எதிராகப் போராடிய போது
தி வயர் இணையதளத்திடம் பேசிய, காஷ்மீர் வாலா ஆசிரியர் ஷா, “நாங்கள் எங்கள் செய்தியில் உறுதியாக இருக்கிறோம், அவை தகவல்களின் அடிப்படையிலும், பள்ளி நிர்வாகம் அளித்த நீண்ட நேர்காணலின் அடிப்படையிலும் வெளியிடப்பட்டது. ஒரு வேளை இந்தச் செய்தியில் சொல்லப்பட்டிருப்பதை அந்தச் சம்பந்தப்பட்ட பள்ளி மறுக்க விரும்பினால் எங்களைத் தொடர்கொண்டு இருக்கலாம் அல்லது அறிக்கையின் மூலம் தெரிவித்து இருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை” என கூறினார்.
காஷ்மீரியாத் இணையதளத்தின் காசி ஷிப்லி, “நான் ஊருக்கு வெளியில் இருப்பதால் என்னால் இடைக்கால ஜாமீன் மனு தாக்கல் செய்யமுடியவில்லை. ஃபஹாத்திற்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளதால், இதை எப்படி கையாளலாம் என யோசித்து வருகிறேன்” என தி வயர் யிடம் தெரிவித்தார்.
‘யானை புக்க புலம் போலத் தானும் உண்ணான்’: மோடியின் அரசும் பொதுநலனும் – ரவி ஜோஷி
ஊடகவியலாளர்கள்மீதான வழக்கு பதிவிற்கு கண்டனம் தெரிவித்துள்ள காஷ்மீர் பிரஸ் கிளப், “புகாரை முன்னெடுப்பது அல்லது வழக்குப் பதிவு செய்வதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒரு நிலையான நடைமுறைமூலம் செய்தி வெளியிட்ட இணையதளங்களை தொடர்பு கொண்டு, அவர்களின் செய்தியில் இருக்கும் துல்லியமற்ற தகவல் தொடர்பாக விளக்கம் பெற்று இருக்க வேண்டும். ஆனால் அப்படி ஏதும் நடைமுறை பின்பற்றப்படாமல், வழக்கு பதியப்பட்டிருக்கிறது” என காஷ்மீர் பிரஸ் கிளப் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாக தி வயர் கூறியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.