சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் மேலாக, “இஸ்திரேலிய ஊடுருவலை” தடுத்து நிறுத்தியதாக சிரியாவின் ராணுவம் நேற்று தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக இஸ்ரேல், சிரியாவுக்குள் உள்ள ஈரானிய இலக்குகளை தாக்குவதாக கூறிக் கொண்டு குண்டு வீச்சுகளை அதிகரித்திருப்பதாக அல் ஜசீரா செய்தி தெரிவிக்கிறது.
“நாட்டின் தலைநகரத்துக்கு மேலாக, தொடரும் இஸ்ரேலிய தாக்குதல்களை, எங்களது வான் பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன” என்று சிரிய ராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது
பல இலக்குகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 9 அரசு ஆதரவு போராளிகள் கொல்லப்பட்டனர் என்று பிரிட்டனில் இருந்து இயங்கும் போர் கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது. சிரியாவினுள் உள்ள பல தொடர்புகளிலிருந்து இந்த கண்காணிப்பு அமைப்பு தகவல்களை பெறுகிறது. கொல்லப்பட்டவர்கள், அரபு அல்லாத “அரச-ஆதரவு” படைகள் என்று அது கூறியுள்ளது.
“வெளிநாட்டு செய்திகள் தொடர்பாக நாங்கள் கருத்து தெரிவிப்பதில்லை” என்று இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
சிரியா மத்தியதரைக்கடல் அருகில் உள்ள ஒரு நாடு. அதனைச் சுற்றி லெபனான், துருக்கி, ஈராக், ஜோர்டான், இஸ்ரேல் ஆகிய நாடுகள் உள்ளன. சிரியாவில் சுமார் 1.7 கோடி மக்கள் வசிக்கின்றனர்.
2011-ம் ஆண்டு சிரியாவின் பஷார் அல் ஆசாத் தலைமையிலான பாதிஸ்ட் சிரியன் அரபு குடியரசு அரசுக்கும் அதனை தூக்கி எறிய முயற்சிக்கும் எதிர்த்தரப்புக்கும் இடையே உள்நாட்டுப் போர் தொடர்ந்து வருகிறது.
இந்த உள்நாட்டுப் போரில் சிரிய அரசுக்கு ஆதரவாக ஈரான், ரசியா, லெபனானின் ஹிஸ்புல்லா போரிடுகின்றனர். 2015 செப்டம்பர் முதல் ரசியா வான் வழித் தாக்குதல்களையும், பிற ராணுவ நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அமெரிக்கா தலைமையிலான ஒரு பல நாட்டு கூட்டணி இஸ்லாமிய அரசு (IS) -க்கு எதிராகவும், அரசு மற்றும் அரசு ஆதரவு இலக்குகள் மீதும் தாக்குதல்கள் நடத்தி வருகிறது.
அதிகாரபூர்வமாக நடுநிலை வகிப்பதாக சொல்லிக் கொண்டாலும் இஸ்ரேல் ஹிஸ்புல்லா படைகளுடனும் ஈரானிய படைகளுடனும் மோதி வருகிறது. தென்மேற்கு சிரியாவில் அந்தப் படைகள் இருப்பது தனக்கு அச்சுறுத்தல் என்று இஸ்ரேல் கருதுகிறது.
ஈரான் ஆதரவு பெற்ற, ஹிஸ்புல்லா போராளிகள் சிரியாவின் கிழக்கு, தெற்கு, வடமேற்கு பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். டமாஸ்கசின் பல புறநகர் பகுதிகளிலும், லெபனான்-சிரியா எல்லை பகுதிகளிலும் அவர்கள் கட்டுப்பாடு நிலவுகிறது என்று அல் ஜசீரா தெரிவிக்கிறது.
இந்தப் போர் தொடங்கியதில் இருந்தே சிரியாவுக்குள், ஈரானிய போராளிகளையும், ஹிஸ்புல்லா போராளிகளையும் இலக்காக வைத்து, பல தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வருகிறது.
2020-ம் ஆண்டில், சிரியாவுக்குள் 500-க்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தலைவர் அவிவ் கொச்சாவி சென்ற ஆண்டு இறுதியில் தெரிவித்திருந்தார். இந்த ஏவுகணை தாக்குதல்கள் சிரியாவுக்குள் ஈரான் செல்வாக்கு நிலைபெறுவதை தடுத்தன என்று அவர் கூறியிருந்தார்.
ஞாயிற்றுக் கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிரிய தலைநகர் டமாஸ்கஸில் இருந்து 14 கிமீ தொலைவில் உள்ள கிஸ்வா என்ற நகரத்தில் உள்ள ராணுவ பிரிவு ஒன்று தாக்கப்பட்டது என்று ஒரு சிரிய ராணுவத்தை விட்டு விலகியவர் தெரிவித்திருப்பதாக அல் ஜசீரா கூறுகிறது. இந்தப் பகுதியில் ஈரான் ஆதரவு பெற்ற போராளிகள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
டமாஸ்கசின் தெற்கு எல்லைகளில் பெரும் வெடிப்புகளைக் கேட்டதாக நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர்.
ஞாயிற்றுக் கிழமை அன்று இஸ்ரேல் லெபனான் எல்லையில் நான்கு நாட்கள் ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளது. இந்த திடீர் நடவடிக்கை, “போரில் விமானப்படையின் தயார் நிலையை மேம்படுத்துவதற்காக” என்று இஸ்ரேல் இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புதன்கிழமை முடியவுள்ள அந்த ராணுவ பயிற்சி நிகழ்வில், இஸ்ரேலிய “விமானங்களும் ஜெட்களும், ஹெலிகாப்டர்களும் நாடு முழுவதும் பறக்கவுள்ளன. வடக்கு இஸ்ரேலில் பல வெடிப்புகளை கேட்க முடியும்” என்று அந்த அறிக்கை மேலும் தெரிவித்துள்ளதாக அல் ஜசீரா செய்தி கூறுகிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.