Aran Sei

`கூட்டாட்சிக்கு எதிரானது’ – விவசாயச் சட்டங்களுக்கு எதிராக கிராமசபைகள் தீர்மானம்

Image Credits: The Hindu

த்திய அரசால் புதிதாக இயற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு எதிராகப் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்களை விவசாயிகள் நடத்திவருகின்றனர். நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக மற்றும் கூட்டாட்சி செயல்முறைகளில் ஒன்றாக அழைக்கப்படும் வேளாண் சந்தைப்படுத்தல் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானங்களை நிறைவேற்றவும் எதிர்ப்புகளைப் பதிவு செய்யவும் பஞ்சாப் விவசாயிகள் இப்போது அணிதிரண்டு வருகின்றனர்.

பஞ்சாபில் 13,000 கிராம சபைகள் உள்ளன. அக்டோபர் 3 ஆம் தேதி நிலவரப்படி, பல கிராமப் பஞ்சாயத்துகள் ஏற்கனவே வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஒருமித்த கருத்துக்கு வந்துள்ளதாக தி வயர் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது. வரவிருக்கும் வாரங்களில், மேலும் பல கிராம சபைகள் இந்த எண்ணிக்கையில் சேர உள்ளன.

செப்டம்பர் 30 ஆம் தேதி சங்ரூர் மாவட்டம் கராச்சோன் கிராமத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானத்தை நிறைவேற்றும் கிராம சபை நிகழ்வில் ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பகவந்த்மான் கலந்துகொண்டார்.

பாஜகவின் சன்னி தியோல் குர்தாஸ்பூரைச் சேர்ந்த எம்பியாக இருக்கும் நிலையில், அக்டோபர் 3-ம் தேதி அம்மாவட்டத்தின் போலேக் கிராமமும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியது.

பஞ்சாப் பஞ்சாயத்து ராஜ் சட்டம் 1994-ன் படி, சுயராஜ்ய கிராம பஞ்சாயத்து அமைப்புகள் ஏழு நாட்கள் முன் அறிவிப்புக்குப் பிறகு சிறப்பு அமர்வுகளைக் கூட்டலாம். பின்னர் சபை ஒன்றாக அமர்ந்து குரல் வாக்கெடுப்பு அல்லது கைகளை உயர்த்தி நடத்தப்படும் வாக்கெடுப்பு முறையின் மூலம் ஒருமித்த கருத்தை எட்டும்.

பின்னர், இந்த ஒருமித்த கருத்து (மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான) அரசாங்கத்தின் நிர்வாகத் தளங்கள்மூலம் பிரதமர் மற்றும் இந்தியாவின் ஜனாதிபதிக்கு அனுப்பப்படும்.

புதிய வேளாண் சட்டங்களை எதிர்க்கும் கிராமத் தலைவர்கள்

“இந்தக் கிராமங்களில் பண்ணைத் தொழிலாளர்கள், கலனடை விவசாயிகள் (பால் விற்பனை செய்யும் விவசாயிகள்), தினசரி கூலி வேலை செய்பவர்கள் மற்றும் சிறு வணிகர்கள் கூட உள்ளனர். அனைத்து கிராமத் தலைவர்களும் வரவிருக்கும் வாரங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதாகக் கூறினர்,” என்று பல கிராமத் தலைவர்களுடன் பேசிய தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

சுஹார்பூர் கலன் கிராமத்தின் தலைவர் மல்கீத் சிங், அடுத்த சில நாட்களுக்குள் இது நடந்துவிடும் என்றும் அவரது கிராமப் பஞ்சாயத்து செயலாளர் இந்தக் கடிதத்தை மாவட்ட துணை ஆட்சியருக்குச் சமர்ப்பிப்பார் என்றும் கூறியுள்ளார்.

புதிய சட்டங்கள் நில உரிமையாளர்களின் வருமானத்தை நேரடியாகத் தாக்கும் என்றும், பெரும்பாலான மக்கள் பண்ணைத் தொழிலாளர்களாக வேலை செய்வதால் கிராமத்தில் உள்ள அனைவரின் வாழ்வாதாரத்தையும் இது பாதிக்கும் என்றும், வஜீர்பூர் கிராமத்தின் தலைவர் மன்பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.

ஃபதேபூர் கிராமத்தைச் சேர்ந்த ஜோகிந்தர் சிங், அவர் ஒரு விவசாயி என்றும், அவரது கிராமத்தில் உள்ள அனைவரும் மத்திய அரசின் சட்டங்களைக் கடுமையாக எதிர்க்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

தி வயர் இணையதளத்துக்குக் கிடைத்த வரைவுத் தீர்மானத்தில்,

“இந்த மசோதாக்கள் நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு எதிரானது என்று கிராமசபை கருதுகிறது. பயிர்களின் ஊக்கத் தொகையைத் திரும்பப் பெறுதல், கார்ப்பரேட் நிறுவனங்கள் பந்துகளில் ஈடுபடுவதற்கு வழிவகை செய்வது, விவசாயிகள், தொழிலாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட மக்களுக்கு எதிரானது. எனவே, இந்த மசோதாக்களை கிராமசபை ஒருமனதாக நிராகரித்து, அதைத் திரும்பப் பெறுமாறு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கிறது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“முழு நாட்டின் கிராம சபைகளும் தாங்கள் ஒன்றிணைய முடியும் என்பதை உணர்ந்தால், இந்த இயக்கம் பெரியதாக மாறக்கூடும்” என்று பஞ்சாபின் கிராமப்புற நிகழ்வுகளைப் பதிவுசெய்யும் மூத்த பத்திரிகையாளர் ஹமீர் சிங் கூறியுள்ளார்.

முன்னதாக, புன்டம்பா கிராம சபாவின் யோசனை காட்டுத்தீ போல் பரவி, அரசாங்கத்திடமிருந்து விவசாயக் கடன் தள்ளுபடி கோர ஒரு பெரிய இயக்கத்திற்கு வழிவகுத்தது. பின்னர் மகாராஷ்டிரா அரசு மாநில விவசாயிகளுக்கு முழுமையான விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானங்களை நிறைவேற்றக் கிராம சபைகளுக்குத் தமிழ்நாட்டில் திமுக எம்எல்ஏக்களும் அழைப்பு விடுத்துள்ளனர்.

`கூட்டாட்சிக்கு எதிரானது’ – விவசாயச் சட்டங்களுக்கு எதிராக கிராமசபைகள் தீர்மானம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்