Aran Sei

எலான் மஸ்க் கருத்துச் சுதந்திர போராளியா? – மு. அப்துல்லா

‘உன்னால் முடியாதது எதுவும் இல்லை. நீ நினைத்தால் எதையும் சாதிக்கலாம். இந்த உலகில் உன்னுடைய வெற்றி மட்டுமே முக்கியம். எதிர்ப்படும் அனைவரையும் ஏறி மிதித்து முன்னேற வேண்டும்’ என்று தனிமனித வளர்ச்சி சார்ந்த போதனைகள் கடந்த நூற்றாண்டின் இறுதியில் வளரத்தொடங்கியது. கிட்டத்தட்ட பெரும்பாலான நாடுகள் உலகமய பொருளாதாரத்திற்கு உடன்பட்ட காலம். அதுவரை அரசியல் ரீதியில் அமைந்திருந்த மக்களின் தேர்வுகள் உலகமயத்திற்குப் பிறகு சந்தையின் தேவைக்கானதாக மாறியது. ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்கினால்தான் உங்கள் வாழ்க்கை சிறப்படையும், அந்த குறிப்பிட்ட பொருளை வைத்திருந்தால்தான் சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்கும் என நுகர்வு கலாச்சாரத்திற்கு ஆட்படத் தொடங்கினோம். நாம் யாரைப்போல் வாழ வேண்டும், நமது வழிகாட்டி யார், அவரைப்போல் முன்னேற என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்ற அறிவுரை நமது கல்வி நிலையங்களிலேயே ஆரம்பித்தன.

இந்த சுயமுன்னேற்ற வகுப்புகள் அனைத்தும் மாணவர்களிடம் அரசியலையும், சமூகம்சார் சிந்தனைகளையும் நீக்கம் செய்தன. அந்தவகையிலேயே 90களில் ‘பில் கேட்ஸ்’ போன்ற தனிமனிதர்கள் சிறப்புக்குரியவர்களாகப் போற்றப்பட்டார்கள். நவீனத் தொழில்நுட்பத்தில் பில் கேட்ஸின் பங்களிப்பை மறுக்க முடியாது என்பார்கள். அது உண்மைதான் என்றாலும் அறிவியல், வரலாறு, சமூகவியல் எனப் பாடப்புத்தகங்களில் பெயரளவிலான கற்றல் மட்டுமே தேர்வு செய்யப்பட்டது. டெஸ்லா போன்ற தனது ஊழியனை ஒடுக்கி புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையில் யதேச்சதிகாரத்தில் ஈடுபட்ட எடிசன்தான் பாடங்களில் அறிவியல் உலகின் நாயகன். தெரிந்தோ தெரியாமலோ அனைத்திலும் அரசியல் மறுப்பைக் கடைப்பிடித்தது, வளர்ந்து வந்த சந்தையின் மீது விமர்சன உணர்வற்ற ஏற்பை வழங்கியது. அதாவது, சமூகத்தைப் பற்றி உனக்கென்ன கவலை, அரசியல் என்றால் சாக்கடை, உனது முன்னேற்றத்தை மட்டும் பார் மற்றும் இன்னும் பிற….

#Sadhguru_not_welcome – இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என ஓமனில் ஜக்கி வாசுதேவுக்கு எதிர்ப்பு

இன்று இணையம் அடிப்படை வாழ்வியலாக மாறியிருக்கிறது. சமூக வலைத்தளங்கள் போன்ற பிற தொடர்பு சாதனங்கள் மூலம் திறந்த உலகை எதிர்கொள்கிறோம். நாம் கற்கும் விஷயங்கள், அது உலகில் எப்படி இயங்கிக்கொண்டிருக்கிறது, நாம் எடுக்கும் நிலைப்பாடுகள் சரியா என எந்த புதிரையும் தேடிக் கண்டுபிடித்துவிடலாம். உலகிடம் திறந்த உரையாடலுக்கு வாய்ப்பு கிடைப்பதன் மூலம் அரசியல் ரீதியில் நம் தேர்வுகளைக் கண்டடைகிறோம். அவர் உலகின் மூத்த  பணக்காரராகிவிட்டார் என்பதாலேயே பில் கேட்ஸ் பற்றிய காரண காரியங்களைத் தவிர்த்து, அவரை கொண்டாடிய மூடுண்ட காலத்தில் நாம் வாழவில்லை. அனைத்தையும் பொது வெளியில் வைக்கும் சமூக வலைத்தளங்களின் காலத்தில் தன்னை உலகிற்கான ஒரே இரட்சகராக முன்வைக்கிறார் மற்றொரு முதலாளி எலான் மஸ்க். தற்போது, செல்வாக்குமிக்க சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டரையும் அவர் கைப்பற்றியிருப்பது காலத்திற்கேற்ற பொருத்தமாகியுள்ளது.

நம் சுற்று வட்டாரங்களிலேயே பலருக்குக் குறிப்பாக இளைஞர்களுக்கு ஆதர்ச நாயகன் எலான் மஸ்க். அவரின் முகப்பு படம் வைத்திருக்கும் பதின்வயதினரை சுலபமாகக் காணமுடிகிறது. எலானின் தொழில் வெற்றியைக் கடந்து அவர் தன்னை முன்னிறுத்தும் விதம் அனைவரையும் கவர்கிறது. உலகின் நம்பர் ஒன் பணக்காரரான ஒருவர் திடீரென உங்கள் ட்வீட்டிற்கு ரிப்ளை செய்தால் எவ்வாறு உணர்வீர்கள்.. இதுபோன்ற திடீர் ஆச்சரியங்களைக் கொடுப்பார் எலான் மஸ்க். சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அவர் இயங்கி வருவது பலருக்கும் நெருக்கமாக உள்ளது. முடி குட்டையாக இருக்க என்ன காரணம் என்ற மருத்துவ குறிப்பு தொடங்கி வாழ்க்கை என்றால் என்னவென்றால் போன்ற தத்துவ போதனை வரை பகிர்ந்துகொள்வார். இடையிடையே தனது போட்டியாளர் ஜெப் பெசோசை வம்பிழுப்பது, க்ரிப்டோ கரன்சி மதிப்பை ஒரே பதிவில் சரியச் செய்வது என்பவையெல்லாம் அவரது ரசிகர்களுக்கு உற்சாகமாக இருந்தது.

கியான்வாபி மசூதியும் சர்ச்சைக்கான பின்னணியும் – ஒரு விரிவான அலசல்

ஒரு தனிநபராக கஷ்டப்பட்டு முன்னேறினேன் என்பது முதல் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் கடின உழைப்பாளி வரை தன்னைப் பற்றிய செய்திகளைத் தொடர்ந்து கட்டமைத்து வந்தார் எலான். வெளிப்படையான பேச்சு, விளையாட்டுத்தனமான நடவடிக்கைகள் எனத் தனித்துத் தெரிந்தார். பொதுச் சமூகத்திடம், வெற்றிகரமான முதலீட்டாளர், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குத் தனது பங்களிப்பைத் தவிர்க்க முடியாது, செவ்வாயை காலனிப்படுத்தி உலகை மீட்கப்போகும் தூதுவர் மற்றும் கார்பன் பயன்பாட்டைக் குறைக்கும் வாகனங்களைத் தயாரித்து சூழலியலைக் காக்கும் போராளி என்ற தோற்றத்தை வழங்குகிறார். இவையெல்லாம் எலானை செல்வாக்குமிக்க நபராகப் போற்றவைக்கிறது. அவரின் செயல்பாடுகள் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருவது உண்மை. ஆனால், இன்று தோற்றமளிப்பதுபோல் உலகு தழுவிய தவிர்க்கமுடியாத புனிதரா அல்லது கருத்துச் சுதந்திர போராளியாக அவதாரமெடுக்கும் அளவிற்குச் சுதந்திர சமூகத்தில் ஈடுபாடு கொண்ட தாராள மனிதரா எலான் மஸ்க்?…

‘ஒரு தொழில்முனைவோராகக் கடின உழைப்பில் முன்னேறினேன்’ என்று சொல்வதிலிருந்தே எலானின் பொய்கள் தொடங்கிவிட்டது. தென்னாப்பிரிக்காவின் செல்வாக்குமிக்க குடும்பத்தில் பிறந்த பரம்பரை பணக்காரர் அவர். கல்லூரி காலத்தில் உயர் வகுப்பு மாணவனான எலானின் பகட்டும், ‘ஜிப்2’ வை நடத்திய ஆரம்பகாலங்களியேயே ஆச்சரியப்படும் வகையில் வைத்திருந்த பணத்தைப் பற்றியும் எலானின் முன்னாள் மனைவி ஜஸ்டின் மஸ்க் பதிவு செய்திருக்கிறார். தான் உரிமை கொண்டாடி வருவதுபோல் அவரின் அசாத்திய வளர்ச்சிக்கு அவர் ஒருவர் மட்டுமே காரணம் இல்லை. ஒவ்வொரு நிறுவனங்களிலும் கரம் கோர்த்த இணை முதலீட்டாளர்களும் எண்ணற்ற ஊழியர்களுமே எலானின் சாம்ராஜ்யத்திற்கு சாத்தியமானார்கள். ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா என்ற இரு வெற்றி நிறுவனங்களுக்குப் பின்னும் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டல் மட்டுமில்லை, குருதி தோய்ந்த வாழ்வாதார சுரண்டல் உள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன? – ஜோதிகுமார்

‘நாங்கள் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட சக பணியாளர்கள் வாரத்திற்கு 40 மணி நேரத்திற்கு மேல் கண்டிப்பாக வேலை செய்யவேண்டியுள்ளது. இயந்திரங்களுக்கு இணையாக ஈடுகொடுத்து பணியாற்ற வேண்டும். பணியாளர்கள் பற்றாக்குறையின்போதும் குறிக்கோளை அடைய எங்கள் உடல் பணையமாக்கப்படுகிறது. விபத்துகளும் உடல்நலக்குறைவுகளும் இயல்பாகிவிட்டன. நாட்டின் ஆட்டோ தொழிலாளர்களின் சராசரி ஊதியம் மணிக்கு 25.58 டாலர் எனும்போது டெஸ்லா பணியாளர்கள் 17லிருந்து 21 டாலரே பெறுகின்றனர். வாரத்திற்கு 60லிருந்து 70 மணிநேர உழைப்பு சுரண்டல் நான்கு வருடங்களில் ஒருவரைத் தளர்த்திவிடும். எங்கள் பொன்னான நேரமும் குடும்பங்களும் டெஸ்லாவின் வெற்றிக்காகப் பறிகொடுக்கப்படுகிறது. வருங்காலத்திற்கான நிறுவனம் என்று சொல்லப்படுவதில் கடந்தகால பணிச் சூழலில் வாழ்ந்து வருகிறோம்’ என்று 2017ம் ஆண்டு தனது இணையத்தில் பதிவிட்டார் டெஸ்லா ஊழியர் ஜோஸ் மோரன்.

மோரனின் வாக்குமூலம் ஏதோ தனி ஒருவரின் அனுபவம் மட்டுமல்ல. டெஸ்லாவின் ஒட்டுமொத்த ஊழியர்களின் நிலையும் அதுதான். காரின் அடிப்பாகத் தயாரிப்பில் இடைவிடாது வேலைப்பார்த்து கழுத்து முறிவு ஏற்பட்ட ஊழியர்கள் ஏராளம். 2014ம் ஆண்டிலிருந்து 100 முறைக்கு மேல் அங்கு ஆம்புலன்ஸ் வந்து சென்றுவிட்டது. விபத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு அவ்வளவு எளிதில் விடுப்பு கொடுக்கப்படுவதுமில்லை, கொடுத்தாலும் சம்பளம் பிடித்தம் செய்யாமல் இல்லை. தொழிலாளர்களின் பாதுகாப்பு நிலை குறித்த அறிக்கையை வழங்குவதற்கும் அந்நிறுவனம் விரும்புவதில்லை. ‘ஒரு சராசரி லட்சிய முதலாளித்துவ நிறுவனத்தின் லாப நஷ்ட கணக்கீட்டுக்கு முன் மற்றவை கவனிக்க முடியாமல் போகிறது. இங்கிருக்கும் கடின சூழலை நான் அறிவேன். மற்ற பணியாளர்களை விடக் கடினமாக உழைத்து முன்னுதாராமான மேலாளராக நான் இருப்பேன். ஏனெனில் நமது வருங்கால இலக்குதான் முக்கியம்’ என்று வெளிப்படையாகவும் பேசுகிறார் எலான் மஸ்க்.

இப்பேற்பட்ட சுரண்டல் முதலாளித்துவவாதி அனைவருக்குமான கருத்துச் சுதந்திரத்தை ஆதரிப்பேன் என்று கிளம்பியிருக்கிறார். முதலில் ட்விட்டரை எலான் வாங்கியதே, ‘ஒன்று தான் சொல்லும் திருப்திகரமான விலைக்கு நிறுவனத்தைக் கொடுத்துவிடுங்கள் அல்லது எனது பங்குகளைத் திறந்த நிலையில் விட்டுவிட்டு வெளியேறிவிடுவேன்’ என்ற வற்புறுத்தல் மூலம்தான். அவ்வளவு முயன்று ட்விட்டரை எலான் ஏன் வாங்க வேண்டும் என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. எலான் எந்தளவிற்குத் தீவிர லாப வேட்கை கொண்டவரோ அந்தளவிற்கு உலகத்திடம் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் செயல்படுபவர். தனது ரசிகர்களிடம் தொடர்ந்து உரையாடும் களமாக ட்விட்டரை பயன்படுத்தும் பெருமுதலாளி எலானாகத்தான் இருப்பார். அதேநேரத்தில், ட்விட்டரின் சில வரைமுறைகள் மீது அவருக்கு விமர்சனமும் உள்ளது. ‘டெஸ்லாவை முழுவதும் தனியுடைமையாகக் கைப்பற்றப் பணம் தேவைப்படுகிறது’ என்று 2018ம் ஆண்டு எலான் போட்ட ட்வீட்டை கண்டித்து பரிவர்த்தனை பாதுகாப்பு கழகம் அபராதம் விதித்தது. மேலும், தனது சில பதிவுகளால் முதலீட்டாளர்களின் வழக்குகளையும் எதிர்கொண்டுள்ளார். இதுபோன்ற கசப்பான அனுபவங்கள் உண்டு.

குஜராத்: ராமநவமி ஊர்வலத்தில் இஸ்லாமியர்களின் வீடுகள், மசூதிகள் இந்துத்துவ அமைப்புகளால் திட்டமிட்டுத் தாக்கப்பட்டதா?

அதாவது எலானைப் பொருத்தவரை ட்விட்டரில் அவர் எது செய்தாலும் அதனால் யதார்த்த வாழ்க்கையில் ஏற்படும் விளைவு ஒரு பொருட்டே இல்லை. அது ஒரு தனித்த உலகு, அதன் கட்டற்ற சுதந்திரத்தை ஆதரிக்க வேண்டும். இந்த கற்பனாவாத மனநிலையே சில ஒழுங்கு விதிமுறைகளும் அவருக்கு வெறுப்பைத் தருகிறது. அந்த மனநிலை எந்தளவிற்கு மோசமானது என்றால் ஒருவர் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் மூடத்தனத்தைப் பிரச்சாரம் செய்யலாம், அறிவியலுக்குப் புறம்பாகப் பேசலாம், கலவரத்தைத் தூண்டலாம்… அனைத்தும் இதில் சாத்தியப்படும். சரி, ட்விட்டரின் ஒரே முகமாகிவிட்ட அவரால் அடிப்படை கருத்துரிமை அனைவருக்கும் கிடைக்கும் என்பதை முதலில் நம்பலாமா?, உறுதியாக இல்லை எனலாம். அதற்கு நாம் வருங்காலம் வரை காத்திருக்க வேண்டியதில்லை, அவரின் கடந்தகால நடவடிக்கைகளிலிருந்தே அறியலாம்.

எலானை விமர்சிக்கும் அனைத்து கணக்குகளும் பாரபட்சமின்றி முடக்கப்பட்டன. இதில் பத்திரிகையாளர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் அடக்கம். சமூக வலைத்தளங்களில் புகார்கள் கூறும் டெஸ்லா ஊழியர்கள் மிரட்டலுக்கு ஆட்பட்டார்கள். 2020ம் ஆண்டுவாக்கில் பள்ளி மாணவனொருவன் எலானின் தனி ஜெட் விமானம் எங்கெல்லாம் பயன்படுகிறது என்பதைப் பின்தொடர்ந்து (Track) அதை ட்விட்டர் கணக்கில் பதிவிட்டு வந்தான். அவனிடம் பேரம் பேசி கணக்கை நீக்குமாறு கேட்டார் மஸ்க். அவன் ஒப்புக்கொள்ளாததால் அந்த கணக்கை மொத்தமாக முடக்கினார். மேலும், தன் மீதான விமர்சனத்தில் எந்தளவிற்கு சகிப்புத்தன்மையற்றவர் என்பதற்கு ஒரு நிகழ்வைக் குறிப்பிடலாம். பிரபலமான நபர்களுக்கே உரியதுபோல் எலானுக்கும் பல போலி மற்றும் பகடி (Troll) கணக்குகள் இருந்தன. ‘Italian Elon musk’ என்ற போலி பகடி கணக்கொன்று எலானை மையப்படுத்திப் பல நகைச்சுவை பதிவுகளைப் பதிவிட்டு வந்தது. இதில் கடுப்பான மஸ்க், அந்த பக்கத்தை முடக்கியது மட்டுமல்லாமல் ட்விட்டர் நிறுவனத்தின் உதவியுடன் ‘மஸ்க்’ என்ற பெயர் கொண்ட பெரும்பாலான கணக்குகளை நீக்கினார்.

தன் நலன் சார்ந்த, தான் நம்பும் விஷயங்களை மட்டுமே கருத்து என நம்பும் மஸ்க்தான் இன்று கருத்துச் சுதந்திரத்தைப் போதிக்கிறார். அது முழுக்க அவர் வர்க்க நிலை சார்ந்த வலதுசாரி வெறுப்பரசியலுக்கான தொடக்கமே ஆகும். ட்விட்டரில் அரசியல் தலையீடு, அர்த்தமற்ற ஒழுங்குமுறை என்று அவர் கடிந்துகொள்ளக் காரணம் சட்ட விதிகள், சமூக ஒருங்கிணைவு போன்ற விஷயங்கள் மீது அவருக்குள்ள ஒவ்வாமையே எனலாம். ‘வலதுசாரி அல்லது இடதுசாரி என்ற எந்த வரையறைக்கும் ஆட்படாமல் யாதுமற்ற நடுநிலை சுதந்திரத்தைக் காப்பதே தனது நோக்கம்’ என்கிறார். இடதுசாரிகளைக் கூர்மையாக விமர்சிக்கும் எலான் மஸ்க் உண்மையிலேயே எந்த சுமையுமற்ற சுதந்திர சமூகத்தை உருவாக்க முனையவில்லை. மாறாக, இடதுசாரிகள், சமூக செயற்பாட்டாளர்களின் விமர்சனங்களை அழித்தொழித்து சுதந்திர சுரண்டல் சமூகத்திற்கு வழியமைக்கிறார்.

மனித உரிமைகளை நிலைநாட்ட தவறினால்? – அண்ணல் அம்பேத்கரின் மகத் குள போராட்ட உரை

பல விமர்சனங்கள் இருந்தாலும் வருங்கால உலக வளர்ச்சி குறித்த பார்வையில் தனித்துவ லட்சியம் கொண்ட நபர் எலான் மஸ்க். அவரை யாருடனும் ஒப்பிட முடியாது, குறிப்பிட்ட எல்லைக்குள் சிக்காதவர் என்று சொல்லக் கேட்டிருப்போம். தன் தொழில் வேட்கையைத் தவிர வேறெதுப் பற்றியும் கவலைப்படாத அவரின் சிக்கலான மனநிலையைப் புரிந்துகொள்வது புதிரானது அல்ல. அவரே கூறிக்கொள்வதுபோல் அவர் எந்த நிலையுமற்ற யாதுமற்றவரும் அல்ல. நிகழ்காலத்திலேயே எலானோடு ஒப்பிட்டு ஒரு நபரைக் குறிப்பிடுவது என்றால் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை கூறலாம். ட்ரம்ப்பிடம் இருந்தது ‘தன்முனைப்பு கோட்பாடு’ (Me first Doctrine) என்பார் பிரபல அறிஞர் நோம் சாம்ஸ்கி. உலகே எதிர்த்தும் பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது, அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு அடிகொடுத்த பணக்காரர்களின் சொத்துவள வரி நீக்கம், ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கிய கேப்பிட்டல் கட்டிடத் தாக்குதல் போன்றவையெல்லாம் டிரம்ப் தன்முனைப்பின் பேரில் அரங்கேற்றியவை. பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாத எலானும் வியாபார வெறி அதனால் கிடைக்கும் செல்வத்திற்கும்  புகழுக்கும் பொருட்டே கடிவாளமிட்டுப் பயணிக்கிறார். தன்னால் மட்டுமே இந்த உலகைக் காத்து மற்றொரு நிலைக்குக் கொண்டு செல்ல முடியும் என்ற ஒருவித மீட்பர் மனநிலையும் அவருக்குண்டு. ஆனால், ‘அடிப்படை மனித உறவைக்கூட அவர் இயந்திரத்தன்மையிலேயே பார்த்தார். மனித உணர்வுகளை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை’ என்றார் எலானின் முன்னாள் மனைவி ஜஸ்டின் மஸ்க். ‘வாரத்திற்கு 40 மணிநேரம் மட்டுமே வேலை செய்தால் நம்மால் இந்தக் காலத்தில் செவ்வாயை காலனிப்படுத்த முடியாது’ என ஸ்பேஸ் எக்ஸ் ஊழியர்களிடம் கடிந்திருக்கிறார். தொழிலாளர்களுக்கு விபத்து ஏற்பட்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் ‘வேலைதான் முக்கியம், வேலையைப் பாருங்கள்’ என்று கூறுவார். பெருந்தொற்று உச்ச நிலையிலிருந்த வேளையிலும் தொழிற்சாலையைத் திறந்து தொழிலாளர்களைக் கட்டாய பணியில் ஈடுபடுத்தினார். இப்படிப்பட்டவர் முன்னணி சமூக வலைத்தளத்தைப் பெற்றிருப்பது கருத்துச் சுதந்திரத்திற்கான அக்கறை அல்லது வெறும் பொழுதுபோக்கு நடவடிக்கை என்று சுருக்கிவிட முடியாது. எலானின் ஆதிக்க எதேச்சதிகாரத்திலிருந்து பார்க்கும்போது அது திறந்த ஜனநாயக சமூகத்திற்கான எச்சரிக்கையாகவே இருக்கும். நம்மால் உரிமைக்கான போராட்டங்களை பொது சதுக்கத்தில்தான் நடத்த முடியுமே தவிர தனியார் இடங்களில் அல்ல. அந்தவகையில், எலான் மஸ்க் ஒருபோதும் நமது வருங்காலமாக முடியாது. மாறாக விட்டொழிக்க வேண்டிய கடந்த காலத்தின் கொடுங்கனவு!

மு. அப்துல்லா, ஊடகவியலாளர்

மேடையிலேயே சம்பவம் செய்த ஸ்டாலின் R Vijaya Sankar Interview

எலான் மஸ்க் கருத்துச் சுதந்திர போராளியா? – மு. அப்துல்லா

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்