திருமணத்திற்காகவோ அல்லது பலவந்தமாகவோ மதமாற்றம் செய்தால், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் உத்தரப்பிரதேச பாஜக அரசின் சட்டத்திற்கு அம்மாநில ஆளுநர் இன்று (நவம்பர் 28) ஒப்புதல் அளித்துள்ளார்.
இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஆண்கள், இந்துப் பெண்களைக் காதல் என்ற பெயரில் திருமணம் முடித்து மத மாற்றம் செய்கிறார்கள் என்றும், இந்து மதத்தைச் சிறுபான்மைச் சமூகமாக மாற்றி வருகிறார்கள் என்றும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “இந்துப் பெண்களைப் பாதுகாக்க, ‘லவ் ஜிகாது’க்கு எதிராகச் சட்டம் இயற்றப்படும்.” என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியிருந்தார். இதுதொடர்பாக அவசரச் சட்டத்தை உருவாக்க அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டிருந்தார்.
`லவ் ஜிகாத்’ இருக்கு ஆனா இல்ல : சிறப்பு விசாரணைக் குழு கூறுவது என்ன?
அதன்படி, மாநில சட்ட கமிஷன் புதிய மசோதாவைத் தயாரித்து அரசுக்கு அனுப்பியது. இதன் அடிப்படையில் திருமணத்திற்காகக் கட்டாய மதமாற்றத்தைத் தடுக்கும் வகையிலான, அவசரச் சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
இந்தச் சட்டத்தின் படி, மதம் மாறி திருமணம் செய்துகொள்ள விரும்புவோர், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டரிடம் 60 நாட்கள் முன்பே தகவல் அளிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து, அவரின் அனுமதி கிடைத்தவுடன் திருமணம் செய்துகொள்ளலாம்.
அதை மீறி திருமணம் செய்துகொள்பவர்களுக்கு, ஆறு மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படும் என்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அதுபோன்று நடத்தப்படும் திருமணம் சட்டப்படி செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமணத்திற்காக மதம் மாறினால் 10 ஆண்டு சிறை – மத்திய பிரதேச அரசு முடிவு
மேலும், திருமணத்துக்காக மதம் மாறினாலும் மதம் மாறிய பெண் தன்னுடைய மதத்தை மாற்ற விரும்பினாலும், அது சட்டப்படி ஏற்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சிறுமியையோ அல்லது பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணையோ அல்லது பட்டியல் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணையோ, இந்தச் சட்டத்திற்குப் புறம்பாக மதம் மாற்றினால், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூபாய் 25,000 அபராதமும் விதிக்கப்படலாம்.
இந்நிலையில், இந்த அவசரச்சட்டத்துக்கு ஆளுநர் ஆனந்தி பென்படேல் இன்று (நவம்பர் 27) ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, திருமணத்திற்காகவோ அல்லது பலவந்தமாகவோ மதமாற்றம் செய்தால், அதிகப்பட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்று ‘தி இந்து’ குறிப்பிட்டுள்ளது.
“லவ் ஜிகாத்” சட்டங்களும் வன்முறை வெறுப்புப் பிரச்சாரமும் – ஒரு விரிவான பார்வை
உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் நகரில் உள்ள 22 காவல் நிலையங்களும் சந்தேகப்படும்படியான இந்து-முஸ்லிம் காதல் சம்பவங்கள் குறித்து தெரியப்படுத்த வேண்டும் என்று மாநில அரசால் வலியுறுத்தப்பட்டிருந்தன.
இதன் அடிப்படையில் 14 சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதன்மீது ’லவ் ஜிகாத்’ வழக்குகளை விசாரிக்க அமைத்துள்ள சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து, சிறப்பு விசரணைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அவற்றுள் 8 வழக்குகளில், இந்துப் பெண்கள் விருப்பத்துடன் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஆணை திருமணம் செய்துகொண்டுள்ளார்கள் அல்லது உறவில் இருந்துவருகிறார்கள்.” என்று கூறியுள்ளதாக தி வயர் சுட்டிக் காட்டியுள்ளது.
“லவ் ஜிகாத்” திற்கு எதிராகச் சட்டம் இயற்ற முடியாது : உ.பி., சட்டக் குழு தலைவர்
மேலும், “யோகி ஆதித்யநாத் முன்வைக்கும் `லவ் ஜிகாத்’ குற்றச்சாட்டு உண்மையில் பூதாகரமானது இல்லை.” என்று தெரிவித்துள்ளது.
ஆறு வழக்குகள் இன்னும் விசாரிக்கப்பட்டு வருகின்றன. ஒரு வழக்கில், போதிய ஆதாரங்கள் இல்லாததால் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.