டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் சாய்பாபாவை விடுதலை செய்த மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மாவோயிஸ்ட்டுகளுடன் இணைந்து சதியில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த டெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்ட 5 பேரை, மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை நேற்று விடுவித்தது. மேலும், சிறையில் இருக்கும் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. மேலும் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரியது.
மகாராஷ்டிரா அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் சனிக்கிழமை விடுமுறை நாள் என்ற போதிலும் சிறப்பு அமர்வு மூலம் மனுவினை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. நீதிபதிகள் எம்ஆர் ஷா, பேலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவினை விசாரித்தது. அப்போது குற்றவாளிகளை விடுதலை செய்த மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், குற்றவாளிகள் சிறையிலேயே இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும், சாய்பாபா உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் டிசம்பர் 8ம் தேதி வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
விசாரணையின் போது சாய்பாபா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாசந்த், தன்னுடைய கட்சிக்காரர் 90 சதவீதம் உடல் ஊனமுற்றவர், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் சக்கர நாற்காலியிலேயே தான் இருக்க வேண்டியவராக இருக்கிறார். அதனால் அவருடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவரை வீட்டுக்காவலில் வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
முன்னதாக, மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு பணியிலிருந்து நீக்கப்பட்டு, ஆயுதப் பரவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட டெல்லி பல்கலைக்கழக் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவை அந்த வழக்கிலிருந்து விடுவித்து மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்தது. நீதிபதிகள் ரோஹித் தியோ, அனில் பன்சாரே அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. சாய்பாபாவை உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்கும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
பேராசிரியர் சாய்பாபா மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு 2014-ம் ஆண்டு மே-மாதம் கைது செய்யப்பட்டார். அதாவது காவல்துறையின் தகவல்களின் படி, நக்சல் தலைவர்களுடன் சாய்பாபா தொடர்பு வைத்திருந்தார் என்றும் குறிப்பாக தலைவர் முப்பல்ல லஷ்மண ராவ் என்பவருடன் தொடர்ச்சியாக தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது. ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் ஹேம் மிஸ்ராவைக் கைது செய்து விசாரித்த போது சாய்பாபாவுக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே தான் தூது சென்றதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த வழக்கிலிருந்து பேராசிரியர் சாய்பாபா விடுவிக்கப்பட்டிருந்தார். அவருடன் கைதான மேலும் 4 பேரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். சாய்பாபா தற்போது நாக்பூர் சிறையில் உள்ளார். உடல்நலக் குறைவு காரணமாக அவர் சக்கர நார்காலியில்தான் இருக்கிறார். சாய்பாபாவுடன் பத்திரிகையாளர் ஒருவர், மாணவர் ஒருவர் உள்பட 6 பேர் கைதாகினர். இதில் ஒருவர் உயிரிழந்துவிட்டார். மற்ற 5 பேரும் தற்போது சிறையில் உள்ளனர்.
Source : live law
நம்ம ஊரு ஆட்டுக்காரனின் அமெரிக்க சாகசம் | அதிபரைச் சொரிந்து விட்டு அடி வாங்கிய கதை | Aransei Roast
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.