கொழும்புவின் கிழக்கு கன்டெய்னர் முனைய வளர்ச்சி பணிகளுக்காக ஜப்பான் – இந்தியாவுடன் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக இலங்கை முடிவு செய்துள்ளது இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்ததோடு, அது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கும் வாய்ப்புகளையும் இந்தியா இழந்திருக்கிறது என்று தி ஹிந்துவில் எழுதிய கருத்து பதிவில் தெற்காசிய பல்கலைக் கழகத்தின் சட்டத் துறை துணை பேராசிரியர் பிரபாஷ் ரஞ்சன் கூறியுள்ளார்.
அதானிக்கு ஆதரவான பழைய திட்டத்திற்கு பதில் புதிய திட்டம் – இலங்கை அரசு அறிவிப்பு
இந்திய – இலங்கை இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் 1997-ம் ஆண்டு கையொப்பமிடப்பட்டது. அதன்கீழ், ஒரு நாட்டில் முதலீடு செய்யும் நிறுவனம், அந்நாட்டு அரசு ஒப்பந்த கடமைகளை மீறி விட்டதாக கருதினால், அது தொடர்பாக சர்வதேச நடுவர் மன்றத்தில் வழக்கு தொடுக்கலாம்.
இத்தகைய ஒப்பந்தங்களின் கீழ், முதலீடு செய்யப்பட்ட நாட்டின் அரசு, முதலீட்டாளர்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை பாதுகாக்க வேண்டும் என்று சர்வதேச நடுவர் மன்றங்கள் தொடர்ந்து தீர்ப்பளித்து வந்திருக்கின்றன. இந்தியாவுடன் துறைமுக வளர்ச்சிப் பணிக்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதன் மூலம் இலங்கை அரசு அத்தகைய முதலீட்டாளரின் சட்டபூர்வமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தை, குறிப்பான நியாயமான காரணம் சொல்லாமல், ரத்து செய்வது அத்தகைய எதிர்பார்ப்பை மீறுவதாகும். எனவே, இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தின் கீழ் முதலீடு செய்த நிறுவனம் சர்வதேச நடுவர் மன்றத்தில் இலங்கை அரசு மீது வழக்கு தொடுக்கலாம்.
” வெளிநாடுகளில் இந்தியச் சொத்துக்களை கைப்பற்ற நடவடிக்கை ” – கெய்ர்ன் அச்சுறுத்தல்
ஆனால், இருதரப்பு முதலீடுகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் 1997-ம் ஆண்டின் இந்திய – இலங்கை இருதரப்பு முதலீட்டு ஒப்பந்ததை 2017-ம் ஆண்டே மோடி அரசு ரத்து செய்திருந்தது. இந்திய அரசுக்கு எதிராக பல சர்வதேச வழக்குகள் தொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மோடி அரசு பல்வேறு நாடுகளுடனான இரு தரப்பு ஒப்பந்தங்களை ரத்து செய்ததன் ஒரு பகுதியாக இலங்கையுடனான ஒப்பந்தத்தையும் ரத்து செய்திருந்தது.
எனவே, இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்த பிறகு, போடப்பட்ட கொழும்பு துறைமுக வளர்ச்சி ஒப்பந்தத்தை இலங்கை அரசு மீறியது தொடர்பாக, இந்திய முதலீட்டாளர் (அதானி குழுமம்) சர்வதேச நடுவர் மன்றத்தில் இலங்கை மீது வழக்கு தொடர்ப்பது சாத்தியமற்று போயுள்ளது என்று பிரபாஷ் ரஞ்சன் கருத்து தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.