அருணாச்சல பிரதேசத்தின் இந்தியா- திபெத் எல்லையில் அமைக்கப்படவிருக்கும் நெடுஞசாலையைக் குறித்து அமெரிக்க பரிந்துரைக் குழு ஒன்று, கவலை தெரிவித்துள்ளதாக தி இந்து இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
நெடுஞ்சாலை அமைக்கப்படவிருக்கும் இந்த இடத்தில், இரண்டாம் உலகப் போரின் போது உயிரிழந்த 400 அமெரிக்க ராணுவ விமானிகளின் சடலங்கள் உள்ளன. அவை முறையாகப் புதைக்கப்படவில்லை. தற்போது, நெடுஞ்சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டால் இந்த இடத்துக்குப் பாதிப்பு ஏற்படும் என்று அமெரிக்கர்கள் அஞ்சுகின்றனர்.
போரின் போது பல அமெரிக்க விமான படை வீரர்கள் கிழக்கு இமயமலை பகுதிக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டது. அவ்வாறு இமயமலைக்கு வந்த பல வீரர்கள் தங்களது சொந்த நாட்டிற்குத் திருப்பவில்லை. இந்த வீரர்களின் குடும்பத்தினர் இனைந்து ‘அமெரிக்கஸ் அருணாச்சல் மிஸ்ஸிங் இன் அக்சன்’ (America’s Arunachal Missing in Action) குழுவை உருவாக்கி உள்ளனர்.
இன்றைய அருணாச்சல பிரதேசத்தில் 400 அமெரிக்க விமானப்படை வீரர்கள் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை 2004-ம் ஆண்டில் கண்டறிந்தது.
இது குறித்துப் பேசிய இந்தக் குழுவின் நிறுவனரும் தலைவருமான கேரி ஜெய்ட்ஸ், “நெடுஞ்சாலை பணியின்போது, விபத்துக்குள்ளான இடங்களைத் பாதுகாக்க இந்திய அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காது எனும் அச்சம் எங்களுக்கு உள்ளது. இது எங்களது அன்புக்குரியவர்களின் தற்காலிக ஓய்விடமாக உள்ளது. உயிரிழந்தவர்களின் மனித எச்சங்களை மீட்பதற்கான அனுமதியை இந்திய அரசு வழங்கும் வரை இது அவர்களின் தற்காலிக ஓய்விடமாக இருக்கும்” என்று தி இந்து விடம் கூறியுள்ளார்.
விபத்து நடைபெற்றதாகக் கண்டறியப்பட்ட தளங்களை ‘கொள்ளையர்கள் மற்றும் நேர்மையற்ற சுற்றுலா நிறுவனங்களிடமிருந்து’ பாதுகாக்க அவ்வப்போது குழுவினர் இந்திய அரசுக்குப் புகார்களை அளிப்பதாக கேரி ஜெய்ட்ஸ் கூறியுள்ளார். ஆனால், இந்திய அரசு அவற்றை பொருட்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சட்டத்தின்படி, மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவுக்கும், தங்கள் எல்லைகளுக்குள் காணாமல்போன வெளிநாட்டு ராணுவ வீரர்களின் இடத்தைப் பாதுகாக்கும் கடைமை உள்ளது என்று இந்தக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் இறுதி காலகட்டத்தில் (1943-45) அமெரிக்க விமானப்படை சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு ஆதரவாகவும் ஜப்பானிய இராணுவத்திற்கு எதிராகவும் இமயமலையை வந்தடைந்தது. அதன்பிறகு ஏற்பட்ட விபத்தில் அமெரிக்க விமான படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.