ஒன்றிய அரசின் விவசாய சீர்திருத்த சட்டங்களுக்கு எதிராக, தலைநகர் டெல்லியை நோக்கிச் சென்று, கடந்த 7 நாட்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகளின் இந்தப் போராட்டம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ மற்றும் பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப்ரீத் கவுர் கில் ஆகியோர் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
காணொலி வாயிலாகக் குருநானக் ஜெயந்தி வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்ட கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ, “இந்தியாவில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் பற்றி வெளிவரும் செய்திகள் கவலையளிக்கும் விதமாக உள்ளது. உரிமைகளைப் பாதுகாக்க நடைபெறும் அமைதியான போராட்டத்திற்கு கனடா எப்போதும் ஆதரவளிக்கும்” எனக் கூறியுள்ளார்.
“உரையாடலின் முக்கியத்துவத்தை நாங்கள் நம்புகிறோம், அதனால்தான் விவசாயிகள் போராட்டம் குறித்து இந்திய அதிகாரிகளுடன் நேரடியாகப் பேசியுள்ளோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கனடா பிரதமரின் கருத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகள் போராட்டம் குறித்து கனடா நாட்டின் தலைவர் வெளியிட்டுள்ள தவறான தகவல்கள் குறித்து அறிந்து கொண்டாம். ஒரு ஜனநாயக நாட்டின் உள்விவகாரங்கள் பற்றிய இது போன்ற கருத்துக்கள் தேவையற்றவை. அரசியல் நோக்கங்களுக்காக நியாயமான உரையாடல்கள் திரித்துக் கூறப்படக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
ஜஸ்டீன் ட்ரூடோவை தொடர்ந்து பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப்ரீத் கவுர் கில்லும் விவசாயிகள் போராட்டம் குறித்து பேசியுள்ளார்.
“விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சர்ச்சைக்குரிய மசோதாக்களை எதிர்த்து அமைதியாகப் போராடிவருகின்றனர். ஆனால், அவர்களின் போராட்டத்தைத் தடுக்க நீர் பீரங்கிகள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன” என்று ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.