Aran Sei

‘வரவர ராவ் பேச்சாளர்தான் ஆனால் அர்னாப் கோஸ்வாமி போல் கத்த முடியாது’ – வேணுகோபால் ராவ்

மக்கு வழங்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் 14 ஆம் பிரிவு, “அரசு எந்த நபருக்கும் சட்டத்திற்கு முன் சமத்துவத்தை மறுக்கக் கூடாது , இந்திய பிரதேசத்திற்குள் சமமான சட்ட பாதுகாப்பை வழங்காமல் இருக்கக் கூடாது” என்கிறது. ஆனால் இது சட்டத்தில் வெறும் எழுத்தாக மட்டுமே இருக்கும் மேன்மையான எண்ணமாக, சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டும் சலுகையாகவே தெரிகிறது. ரிபப்ளிக் தொலைக்காட்சியின் நிறுவனர் – ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி சட்டத்தால் நடத்தப்பட்ட விதத்திற்கும், இந்நாட்டில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கானோர் நடத்தப்படும் விதத்திற்கும் இருக்கும் வித்தியாசம் அச்சுறுத்துவதாக இருக்கிறது.

கோஸ்வாமி மற்றும் வரவர ராவின் வழக்குகள் முகத்தில் அறையும் வேறுபாடுகளை வெளிப்படுத்துகின்றன. வரவர ராவும் ஒரு ஊடகவியலாளர் தான்; அவர் ஒரு மாதாந்திர இலக்கிய பத்திரிக்கையை இருபத்தைந்து வருடங்களாக நடத்தி வந்தார்; பேராசிரியர், எழுத்தாளர், கவிஞர் என பல தளங்களில் இயங்கியவர் தினசரி பத்திரிக்கைகளில் கட்டுரையாளராகவும் இருந்தார். கடந்த ஐம்பது வருடங்களாக ராவ் பேச்சாளராக இருந்தாலும், கோஸ்வாமி போல அவரால் கத்த முடியாது. இருவரும் வெவ்வேறு காலங்களில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்ட முறையில் இருந்து, அவர்களின் கைது அரசியல் வட்டங்களில், அதிகார வர்க்கங்களில், நீதி அமைப்புகளில் என்ன மாதிரியான தாக்கத்தை உண்டாக்கியது என்பது வரை பல வேற்றுமைகளை பார்க்க முடிகிறது.

நவம்பர் 4 அன்று நடந்த கோஸ்வாமியின் கைது பயங்கரமாக விளம்பரப்படுத்தப்பட்டது; அவருடைய கைதின் வீடியோ பொதுத் தளங்களில் காணக் கிடைத்தது. மத்திய அமைச்சர்கள் உட்பட பல அரசியல்வாதிகள் அவருடைய ஆதரவாக பேசினார்கள், கைதிற்கு கண்டனம் தெரிவித்தார்கள். காவலில் இருந்த போது காவல்துறையினரும், சிறை அதிகாரிகளும் அவரை செல் ஃபோன் பயன்படுத்த அனுமதித்ததாக செய்திகள் வெளியாகின. அவர் கைது செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குள்ளேயே, அவருடைய ஜாமீன் மனு, அமர்வு நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் விசாரணைக்கு வந்தது. கீழ் நீதிமன்றங்கள் ஜாமீனை நிராகரித்தாலும், உச்ச நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி விடுதலை செய்தது.

இதோடு ஒப்பிடும் போது,2018 ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரவர ராவ் கைது செய்யப்பட்ட முறையே கொடூரமானதாக இருந்தது. புனேவில் இருந்து 20 காவல்துறையினர், தெலுங்கானா காவல்துறையினருடன் காலை ஆறு மணிக்கு அவருடைய வீட்டிற்குள் நுழைந்தனர். நுழைந்த உடனேயே வரவர ராவ் மற்றும் அவருடைய மனைவியின் செல்ஃபோன்களை கைப்பற்றி விட்டு, அவர்களுடைய லேண்ட்லைன் இணைப்பை துண்டித்தனர். அடுத்த எட்டு மணி நேரங்களுக்கு யாரையும் தொடர்புகொள்ள அவர்களை அனுமதிக்கவில்லை. அவருடைய வீட்டின் முற்றம் மட்டுமல்ல, அவர் இருந்த 180 – ஃப்ளாட்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் நுழைவு வாசலில் தடுப்புகள் வைக்கப்பட்டன.

வரவர ராவ் வீட்டில் இருந்த உதவியாளர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் யாரும் வீட்டிற்குள் அனுமதிக்கப்படவில்லை. பிற வீட்டு உரிமையாளர்கள் சோதனைக்கும், விசாரணைக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளானார்கள். ராவின் வீட்டிற்குள் இருந்த புத்தக அலமாரி நாசம் செய்யப்பட்டது. ஆவணங்களையும், ஆய்வுகளையும் அதிகாரிகள் வெளியே தூக்கி எறிந்தார்கள். 78 வயதான வரவர ராவும், அவருடைய 70 வயது மனைவியும் மதியம் 2.30 வரை துன்புறுத்தப்பட்டார்கள். அதற்கு பிறகு ராவ் காவல்துறையினரால்கொண்டு செல்லப்பட்டார். இந்த எட்டு மணி நேரங்களில், அவருடைய வழக்கறிஞரையோ, மருத்துவரையோ அழைக்கக் கூட ராவிற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.

ராவ் காலை ஆறு மணிக்கு அவருடைய வீட்டில் இல்லையென்றால், அவருடைய மகள்களின் வீட்டில் தேடுதல் நடத்த கூடுதலாக இரண்டு வாரண்டுகளை புனே காவல்துறையினர் வாங்கிக் கொண்டு வந்திருந்தனர். ஆனால், ராவ் காலை ஆறு மணிக்கு அவருடைய வீட்டில் இருந்த போதிலும், அவருடைய மகள்களின் வீட்டில் எட்டு மணி வரை தேடுதல் நடந்தது. ஒவ்வொரு வீட்டிலும் ஆறு மணி நேரங்கள் இருந்த பிறகு, அவருடைய மகள்கள், மருமகன்களின் செல் ஃபோன்களை கைப்பற்றினர். அவருடைய பேரக்குழந்தைகளின் கிண்டில் கருவிகள், விளையாட்டு முனையங்கள் மற்றும் பிற கெட்ஜெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார்கள்.

உச்ச நீதிமன்றத்தின் ஆணையின்படி 77 நாட்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த பிறகு, நவம்பர் 17 ஆம் தேதி மீண்டும் புனே காவல்துறையினர் அவரை கைது செய்ய வந்தனர். ராவின் வீட்டில் அப்போது ஆட்கள் கூடியிருந்ததால், இந்த கைது ஒரு பொது விஷயமாகவே இருந்தது. கைது வாரண்டை காட்டுங்கள் எனக் கேட்ட போது, புனேவை சேர்ந்த ஒரு அதிகாரி, நாங்கள் யாருக்கும் வாரண்டை காட்ட வேண்டிய அவசியம் இல்லை என மூர்க்கத்தனமாக பதில் சொன்னார். வாரண்டை காட்டியே ஆக வேண்டும் என நாங்கள் கேட்டதும், ஒரு உள்ளூர் அதிகாரி உங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என பயமுறுத்தினார். அதே அதிகாரி இப்போது லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டதற்காகவும், சொத்துகள் வாங்கி குவித்ததற்காகவும் சிறையில் இருக்கிறார்.

இதற்கு நேர் மாறாக, பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தப்பட்ட கோஸ்வாமியின் கைது நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. காவல்துறையினர் தாக்குகின்றனர், அதற்கு என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோஸ்வாமி சொன்ன போதெல்லாம், ஒத்துழைப்பு கொடுங்கள் என காவல்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியாகின. கோஸ்வாமி காவல்துறையினர் மத்தியில் ஒரு “என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்” இருப்பதை அடையாளம் கண்டதாக சொல்லி, அதனால் தன்னுடைய வழக்கறிஞரையும், மருத்துவரையும் அழைக்க அனுமதி கேட்டிருக்கிறார். பிறகு அவரை தூக்கிக் கொண்டு வீட்டிற்கு வெளியே இழுத்து வந்திருக்கிறார்கள்.

இப்படி கைது செய்வது சட்டத்திற்கு எதிரானது; நாகரீகமானதல்ல; கண்டனத்திற்குரியது. ஆனால், பிற கைதுகளையும் காவல்துறையினரின் இயல்பையும் வைத்து பார்க்கும் போது, கோஸ்வாமிக்கு நடந்தது மிகச் சாதாரணமான ஒன்றே. இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த மாதிரியான கைதுகளை கோஸ்வாமி ஆதரித்திருக்கிறார், ஊக்குவித்திருக்கிறார், கொண்டாடியிருக்கிறார்.

வரவர ராவின் கைதிற்கு சில இடதுசாரி அரசியல்வாதிகள் தவிர வேறு யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஆனால், கோஸ்வாமியின் கைதிற்கு எதிராக கண்டனம் தெரிவித்த மத்திய அமைச்சர்கள் உட்பட்ட தலைவர்களின் பட்டியல் மிக நீண்டது.

நீதிமன்ற காவலில் இருந்த போது கோஸ்வாமி செல் ஃபோன் பயன்படுத்தினார், அதன் விளைவாக தலோஜா சிறைக்கு மாற்றப்பட்டார் என செய்திகள் வெளியாகின. செல் ஃபோன் போன்ற வசதிகளுக்கு எல்லாம் இல்லை, ஒரு போர்வை, காலுறைகள், ஸ்ட்ரா, சிப்பர் போன்றவற்றை வாங்கக் கூட சிறை அதிகாரிகளிடமும், நீதிமன்றங்களிலும் பலமுறை அனுமதி கேட்க வேண்டியதாக இருந்தது.

வரவர ராவ் மற்றும் பீமா கோரேகாவுன் வழக்கில் கைதான மற்றவர்களுக்கு செய்தித்தாள்களும், பத்திரிக்கைகளும்,புத்தகங்களும் கூட அனுமதிக்கப்படவில்லை. கோஸ்வாமி ஃபோன் பயன்படுத்தியதற்கு ஒரு நாள் முன்னர், பிறந்த நாள் பரிசாக அனுப்பப்பட்ட, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் ‘நூற்றாண்டின் ஊழல்’ (The Scandal of the Century), புத்தகத்தை ராவிற்கு கொடுக்க மறுத்தார்கள்.

கோஸ்வாமி ஒரு வாரத்திற்குள் அமர்வு நீதிமன்றத்திற்கும், உயர் நீதிமன்றத்திற்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் சென்று விடுதலை பெற முடிந்தது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக விசாரணையும் இல்லாமல், ஜாமீனும் இல்லாமல் , ஜோடிக்கப்பட்ட ஒரு வழக்கினால் சிறையில் இருக்கிறார் வரவர ராவ். குறைந்த பட்சமாக நான்கு ஜாமீன் மனுக்கள் அமர்வு நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் – தகுதி அடிப்படையில், உடல் ஆரோக்கிய அடிப்படையில்( கோவிட் 19-ற்கு பாசிடிவ் ஆனது உட்பட) – கொடுக்கப்பட்டவை இருபது மாதங்கள் கழித்து ரத்தாகியிருக்கிறது. ஐந்தாவது ஜாமீன் மனு உயர் நீதிமன்றம் இழுத்தடிப்பதால் உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது, கீழ் நீதிமன்றத்தில் பேசிக் கொள்ளுங்கள் என்றது உச்ச நீதிமன்றம். உச்சநீதிமன்றம் சொன்னது போல உயர் நீதிமன்றத்தில் மீண்டும் முயற்சித்த போது, மறுபடியும் தாமதித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

அர்னாப் கோஸ்வாமி மீது இருக்கும் குற்றச்சாட்டுகளும், வரவர ராவ் மீதிருக்கும் குற்றச்சாட்டுகளும் வித்தியாசமானவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அர்னாப் கோஸ்வாமி தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்; வரவர ராவ் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த வேறுபாடு நம் கருத்தோடு தொடர்பில்லாதது; ஏனென்றால், குற்றம் நிரூபிக்கப்படும் முன் குற்றமற்றவர்கள் என்று அனுமானிக்கப்படும் உரிமை இருவருக்குமே இருக்கிறது.
இந்த ‘தீவிரவாதம்’ எனும் பூச்சாண்டி டி.வொய்.சந்திரசூட் போன்ற ஒரு நீதிபதியின் ஒடுக்குமுறைக்கு ஆளாக்கும் அறிவாற்றலை விட்டு தப்பித்துவிடவில்லை. ‘கோஸ்வாமி ஒன்றும் தீவிரவாதி அல்ல’ என அவர் சொல்லியதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. எந்த ஆதாரமும் இல்லாமல் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் அத்தனை பேரும் ‘தீவிரவாதிகளா’? நிரூபிக்கப்படும் வரை குற்றமற்றவர்கள் எனும் அனுமானம், கோஸ்வாமி மற்றும் அவரைப் போன்றோருக்கு மட்டும் தானா?

பீமா கோரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்களில் பெரும்பாலானோர், அந்த சம்பவத்திற்கும், அதைத் தொடர்ந்த வன்முறைக்கும் சம்பந்தம் இல்லாதவர்கள். ஆனால், எந்த நீதிமன்றங்களும் அவர்களுடைய ஜாமீன்களை விசாரிப்பதில்லை; எந்த நிறுவனமும் அவர்களுடைய விடுதலை குறித்து கவலைப்படுவதில்லை.

நவம்பர் 18 அன்று, இறுதியாக, ராவை தலோஜா சிறையில் இருந்து நானாவதி மருத்துவமனைக்கு 15 நாட்களுக்கு இடமாற்றம் செய்யுங்கள் என மும்பை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த வழக்கை இரண்டு வாரங்கள் கழித்து விசாரிப்பதாகவும் சொல்லியது.

இங்கே இன்னொரு வித்தியாசமும் இருக்கிறது : அந்த உயர்-டெசிபெல் கைதிக்கு 47 வயது- உடல்நிலை நன்றாக இருக்கிறது; ஆனால், சமமில்லாத குடிமகனுக்கோ வயது 80. கோவிட்-19-ற்கு பிறகு நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர். சோடியம் மற்றும் பொட்டாசியம் குறைபாடு, எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வு மற்றும் குற்றவியல் அலட்சியம் ராவிற்கு நினைவிழப்பும், கிட்டத்தட்ட டிமென்சியாவும் வர காரணமாக இருந்திருக்கிறது. ஒரு சிறுநீர் வடிகுழாயை இரண்டு வாரங்களுக்கு மேல் வைத்துக் கொண்டிருந்தால் ஆபத்தான நோய் தொற்றுகள் ஏற்படும் வேளையில், வரவர ராவ் உடலில் ஆகஸ்ட் 28, அன்று அவர் நானாவதி மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட போது, பொருத்தப்பட்ட சிறுநீர் வடிகுழாய் பத்து வாரங்களுக்கு பிறகும் அகற்றப்படாமல் இருக்கிறது.

இதைப் போன்ற வேதனையளிக்கும் சூழலில் மாட்டிக் கொண்டிருக்கும் பல ஆயிரம் கைதிகளின் அடையாளம் தான் வரவர ராவ். ஒரு அர்னாப் கோஸ்வாமிக்கு இங்கே நூற்றுக் கணக்கான வரவர ராவ்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு, நீதியின் முன் சமத்துவம் என்பது வெறும் புனைவாகவே இருக்கிறது.

கட்டுரையாளர் குறிப்பு : வேணுகோபால் ராவ், வீக்‌ஷணம் எனும் தெலுங்கு பத்திரிக்கையின் ஆசிரியர், வரவர ராவின் உறவினர்.

‘வரவர ராவ் பேச்சாளர்தான் ஆனால் அர்னாப் கோஸ்வாமி போல் கத்த முடியாது’ – வேணுகோபால் ராவ்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்