Aran Sei

மேற்கு வங்கம் – லெனின் சிலையை திறந்து வைத்த திரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏ

லெனின் சிலையை திறந்து வைத்த பிரதீப் சர்க்கார் - Image Credit : thestatesman.com

மேற்கு வங்காளத்தின் மேற்கு மெதினாப்பூர் மாவட்டத்தில் உள்ள கரக்பூர் நகரத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப் பேரவை உறுப்பினர் பிரதீப் சர்க்கார், மார்க்சிஸ்ட் தலைவர் லெனின் சிலையை திறந்த வைத்து மாலையிட்டு மரியாதை செய்துள்ளார் என்று தி ஸ்டேட்ஸ்மன் செய்தி தெரிவிக்கிறது.

கரக்பூரின் 20-வது வட்டத்தில் உள்ள லெனின் பூங்காவில் இந்த நிகழ்வு செவ்வாய்க் கிழமை நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

லெனின் பூங்கா, 1970-களில் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தார்த்த சங்கர் ரே ஆட்சியில் இருந்த போது உருவாக்கப்பட்டது என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்க அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களினால் இந்த பூங்கா புறக்கணிக்கப்பட்டு சிதிலமடைந்து கிடந்ததாகவும், குடிமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, கரக்பூர் நகராட்சி அதிகாரிகள் பூங்காவை புதுப்பித்து புதிய லெனின் சிலையை நிறுவ முடிவு செய்துள்ளனர்.

“லெனினை எந்த ஒரு ஒற்றைக் கட்சியுடனும் தொடர்புடையவராக பார்க்கக் கூடாது. உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்கு அவர் ஒரு வழிகாட்டி.” என்று பிரதீப் சர்க்கார் கூறியுள்ளார்.

“எங்கள் கட்சி கட்சிசார் அரசியலைத் தாண்டி செயல்படுகிறது. அதனால்தான் நாங்கள் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களையும் அழைத்துள்ளோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

2011-ல் மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட் கூட்டணியை தோற்கடித்து ஆட்சியைப் பிடித்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மே தினத்தையும் கொண்டாடி வருவது தெரிந்ததே என்று தி ஸ்டேட்ஸ்மன் குறிப்பிடுகிறது.

திரிணாமூல் காங்கிரசின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், மேற்கு வங்காளத்தை ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் மாநிலம் முழுவதும் லெனின் சிலைகளை அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.

தங்களது சித்தாந்தங்களையும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும் மறந்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்திருக்கின்றன என்று உள்ளூர் பாஜக தலைவர்கள் கண்டனம் செய்துள்ளதாக தி ஸ்டேட்ஸ்மன் செய்தி தெரிவிக்கிறது.

மேற்கு வங்கம் – லெனின் சிலையை திறந்து வைத்த திரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏ

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்