Aran Sei

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் மீதான பொய் வழக்கு – போலீஸ் உயர் அதிகாரிகள் மீது சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

image credit : thehindu.com

ந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது பொய் குற்றச்சாட்டு பற்றிய ஜெயின் கமிஷன் அறிக்கையை சிபிஐ பரிசீலிக்க வேண்டும் என்று இஸ்ரோ உளவு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.

ஜெயின் கமிட்டி அறிக்கை இந்தக் குற்றச்சாட்டுகளை ஜோடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட கேரள போலீஸ் உயர் அதிகாரிகள் தொடர்பானது. நீதிபதி ஏ எம் கன்வலிகர் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, இந்த அறிக்கை சிபிஐ விசாரணை கோரும் ஒரு முக்கியமான விஷயத்தோடு தொடர்புடையது என்று கூறியுள்ளது.

இந்த அறிக்கையின் உள்ளடக்கத்தை பொதுவில் வெளியிடுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீதிமன்றத்திடம் கொடுக்கப்பட்ட நகல் சீல் செய்யப்பட்ட கவரில் வைக்கப்பட்டுள்ளது.

போலீஸ் அதிகாரிகளில் ஒருவரான கூடுதல் போலீஸ் தலைமை இயக்குனர் சிபி மேத்தியூசின் வழக்கறிஞர், “கமிட்டி நம்பி நாராயணனின் தரப்பை கேட்டது, ஆனால் மேத்தியூசின் தரப்பை கேட்கவில்லை” என்று வாதிட்டுள்ளார். அதற்கு, “குற்றச்சாட்டை பதிவு செய்வதற்கு முன்பு குற்றம் சாட்டப்பட்டவர் விசாரிக்கப்படத் தேவையில்லை” என்று நீதிபதி கன்வலிகர் பதில் கூறியுள்ளார்.

இஸ்ரோவின் கிரையோஜெனிக் எஞ்சின் தொழில்நுட்பத்தில் பணி புரிந்து வந்த விஞ்ஞானி நம்பி நாராயணன் 1994-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி கைது செய்யப்பட்டார். இஸ்ரோவின் வைகிங்/விகாஸ் எஞ்சின் தொழில்நுட்பம் தொடர்பான ஆவணங்களையும் பிஎஸ்எல்வி (ராக்கெட்) பறக்கும் தரவுகள்/வரைபடங்கள் ஆகியவற்றையும் பாகிஸ்தானிடம் கொடுத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கேரளா போலீசிடமிருந்து வழக்கை எடுத்துக் கொண்ட சிபிஐ 1996-ல் அதை முடித்து வைக்கும் அறிக்கையை பதிவு செய்தது. ஆனால், விஞ்ஞானி நம்பி நாராயணன் விடாப்பிடியாக போராடி தன் மீது குற்றம் சாட்டியவர்களை நீதிக்கு முன் கொண்டு வர முயற்சித்து வந்தார் என்று தி ஹிந்து தெரிவிக்கிறது.

உச்சநீதிமன்றம் 2018-ம் ஆண்டில், இந்த வழக்கு “ஒரு கிரிமினல் ஜோடிப்பு” என்று அதனை தள்ளுபடி செய்தது. விஞ்ஞானி நம்பி நாராயணனின் பணி வாழ்க்கை இதனால் முடக்கப்பட்டது என்று அது கூறியிருந்தது. கேரளா போலீஸ் தொடர்ந்த வழக்கு தனது பணிவாழ்விலும் சொந்த வாழ்க்கையிலும் “பேரழிவான விளைவுகளை” ஏற்படுத்தியதோடு, விண்வெளி ஆராய்ச்சியில் தொழில்நுட்ப முன்னேற்றத்தை பின்னடையச் செய்தது என்று விஞ்ஞானி நம்பி நாராயணன் கூறியிருந்தார்.

போலீஸ் பாதுகாப்பில் விஞ்ஞானி நம்பி நாராயணன் நடத்தப்பட்டது “உளவியல்-நோய்த்தன்மை” கொண்டது என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

கேரள அரசு விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ 50 லட்சம் இழப்பீடாக கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம், இந்தப் பணம் 24 ஆண்டுகளாக அவர் எதிர்கொண்ட சித்திரவதையை ஈடுகட்ட போதுமானது இல்லை என்று கூறியது. இந்த ஜோடிக்கப்பட்ட குற்றம் தொடர்பான ஒரு விசாரணையை கோரியிருந்தது.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் மீதான பொய் வழக்கு – போலீஸ் உயர் அதிகாரிகள் மீது சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்