Aran Sei

” பசு விஞ்ஞான ” தேர்வை எழுத மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் – யுஜிசி வலியுறுத்தல்

Image Credit : thehindu.com

“பசு விஞ்ஞான” தேர்வை எழுதும்படி பல்கலைக் கழகத்திலும், இணைப்பு கல்லூரிகளிலும் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்குமாறு பல்கலைக் கழக மானியக் குழு அனைத்து பல்கலைக் கழக துணை வேந்தர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது.

பிப்ரவரி 25-ம் தேதி மத்திய அரசின் “உள்நாட்டு பசு விஞ்ஞானம்” தேர்வு நடைபெறவுள்ளது என்று தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது. இந்தத் தேர்வில் பள்ளி, கல்லூரி மாணவர்களும், பிற குடிமக்களும் கலந்து கொள்ளலாம்.

இந்தத் தேர்வை, கால்நடை வளர்ப்பு அமைச்சகத்தின் கீழ் உருவாக்கப்பட்ட “ராஷ்ட்ரீய காமதேனு ஆயோக்” நடத்துகிறது. “நாட்டு பசுவின் பொருளாதார, விஞ்ஞான, சுற்றுச் சூழல், மருத்துவ, விவசாய, ஆன்மீக பொருத்தப்பாடு” பற்றிய தகவல்களை பரப்புவதற்காக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது என்று பல்கலைக் கழக மானியக் குழுவின் பிப்ரவரி 12 தேதியிட்ட கடிதம் கூறியுள்ளது.

இந்தத் தேர்வுக்காக படிப்பதற்கான புத்தகங்களில்,

  • இந்தியாவிலும், ரசியாவிலும் அணு உலைகளில் கதிர்வீச்சை தடுப்பதற்கு பசுவின் சாணி பயன்படுத்தப்படுகிறது என்றும்
  • பசு சாணி போபால் மக்களை நச்சுவாயு கசிவிலிருந்து பாதுகாக்க பயன்பட்டது என்றும்
  • பசு வதைக்கும் நிலநடுக்கத்துக்கும் தொடர்பு உள்ளது என்றும்
  • ஜெர்சி பசுக்கள் சோம்பலானவை, அவை மோசமான தரத்திலான பாலை தருகின்றன என்றும்
  • நாட்டுப் பசுக்களின் பாலில் சிறிதளவு தங்கம் இருப்பதால் அது மஞ்சளாக இருக்கிறது என்றும்

கூறப்பட்டிருந்ததாக தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.

இத்தகைய ஆதாரமற்ற கூற்றுக்கள் தொடர்பாக எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து ஆங்கில புத்தகங்களில் இந்தப் பகுதிகள் நீக்கப்பட்டு விட்டன. ஆனால், தமிழ், மலையாளம் உள்ளிட்ட பிற இந்திய மொழி புத்தகங்களில் இவை இன்னும் இருக்கின்றன.

திருத்தப்பட்ட ஆங்கில பதிப்பில் இப்போது மூன்று பிரிவுகள் உள்ளன

பசுவானது தூய்மை, யதார்த்தம், இருத்தல் ஆகியவற்றிக் காரணிகளை உள்ளடக்கியிருப்பதால், தெய்வீகம் பசுவின் உடற்கூறில் அடைபட்டுள்ளது என்றும், அவளது முகம் அப்பாவித்தனத்தை வெளிப்படுத்துகிறது, அவளது கண்கள் அமைதியையும், கொம்புகள் அரச தன்மையையும், அவளது காதுகள் புத்திசாலித்தனத்தையும் வெளிப்படுத்துகின்றன என்றும், அவளது மடி, பாலின் வடிவத்திலான அமிர்தத்தின் ஊற்று என்றும் முதல் பிரிவு தெரிவிக்கிறது.

இன்னொரு பிரிவில் பல்வேறு நாட்டு பசு இனங்களின் முக்கிய அம்சங்களை பட்டியலிடுகிறது. மூன்றாவது பிரிவு நாட்டு பசுவின் பால், நெய், தயிர், மூத்திரம், சாணி ஆகியவற்றை கலந்து செய்த பஞ்சகவ்யத்தின் பலன்களை பேசுகிறது என்று தி ஹிந்து செய்தி கூறுகிறது.

இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள, கார்னகி மெல்லன் பல்கலைக் கழகத்தின் டெப்பர் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் துறை பேராசிரியர், “இது பெரும் வேடிக்கையையும் விஞ்சியது மட்டுமில்லை, இது உண்மையில் ஆபத்தானது” என்று கூறியுள்ளார்.

“இது பசு வதைக்கும் நிலநடுக்கத்துக்கும் தொடர்பிருப்பதாகவும், பசுவின் சாணி அணுக்கரு கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பதாகவும் கூறுகிறது. இது உண்மையில் ஆபத்தானது” என்று அவர் கூறியுள்ளார்.

” பசு விஞ்ஞான ” தேர்வை எழுத மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் – யுஜிசி வலியுறுத்தல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்