Aran Sei

மோசமடைந்து வரும் வரவர ராவின் உடல்நிலை ; கண்டுகொள்ளாத அரசு

பீமா கோரேகான் வழக்கில் சிந்தனையாளர்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும் கைது செய்யப்பட்டதற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும் கூட, சிறையில் அவர்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்க அரசு முன்வரவில்லை.

வழக்கு தொடர்பாக 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தெலங்கானாவைச் சேர்ந்த கவிஞர், எழுத்தாளர் வரவர ராவ் கைது செய்யப்படும்போது அவருக்கு 78 வயது. அப்போதே அவருக்கு வயது மூப்பு காரணமாக சில உடல் உபாதைகள் இருந்துள்ளன.

பீமா கோரேகான் வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 16 சமூகச் செயற்பாட்டாளர்களுள் வரவர ராவும் ஒருவர்.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைப்படுத்தப்பட்டு இருப்பதாலும், சிறையில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுச் சரியான சிகிச்சை அளிக்கப்படாததாலும் அவருடைய உடல்நிலை மிகவும் நலிவடைந்து வருகிறது.

கடந்த மே மாதம் அவர் சிறைப்படுத்தப்பட்டுள்ள மும்பை டலோஜா மத்திய சிறையில், வரவர ராவ் மயங்கி விழுந்திருக்கிறார். பின்னர் சிகிச்சைக்காக ஜேஜே அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தார். அச்சமயம் அவருடைய நரம்பு மண்டலமும் பாதிப்படைந்தது.

அதன் பிறகு அவருடைய உடல் நலத்தில் எந்த வித முன்னேற்றமும் இல்லாததால், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் குடும்பத்தினர் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். நீதிமன்றத்தில் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வருகிறது.

மாநிலக் காவல்துறை விசாரித்து வந்த பீமா கோரேகான் வன்முறை வழக்கு இந்தாண்டு ஜனவரி மாதம் என்ஐஏ-க்கு மாற்றப்பட்டது. வழக்கை மத்திய அரசு கையில் எடுத்ததுக்கு, மாநிலத்தின் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

அரசியல் காரணங்களுக்காக, இந்த வழக்கில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் நியாயமற்ற முறையில் குறிவைக்கப்பட்டுக் கைது செய்யப்படுகிறார்கள் எனவும் அக்கட்சிகள் சுட்டிக் காட்டியிருந்தன.

வழக்கை விசாரிக்கச் சிறப்பு விசாரணைக் குழு அமைப்பதாகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் மற்றும் மாநில உள்துறை அமைச்சர் கூறியிருந்தார்கள்.

இதன்படி பார்க்கையில், கைது செய்யப்பட்டுள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் குறித்து மாநில அரசு மிகவும் அக்கறை கொண்டுள்ளது போலத் தோன்றலாம். எனில், மருத்துவ சிகிச்சைக்கான அவர்களுடைய உரிமை காக்கப்பட்டிருக்கும்.

ஆனால், அப்படி நடக்கவில்லை. மிகவும் மோசமான உடல்நிலையில் உள்ள 81 வயதான வரவர ராவ், மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படுவதற்கே பல மாதங்கள் போராட வேண்டி இருந்தது.

நவம்பர் 18-ம் தேதி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்குப் பிறகுதான் அவருக்கு மருத்துவ சிகிச்சை உறுதி செய்யப்பட்டது. வரவர ராவுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில், சிறைத்துறையும் சுகாதாரத்துறையும் கடமை தவறியிருக்கின்றன.

மே மாதம் ஜேஜே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரைக் குடும்பத்தினர் சந்திக்கச் சென்றபோது, கவனிப்பாரின்றி மூத்திரத்தில் நனைந்து கிடந்ததாகக் கூறியுள்ளார்கள்.

எத்தனை முறை கேட்டும்கூட இன்று வரையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும்போது கொடுக்கப்பட வேண்டிய எந்த அறிக்கையும் அவருடைய குடும்பத்தினருக்கு வழங்கப்படவில்லை.

இன்னும் சொல்லப்போனால் ஜூலை 30-ம் தேதிக்குப் பிறகு அவர் உடைநிலை குறித்த எந்தத் தகவலுமே அரசு வெளியிடவில்லை.

நவம்பர் 12-ம் தேதி வரவர ராவுக்குக் காணொலி மூலம் மருத்துவப் பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. நரம்பியல் மற்றும் சிறுநீரகத்தில் பாதிப்புகள் உள்ள போதிலும், அந்தத் துறை சார்ந்த நிபுணர்கள் வரவர ராவைப் பரிசோதிக்கவில்லை.

மேலும், பன்வேலில் பரிசோதனை கொடுத்துள்ள மருத்துவ அறிக்கையில், வரவர ராவின் வயது மற்றும் பரிசோதனை தேதி உட்பட பல தகவல்கள் தவறாக இருந்ததை வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் நவம்பர் 18-ம் தேதி நடந்த விசாரணையில் சுட்டிக் காட்டினார்.

இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, பழங்குடியினர் உரிமைக்காகப் போராடிவரும் சமூகச் செயல்பாட்டாளர் ஸ்டேன் சாமி நடுக்குவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். கையில் டம்ளரைப் பிடிக்க முடியாததால், அக்டோபர் 9-ம் தேதி ஒரு ஸ்டிரா வைத்த டம்ளர் கோரியுள்ளார். அது இன்னும் அவருக்கு வழங்கப்படாமல் உள்ளது.

எந்த முகமை வழக்கை விசாரித்து வந்தாலும், சிறைத்துறை மாநிலத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. வரவர ராவுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைப்பதை அரசு உறுதி செய்திருக்க வேண்டும். அந்த வகையில் அவருடைய உடல்நலம் மோசமாவது தடுக்கப்பட்டிருக்கலாம்.

நாட்டின் மிக முக்கியமான வழக்கறிஞரின் உதவி கிடைத்தும் வரவர ராவ் சிறையில் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுகிறார் என்றால், மீதமுள்ள 4,124 கைதிகளின் நிலையைக் கற்பனை கூட செய்ய முடியாது.

தற்போது வரை டலோஜா மத்திய சிறையில் இரண்டு கைதிகள் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு மரணமடைந்திருக்கிறார்கள்.

இதுபோன்ற சூழலில், மகாராஷ்டிர அரசு சந்தேகத்தின் அடிப்படையில் மட்டும் கைது செய்யப்பட்டுள்ள வரவர ராவின் உடல்நலம் மீது அக்கறை இன்றிச் செயல்பட்டு, அவருடைய வாழ்வுரிமையைக் காக்கத் தவறியுள்ளது.

நன்றி : தி வயர்

மோசமடைந்து வரும் வரவர ராவின் உடல்நிலை ; கண்டுகொள்ளாத அரசு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்