ஜஹாங்கீர்புரியில் காவல் துறையின் அராஜகத்திற்கு பயந்து இஸ்லாமிய இளைஞர்கள் வெளியேறுவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது மத கலவரம் ஏற்பட்டது. வீடுகள், வணிக வளாகங்கள் இடிக்கப்பட்டன. அந்த பகுதியில் வசிக்கும் இஸ்லாமிய ஆண்கள், காவல்துறையின் வன்முறையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்று ஜஹாங்கீர்புரியில் வசிக்கும் மக்கள் குற்றம் சாட்டினர்.
ஜஹாங்கீர்புரியில் உள்ள பி ப்ளாக்கில் குடியிருந்த பல இளைஞர்களை காவல் துறையினர் அடிக்கடி கைது செய்வதற்காக அழைத்துச் செல்வதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். அவ்வாறு கைது செய்யப்படும் இளைஞர்கள் சிறு சிறு குற்றங்களில் ஈடுபடுவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ஆனால் அவ்வாறு கைது செய்யப்படும் இளைஞர்களின் நியாயத்தைக்கூட காவல்துறையினர் கேட்பதில்லை என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கியான்வாபி மசூதியும் சர்ச்சைக்கான பின்னணியும் – ஒரு விரிவான அலசல்
“இப்பகுதியை சேர்ந்த ஆண்கள் காவல்துறையின் கைது நடவடிக்கைக்குப் பயந்து ஊரைவிட்டு வெளியே சென்று விடுகின்றனர். ஆண்கள் அவ்விடத்தை விட்டுச் சென்று விட்டதால் அப்பகுதியின் பெண்களை காவல்துறையினர் தொந்தரவு செய்கின்றனர். மேலும் அங்குள்ள சிறுவர்களை காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விடுகின்றனர்” என்று உள்ளுர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஜஹாங்கீர்புரியை சேர்ந்த பானு* என்பவரின் சகோதரர் மே 20 அன்று கைது செய்யப்பட்டதாக தி வயர் பத்திரிகையிடம் அவர் பேட்டி அளித்தார். அப்போது பானு கூறியதாவது, “எனது சகோதரர் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது காவல்துறை அத்துமீறி எனது சகோதரரை கைது செய்தது”. பானுவின் குடும்பத்தினர் அவரை திருட்டு பழி சுமத்தி காவல்துறை அழைத்துச் சென்றதாக குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால் மே 24 அன்று ரோஹினி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ஹனுமன் ஜெயந்தி மதக்கலவர வழக்கில் பானுவின் சகோதரர் பெயர் இருந்தது. எனது மகளை காவல்துறையினர் காரணமின்றி மிரட்டி வருகினற்னர், அதனால் நான் பயத்திலேயே வாழ்ந்து வருவதாக பானு தெரிவித்துள்ளார்.
பொய் வழக்கில் காவல்துறையினரின் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக எனது கணவரும், மகனும் இந்நகரத்தை விட்டு வெளியேறி விட்டனர். ஹனுமன் ஜெயந்தி கலவரம் நடந்தபோது கூட எனது கணவர் மற்றும் மகன் ஊரில் இல்லை. ஆனால் காவல்துறையினர் எங்கள் வீட்டுக் கதவைத் தட்டி, அவர்களை ‘சரணடைய’ சொல்லி மிரட்டுகின்றனர். எனது கணவர் மற்றும் மகனின் இருப்பிடத்தை நாங்கள் அவர்களிடம் சொல்லாவிட்டால் அவர்கள் என் மகளை அழைத்துச் சென்று விடுவதாக மிரட்டினர்” என்று பானு. தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய ஆண்களை காவல்துறையினர் அழைத்துச் சென்று அவர்கள் மீது கலவரத்தில் ஈடுபட்டதாக பொய்வழக்கு போடுவர் என்பது எங்களுக்கு நன்கு தெரியும் என்று பானு தெரிவித்துள்ளார்.
அக்லக் என்பவர் ஜஹாங்கீர்புரியில் வசிக்கும் ஒரு குப்பை சேகரிக்கும் தொழிலாளி ஆவார். மத கலவரத்திற்கு பின்னர் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சி பிளாக் பகுதியிலிருந்து காவல் துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.
‘ஆண்கள் ஒவ்வொரு நாளும் பொய் வழக்கில் கைது செய்யப்படுகின்றனர். இது குழப்பமான பயமுறுத்தும் சூழலை ஏற்படுத்துகிறது. ஏறக்குறைய அவர்கள் எல்லோரும் எந்தக் குற்றமும் செய்யாதவர்கள். இன்னும் பதின்ம வயதைக்கூட தாண்டாத இந்த குழந்தைகள் பொய் வழக்கில் கைது செய்யப்படுகிறார்கள். அடித்துச் சித்திரவதை செய்யப்படுகிறார்கள் என்பதே எனது அச்சமாக உள்ளது. பொய் வழக்குகள் பதிந்து இஸ்லாமிய ஆண்கள் மற்றும் குழந்தைகள் மீது மோசமான முறையில் அடக்குமுறை ஏவப்படுகிறது” என்று அக்லாக் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் சுதந்திரமற்றவர்களாக இருக்கிறோம். நாங்கள் தொடர்ந்து காவல்துறையினரால் பின் தொடரப்படுகிறோம், கண்காணிக்கப்படுகிறோம். நாங்கள் என்ன சாப்பிடுகிறோம், எங்கே கழிப்பறைக்கு செல்கிறோம் என்பதிலிருந்து அவர்கள் ஒவ்வொன்றையும் கண்காணித்து வருகின்றனர். நாங்கள் எங்கள் சொந்த வீட்டிலேயே கைதிகளாக வாழ்கிறோம்” என்று அக்லாக் கூறியுள்ளார்.
இந்த கலவரம் நடந்து முடிந்தவுடன் உடனடியாக, 5 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு போடப்பட்டது. இப்பகுதியில் வசிக்கும் சிலரின் வழக்கை வழக்கறிஞர் கவால்பிரீத் கவுர் வாதாடி வருகிறார்.
“தடுப்புக்காவலில் பிடித்துச் செல்வது டெல்லி காவல்துறையின் தற்போதைய ட்ரெண்டாகி வருகிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவர்கள் இஸ்லாமிய சிறுபான்மை சமூகத்தினர்கள்தான். காவல்துறையினர் அவர்களை குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்று கூறி பொய் வழக்கு போடுகிறது” என்று வழக்கறிஞர் கவால்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார்.
இதே நடைமுறைதான் 2020- ம் ஆண்டு நடந்த வடகிழக்கு டெல்லி கலவர வழக்கிலும் பின்பற்றப்பட்டது.
“ஜஹாங்கீர்புரி கலவர வழக்கில் முதல்கட்டமாக கைது செய்யப்பட்டவர்கள் அனைவருமே இஸ்லாமியர்கள். இது மிகவும் மோசமான போக்கு ஆகும். இத்தகைய வழக்குகளில் விசாரணை முற்றிலும் ஒரு தலைப்பட்சமாக நடத்தப்படுகிறது. கைது செய்யப்பட்ட பெரும்பாலானவர்களுக்கான பிணை, சில மாதங்கள் சிறையில் கழித்த பின்பே வழங்கப்படுகிறது. தாமதமின்றி பிணை வழங்கப்பட வேண்டும். காவல்துறையின் ஒருதலைப்பட்சப் போக்கை கண்டித்த பிறகே இந்துக்களின் மீதும் வழக்குப் பதியப்பட்டது. இதை அவர்களை செய்ய வைக்கவே ஒரு நாள் முழுவதும் போராட வேண்டியிருந்தது. ஆனாலும் கூட கலவரத்தைத் தூண்டியவர்கள் மற்றும் அவர்களின் தலைவர்கள் கைது செய்யப்படவில்லை” என்று வழக்கறிஞர் கவால்பிரீத் கவுர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகளை நிலைநாட்ட தவறினால்? – அண்ணல் அம்பேத்கரின் மகத் குள போராட்ட உரை
ஜஹாங்கிர்புரியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள், மிக குறைந்த ஊதியம் பெறும் கூலித் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், மற்றும் தொழிற்சாலை பணியாளர்கள்தான். அப்பகுதி மக்கள் காவல்துறையினரின் இத்தகைய ஒடுக்குமுறை அவர்களின் பொருளாதார வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
“வாழ்நாள் முழுதும் நாங்கள் சிறையில் இருக்க போகிறோம் என்ற பயம் எங்களுக்கில்லை. எங்களுக்குள்ள ஒரே பயம், சிறையின் சித்திரவதைகளையும், துன்புறுத்தல்களையும் அனுபவிக்க வேண்டியிருக்குமே என்பது தான்” என்று உள்ளூரைச் சேர்ந்த இஃப்ரான் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கியுடன் போஸ் கொடுக்கச் சொன்னார்கள்:
இம்மாதத் தொடக்கத்தில் தன் மீதான குற்றம் நிரூபிக்கபடாத நிலையிலும் காவல்துறையினர் லத்தியால் தன்னை கடுமையாக தாக்கினர். எங்கள் தெருவில் சண்டையிட்டு கொண்டிருந்த இளைஞர்களிடம் அது சம்பந்தமாக நான் தலையிட்டு கேள்வி கேட்டதுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு என்று 20 வயதான தானிஷ் தெரிவித்துள்ளார்.
இந்து ராஷ்ட்ரா – இந்துஃபோபியா; ஒன்றிய அரசின் இரட்டை சவாரிக்கான காரணம் என்ன? – மு.அப்துல்லா
அச்சண்டையின் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினருக்கு காட்டிய தானிஷ், “உள்ளூரில் ஏற்படும் சிறு பூசல்களும் கூட இஸ்லாமிய இளைஞர்கள் மீது அடக்குமுறை ஏவுவதற்கும், அவர்களை சித்திரவதை செய்வதற்கும் காவல்துறையினருக்கு வாய்ப்பு வழங்கி விடுகிறது. நான் அச்சண்டையைச் சமாதானமாக்கும் சிசிடிவி காட்சி என்னிடம் உள்ளது. அப்போது ஒரு காவலர் வந்து என்னை அடித்து சிறைக்கு அழைத்துச் சென்ற காட்சியும் அதில் உண்டு. அதே போன்று இரண்டு இஸ்லாமிய ஆண்களும் ஆதாரமின்றி கடுமையாக தாக்கப்பட்டனர் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
‘நான் கைது செய்யப்படுவதற்கு முன்னால் சுமார் ஆறு இந்து ஆண்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். ஆனால் காவல்துறையினர் அவர்களை ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் என்னை அடுத்த நாள் வேலைக்கு கூட போகமுடியாதபடி கொடூரமாக தாக்கி அடித்தனர்.’ என்று அவர் கூறியுள்ளார்.
காவல்துறையினர் தன்னிடம் ரூ.50,000 லஞ்சம் கேட்டதாகவும், அந்த தொகையை கொடுக்காவிட்டால் எனக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு போட்டு விடுவதாக மிரட்டியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
“அவர்கள் துப்பாக்கியை என் கையில் வலுக்கட்டாயமாகக் கொடுத்து புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கச் சொன்னார்கள். அந்த துப்பாக்கி என்னுடையது என்று சொல்லச் சொல்லி மிரட்டினார்கள். அவர்கள் செய்த அனைத்தும் எனக்கு அருவருப்பை தந்தது. நான் என்ன தீவிரவாதியா?’ என்று தானிஷ் கேட்டார்.
காவல்துறையுடன் சமரசம் செய்யப்பட்டதை அடுத்து அன்று இரவு தானிஷ் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையில், மே மாதம் 7-ம் தேதி டெல்லி காவல்துறையினர், ஏப்ரல் 16 அன்று நடந்த கலவரம் தொடர்பாக ஜஹாங்கீர்புரியை சேர்ந்த 3 பேரை கைது செய்தது.
ஜஹாங்கிர்புரியில் குடும்பத்தினருடன் வசிக்கும் ரேகா என்ற இந்துப்பெண் “இந்த பகுதியில் மதத்தின் பெயரால் கலவரம் ஏற்படும் அச்சமூட்டும் சூழ்நிலை உள்ளது’” என்கிறார். வீடுகள், வணிக வளாகங்கள் இடிக்கப்பட்டதற்கு பிறகு இச்சூழல் உச்சக்கட்டதை எட்டியது. அவர்கள் பயத்தால் தங்கள் கிராமங்களை விட்டு சென்று விட்டார்கள், மீண்டும் இயல்பு நிலை திரும்பியதும் கிராமத்திற்கு திரும்புவார்கள் என்று அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் என்னிடம் கூறினார்கள்”, என்று அவர் தி வயர் பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியில் கூறினார்.
தி வயர், இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து கருத்துக்கேட்க, வடமேற்கு டெல்லியின் துணை காவல் ஆய்வாளர் உஷா ரங்கானியை தொடர்பு கொள்ள முயன்றது. ஆனால் எங்களது அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்கவில்லை. அவர் பதிலளித்ததும் இக்கட்டுரையில் அவை இணைக்கப்படும்.
அனுமதி வழங்கப்படாத ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தை தடுத்து நிறுத்த காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று முதல் கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஏப்ரல் 16-ம் தேதி இந்த சம்பவத்திற்காக டெல்லி காவல்துறையின் செயலை ரோஹினி நீதிமன்றம் கண்டித்தது.
“அனுமதியில்லாத ஊர்வலத்தை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தாமல், முழு ஊர்வலத்திலும் அவர்களுடன் காவல்துறையினர் துணையாக சென்றுள்ளனர். இதுவே இரு சமூகங்களுக்கும் இடையே எதிர்பாராமல் கலவரம் ஏற்பட வழிவகுத்தது: என்றது நீதிமன்றம் கூறியுள்ளது.
– உள்ளூர் மக்களின் பாதுகாப்புக் கருதி பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தி வயர் இதழில் வந்த கட்டுரையின் மொழியாக்கம்
தமிழில் – குறிஞ்சித்தேன்
கடும் கோபத்தில் அரபு நாடுகள் ! பம்மும் பாஜக ! Nupur Sharma Comment on Prophet Muhammad
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.