சமூக வலைத்தளங்களில் கருத்து சொல்வது தொடர்பான தகவல் தொழிற்நுட்பச் சட்டம் 66ஏ பிரிவு செல்லாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கருத்தில் கொள்ளாமல் பலரை 66ஏ பிரிவின் கீழ் உத்தரப்பிரதேச அரசு கைது செய்து வருகிறது என லைவ் லா செய்தி வெளியிட்டுள்ளது.
இணையத்தில் அவதூறான கருத்துகளைப் பதிவிடுபவர்கள் மீது அபராதம் உட்பட மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிப்பதற்கு வழிவகை செய்யும் சட்டமான தகவல் தொழிற்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66ஏ-வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 2012-ம் ஆண்டு ஸ்ரேயா சிங்கால் என்பவர் பொது நல வழக்கை தாக்கல் செய்தார்.
இந்திய அரசுக்கும் ஸ்ரேயா சிங்காலுக்கும் இடையே நடைபெற்ற இந்த வழக்கில் 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், சட்டப் பிரிவு 66ஏ அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 19-ஐ பாதிப்பதாகக் கூறி ரத்து செய்து உத்தரவிட்டது
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, பல்வேறு சந்தர்ப்பங்களில் அலகாபாத் உயர்நீதி மன்றம் நினைவூட்டல் என, எதையும் கருத்தில் கொள்ளாமல் உத்தரப்பிரதேசக் காவல்துறை 66ஏ பிரிவில் முதல் தகவல் அறிக்கைகளைத் தொடர்ந்து பதிவு செய்து வருவதாக லைவ் லா செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வாரம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரமேஷ் சின்ஹா மற்றும் சமித் கோபால் அடங்கிய அமர்வின் முன் 66ஏ பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ள பிரிவில் தொடர்ந்து வழக்குகளைப் பதிவு செய்யும் உத்தரப்பிரதேச அரசாங்கத்திற்கு நீதிமன்றம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
பேரறிவாளன் கருணை மனு குறித்து ஆளுநர் முடிவெடுக்க தாமதம் ஏன்? – உச்சநீதிமன்றம்
நீதிபதி ரமேஷ் சின்ஹா தலைமையிலான அமர்வு, எதனால் இந்தப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்று காவல் துறையினரிடம் கேள்வியெழுப்பியுள்ளது.
2019-ம் ஆண்டு, தகவல் தொழிற்நுட்பச் சட்டம் பிரிவு 66ஏ-வைப் பயன்படுத்தி மக்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதற்கு எதிராக, குடியுரிமை உரிமைக்கான மக்கள் கழகம் (பியூசிஎல்) தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அனைத்து உயர் நீதிமன்றங்களும் ஸ்ரேயா சிங்கால் வழக்கின் தீர்ப்பை, அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் 8 வாரங்களுக்குள் அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும், மாநிலத்தின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் காவல்துறை தலைவர்கள் இதைப் பற்றிய விழிப்புணர்வைக் காவல்துறையினரிடம் ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டதாக தி வயர் கூறியுள்ளது. இத்தனை நடவடிக்கைகளுக்குப் பிறகும் 66ஏ பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.
சில சந்தர்ப்பங்களில் உத்தரப்பிரதேசக் காவல்துறையினரால் பிரிவு 66ஏ-வின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை உயர் நீதிமன்றம் ரத்து செய்ய மறுத்துவிட்ட சம்பவங்களையும் லைவ் லா குறிப்பிட்டுள்ளது.
பத்திரிகையாளர்கள் சிவகுமார் மற்றும் ரோகித் சிங்கால் 66ஏ பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டபோது அதை அலாகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ய மறுத்தது குறிப்பிடத்தக்கது.
விசாரணையைக் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கவில்லையெனில் ”கட்டாய ஜாமீன்” – உச்ச நீதிமன்றம்
2017 ஆம் ஆண்டில், முசாபர்நகரைச் சேர்ந்த 18 வயதான ஜாகிர் அலி தியாகி, உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத்துக்கு எதிரான கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ததற்காகக் காவல்துறையினரால் 66ஏ பிரிவில் கைது செய்யப்பட்டார் என லைவ் லா கூறியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 66ஏ பிரிவில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்த இரண்டு காவலர்களுக்குக் கர்நாடக உயர் நீதிமன்றம் ரூ.10,000 அபராதம் விதித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ள ஒரு சட்டத்தின் கீழ் கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் எனப் பல்வேறு மாநிலங்களில் பலர் கைது செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.