கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி, உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள நந்த் பாபா கோவிலில், இரண்டு இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர். அவர்கள் தொழுகை செய்யும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இதையடுத்து அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. இதுதொடர்பான முதல் தகவல் அறிக்கையில் ”இருவர் அந்த கோயிலில் தொழுகை செய்ததாகவும் (ஃபைசல் கான், முகமது சந்த்), இரண்டு நபர்கள் (நித்தேஷ் குப்தா, சாகர் ரத்னா ) அதை தங்கள் கைபேசியில் பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகவும்” தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த கோயிலின் பூசாரி கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள், சுதந்திர போராட்ட வீரர் கான் அப்துல் காஃபர் கான் தொடங்கிய, குதை கித்மத்கர் (இறைவனின் தொண்டர்கள்) எனும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது பின்னர் தெரியவந்தது.
முன் அனுமதியுடன் கோவிலில் தொழுகை செய்தவர் கைது – உத்தர பிரதேச காவல்துறை நடவடிக்கை
இவர்கள், ஒவ்வொரு ஆண்டும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொள்வார்கள். கடந்த 20 ஆண்டுகளாக நடைபயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்த குதை கித்மத்கர் அமைப்பு ”தொழுகை செய்த நபர்கள், அங்கிருந்த கோயில் பூசாரியிடம் அனுமதி பெற்றுதுதான் தொழுகை செய்தார்கள்” என தெரிவித்திருந்தது.
இதையடுத்து, கோயிலில் தொழுகை செய்தவரும் குதை கித்மத்கர் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான ஃபைசல் கான் கைது செய்யப்பட்டார்.
மீண்டும் மசூதியில் அனுமன் பாடல் – உத்தர பிரதேசத்தில் தொடரும் சர்ச்சை
ஃபைசல் கான் மீது, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ (இரு சமூகங்களுக்கு இடையே பகையை உண்டாக்குவது), 295 (வழிப்பாட்டு தலங்களை அவமதிப்பது), 505 (பொதுஅமைதியை கெடுப்பது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர், 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
இதையடுத்து, ஃபைசல் கான் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் “வைரல் ஆன புகைப்படங்களை மட்டுமே அடிப்படையாக வைத்துக்கொண்டு மனுதாரருக்கு, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கம் இருப்பதாகக் கூற முடியாது. அவர் கோயிலின் கருவறைக்குள் நுழையவில்லை. அதற்கு வெளியே பூசாரியின் அனுமதி பெற்று, தொழுகை தான் செய்துள்ளார் என்பது புகைப்படங்களிலிருந்து தெளிவாகத் தெரிகின்றது” என்று கூறி அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் (கோயில் வளாகத்தில் தொழுகை செய்தவர்) மற்றொரு நபரான, முகமது சந்த், முன் ஜாமீன் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடியதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
“அரசியல்வாதிகள்தான் மதத்தை முன்னிலைப்படுத்துகிறார்கள்” – அனுமன் கோயிலுக்கு இடம் வழங்கிய இஸ்லாமியர்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சித்தார்த் தலைமையிலான அமர்வு “அந்த கோயிலின் தலைமை சாமியார், அவருக்கு (முகம்மது சந்த்) பிரசாதமும், மதிய உணவும் வழங்கியுள்ளார். அவரிடம், ஆசி பெறுவதும் அந்த சர்ச்சைக்குரிய புகைப்படத்தில் தெளிவாக தெரிகிறது” என்று தெரிவித்தாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
”காவல்துறையின் கடைசி கட்ட வாய்ப்பாக தான் கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். வழக்குகளில் தேடப்படுபடும் நபர் அல்லது முக்கியமானவர் அல்லது விசாரிக்கப்பட வேண்டிய தேவை இருந்தால் தான் கைது செய்யலாம் என்பதை நீதிமன்றம பலமுறை வலியுறுத்தியுள்ளது. பகுத்தறிவற்ற மற்றும் கண்மூடித்தனமான கைதுகள், மனித உரிமை மீறல் ஆகும்” என்று தெரிவித்த நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு முன் ஜாமீன் வழங்கியதாக அந்த செய்தியில்கூறப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.