அசாம் வெள்ளத்திற்கு பின்னால் “ வெள்ளம் ஜிகாத்” என்ற சதி இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட கட்டடத் தொழிலாளியான நாசிர் ஹுசைன் லஸ்கருக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாசிர் ஹுசைன் லஸ்கருக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பாக போதிய ஆதாரங்கள் இல்லாததால் பிணை வழங்குவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநில அசாமில் வழக்கமான மழையுடன் இந்த ஆண்டு கூடுதல் மழைப்பொழிவு ஏற்பட்டது. இதனால், மே மற்றும் ஜூன் மாதங்களில் உருவான வெள்ளத்தில் 192 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வெள்ளத்திற்கு இஸ்லாமியர்கள் தான் காரணம். இதற்கு பின்னால் வெள்ளம் ஜிகாத் என்ற சதி உள்ளது என்று சமூக வலைதளங்களில் ஆதாரமின்றி செய்திகள் பகிரப்பட்டு வந்தன.
இந்துக்கள் அதிகம் வாழும் பகுதியான சில்சாரில் உள்ள அணைகளை, மூன்று இஸ்லாமிய ஆண்கள் சேதப்படுத்தி இந்த வெள்ளத்தை உருவாக்கினர் என்று தொடர்ந்து செய்திகள் பரப்பபட்டன.
இதனைத் தொடர்ந்து பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாக, குறிப்பாக வெள்ளைத்தை தடுக்கும் அணையை சேதப்படுத்தியதாக கட்டடத் தொழிலாளி நாசிர் ஹுசைன் லஸ்கருடன் சேர்ந்து இன்னும் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள லஸ்கர், “ வெள்ளப் பாதிப்புகளிலிருந்து மக்களை காக்கும் அணைகளை கட்ட 16 ஆண்டுகள் உழைத்திருக்கிறேன். நான் ஏன் அதை சேதப்படுத்த வேண்டும்.” என்று அவர் கூறியுள்ளார்.
வெள்ள ஜிகாத் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து பேசிய அவர், “எனக்கு பயத்தில் அன்றிரவு தூக்கமே வரவில்லை. காரணம், என்னோடு அறையிலிருந்தவர்கள் அதையே பேசிக்கொண்டிருந்தார்கள். நான் தாக்கப்படலாம் என்று பயத்தில் இருந்தேன். என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சிறையிலிருந்து விடுதலையான பின்பும் பயத்திலேயே வாழ்வதாக கூறியுள்ள நாசிர் ஹுசைன், “நானும் என் குடும்பமும் வீட்டை விட்டு வெளியில் செல்ல பயப்படுகிறோம். என் குழந்தைகள் பள்ளி செல்லவில்லை. தவிர்க்க முடியாத தருணங்களில் தலைக்கவசம் அணிந்துகொண்டு செல்கிறேன். காரணம், யாராவது கோபக்கார ஆசாமியால் அடித்துக்கொல்லப்படுவதை நினைத்து பயமாகவே உணர்கிறேன்.” என்று கூறியுள்ளார்.
“நான் இஸ்லாமியர் என்பதற்காக வெள்ள ஜிஹாத் என்று குற்றம் சாட்டப்பட்டேன். அது பொய்யானது. அதேசமயம் அதை பரப்புகிறவர்கள் செய்வதுதான் மிகவும் தவறானது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பராக் ஆற்றின் அணையில் கடந்த ஜூலை 23ஆம் தேதி சேதம் ஏற்பட்டு வடகிழக்கு இந்தியா, கிழக்கு வங்காளதேசத்தில் நீர்புகுந்தது. இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியான பெத்துக்கண்டி என்ற இடத்தில் நடந்த இந்த உடைப்பு, இந்துக்கள் அதிகம் வாழும் பகுதியான சில்சாரில் வெள்ளம் ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்று.
இது மட்டுமே வெள்ளத்திற்கு காரணமல்ல. மேலும், ஒரு பகுதியில் இருந்து மட்டுமே தண்ணீர் நகருக்குள் வரவில்லை என்று சில்சார் பகுதியின் காவல் கண்காணிப்பாளர் ராமன்தீப் கவுர் கூறியுள்ளார்.
சில உடைப்புகள் மனிதர்களால் நிகழ்த்தப்பட்டவையாக இருக்கலாம். தங்கள் பகுதிக்கு வெள்ளம் வரக்கூடாது என்பதற்காக அவை சேதப்படுத்தப்பட்டிருக்கலாம். வெள்ள ஜிஹாத் என்று ஏதும் கிடையாது. முன்பு, நீரை வெளியேற்றுவதற்காக நிர்வாகமே அணைகளில் பிளவு ஏற்படுத்து, இந்த முறை சிலர் அதை தங்கள் கைகளில் எடுத்துகொண்டுவிட்டனர்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“பழுது பார்க்காமலும், பராமரிப்பின்மையாலும் ஏராளமான அணைகள் சேதமடைந்துள்ளதாக ஜாம்ஷெட்ஜி டாடா பேரிடர் மேலாண்மை கல்லூரியின் இணைப் பேராசிரியர் நிர்மால்யா சவுத்ரி கூறியுள்ளார்.
வெள்ள ஜிகாத் போன்ற சொல்லாடல்களைப் பயன்படுத்துவது எளிதாக இருக்கிறது. ஆனால், இது ஒரு நிர்வாக ரீதியிலான பிரச்னை, இதற்கு முதிர்ச்சியுடன் கூடிய பதில் அளிக்கப்பட வேண்டும் என நினைக்கிறேன்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Source: BBC Tamil
Did Kallakurichi Sakthi School driver blackmailed the girl? Adv Kesavan Interview | New CCTV Footage
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.