பேரரசன் ராஜராஜ சோழனை இந்து என்று பேசுவதெல்லாம், ஒரு வேடிக்கை. ரொம்ப கேவலமானது. திருவள்ளுவருக்கு காவி பூசியது மாதிரிதான். அந்த காலத்தில் இந்த நாடும் கிடையாது. இந்த மதமும் கிடையாது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
ம.பொ.சி. நினைவு தினத்தையொட்டி சென்னை தியாகராயநகரில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், இயக்குநர் வெற்றிமாறன் ராஜராஜ சோழனை இந்து அரசனாக சித்தரிப்பதாக பேசியிருந்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “வெற்றி மாறன் சொன்னது உண்மைதான். ஒரு குறிப்பிட்ட சமூகத்திடம் இருந்த திரைக்கலையை பொதுமைப்படுத்தியது அன்றைக்கு இருந்த திராவிட இயக்கங்கள்தான். திராவிட இயக்கத் தலைவர்களான பேரறிஞர் அண்ணா, ஐயா கலைஞர், எம்ஜிஆர் ஆகியோர் திரைப்படத்துறையில் இருந்தனர். அதனால், வெற்றிமாறன் அதனை குறிப்பிடுகிறார்.
பேரரசன் ராஜராஜ சோழனை இந்து என்று பேசுவதெல்லாம், ஒரு வேடிக்கை. ரொம்ப கேவலமானது. வள்ளுவருக்கு காவி பூசியது மாதிரிதான். அந்த காலத்தில் இந்த நாடும் கிடையாது. இந்த மதமும் கிடையாது. உலகத்திற்கே தெரியும் அவர் சைவ மரபினர் என்று. அவர் சிவனை வழிபட்டவர். அவர் பன்னிரு திருமறைகளை கறையான்கள் அரிக்காமல் காப்பாற்றித் தந்தவர்.
அதனால், சின்னப் பிள்ளைகளுக்குக் கூட தெரியும், அருண்மொழிச் சோழன், ராஜராஜன் யாரென்று. ஆனால், இன்றைக்கு எல்லாவற்றையும் தன்வயப்படுத்திக் கொண்டு, கறையான் போல அரித்துக் கொள்ளும் ஆரியம் வந்து, அதையும் தனதாக்கிக் கொள்கிறது.
தமிழ் வரலாற்றில் புகழ்பெற்றவர்கள் யார் யாரெல்லாம் இருக்கிறார்களோ, அது சிவன், முருகன், மாயோன், வள்ளுவர் உட்பட அனைவரையும் தனக்கானவர்களாக மாற்றிக் கொள்வது. இல்லையென்றால் ஆர்.என்.ரவி எல்லாம் வள்ளுவர் ஒரு ஆன்மீகவாதி, அவர் ஒரு இந்து என்று பேசுவாரா? இதன் அடிப்படையில்தான் வெற்றிமாறன் அவ்வாறு பேசியிருக்கிறார். ராஜராஜன் எங்களின் அடையாளம். தமிழர்களின் இனத்திற்கான பெருமை. அவர் கட்டிய கோயில் சைவ கோயில்” என்று சீமான் தெரிவித்துள்ளார்.
Seeman Latest Speech about RSS and BJP | Annamalai BJP | Modi | H Raja
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.